அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் அண்ணாமலை வெளியிட்டார். திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை அண்ணாமலை கடந்த மாதம் வெளியிட்டார்.
அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.