கருணாநிதி உடல்நிலைப் பின்னடைவு சீராகுமா? மருத்துவர்கள் 24 மணி நேரம் கெடு
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் என்றொரு தகவல் இன்று (06-08-2018) மதியம் பரவியதைத் தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை காவேரி மருத்துவமனையின் உள்ளே கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும், மருத்துவமனைக்கு வெளியே ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் சார்பில் இன்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ”முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயதுமூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.
மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, கருணாநிதி தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவமனை அறிக்கை இருந்ததால், அங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் அதிர்ச்சியும் கண்ணிருமாய், “எழுந்து வா தலைவா, கோபாலபுரம் போகலாம் எழுந்து வா” என்று தொடர் முழக்கம் எழுப்பியது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.