“நடிகை ஸ்ரீதேவியின் மறைவு வேதனை அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீதேவி என்றும், அவரின் மறைவு செய்தி வேதனை அளிப்பதாகவும் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை நொறுக்குவதாகவும் இருக்கிறது. ‘மூன்றாம் பிறை’, ‘லாம்ஹே’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு மற்ற நடிகர்களுக்கு உந்துதலாக அமைந்தது. அவர் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது திரையுலக வாழ்க்கை நெடியது. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பு திறமையை வெளிப் படுத்தி இருந்தார். ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும் லதா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளும், பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குனர்களும், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து போன்றோரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.