“புதிய தலைமை செயலாளரை நியமிக்க வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதை தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய தலைமை செயலாளரை நியமிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசிய விவரம் பின்வருமாறு:
கேள்வி: தலைமைச் செயலாளர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பது பற்றி?
ஸ்டாலின்: ஏற்கனவே இது குறித்து விவரமாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஒரு அறிக்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சனையை பொறுத்த வரையில், தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக தலைமைச் செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும்; அல்லது முதலமைச்சரே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, புதிய தலைமை செயலாளரை நியமிப்பது அரசின் கடமை முக்கியமாக முதலமைச்சரின் கடமை.
அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்சனை என்பது கடந்த 5 வருடமாக அதிமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கின்ற மிகப் பெரிய முறைகேடு, ஊழல் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். இது குறித்து பல முறை தி.மு.கழகம் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கிற தலைவர்களெல்லாம் தங்களுடைய விமர்சனத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கரூர் தொகுதியிலே அன்புநாதன் வீட்டிலே நடந்த ரெய்டு, அதையொட்டி அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த ரெய்டு, சென்னை மாநகர மேயராக இருந்த சைதை துரைசாமி இல்லத்தில் நடந்த ரெய்டு, இப்படி தொடர்ந்து வாடிக்கையாக இந்த ஆட்சியிலே நடந்து கொண்டிருக்கிறது.
அதன் உச்சக்கட்டமாக தலைமை செயலாளரின் இல்லத்தில், அவர் சம்பந்தப்பட்டிருக்கும் இடங்களில் ரெய்டு நடந்திருக்கிறது. தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இது சம்பந்தமாக உண்மை நிலை என்ன என்பதை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நல்ல விளக்கத்தை தர வேண்டும். நான் மட்டுமல்ல, இந்த நாடே அதற்காக காத்திருக்கிறது.
கேள்வி: மம்தா பானர்ஜி மாறுபட்ட கருத்து சொல்கிறார். மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக சொல்லியிருக்கிறாரே?
ஸ்டாலின்: மம்தா பானர்ஜி டெல்லியில் நடந்த ரெய்டு பற்றி பேசியிருக்கிறார். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இங்கு தொடர்ச்சியாக ரெய்டு நடைபெற்று வருகிறது. அதைத்தான் நான் பேசி வருகிறேன்.