மிஷன் சாப்டர் 1 – விமர்சனம்
நடிப்பு: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் மற்றும் பலர்
இயக்கம்: விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சந்தீப் கே.விஜய்
படத்தொகுப்பு: ஆண்டனி
தயாரிப்பு: ’லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் அல்லிராஜா, எம்.ராஜசேகர், எஸ்.ஸ்வாதி, சூர்யா வம்சி பிரசாத், கோத்தா, ஜீவன் கோத்தா
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)
மனைவியை இழந்த குணசேகரன் (அருண் விஜய்), தனது மகள் சனாவுடன் (பேபி இயல்) ஒற்றை பெற்றோராக (Single Parent) வாழ்ந்து வருகிறார். மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சனாவுக்கு தலையில் உடனடியாக லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவளை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் அறிவுரை கூற, சிரமப்பட்டு ஹவாலா வழியில் பண பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்துகொண்டு, மகளுடன் லண்டன் செல்கிறார் குணசேகரன்.
லண்டனில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சனாவை சேர்க்கிறார். அங்கு பணிபுரியும் மலையாள நர்ஸ் ( நிமிஷா சஜயன்), அவர்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்து உதவிகள் செய்கிறார். சனாவின் அறுவை சிகிச்சைக்கான தேதியும், கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பஸ்ஸில் பயணிக்கும் குணசேகரனின் மணிபர்ஸை திருடர்கள் திடீரென அபகரிக்க முயல, அவர்களை தடுப்பதற்காக அவர் தாக்குகிறார். அவரை தடுக்க முயலும் காவல் துறையினரையும் உதைக்கிறார். இந்த கைகலப்பு பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்க, அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைச்சாலையின் பெண் அதிகாரியான ஜெயிலரிடம் (எமி ஜாக்சன்), குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கான கட்டணம் செலுத்தாவிட்டால் தன் மகளைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலையை எடுத்துச் சொல்லி, தான் வெளியே போக வேண்டியதன் அவசியத்தைப் புரிய வைக்க முயற்சி செய்கிறார். பலன் இல்லை.
இதற்கிடையே, அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று தீவிரவாதிகளை தப்பிக்க வைப்பதற்காக தீவிரவாதக் குழுவின் தலைவன் உமர் ஹாத்ரி (பரத் போபண்ணா) மிகப் பெரிய சதித் திட்டம் தீட்டி செயல்படுத்துகிறான். இதனால், சிறைச்சாலையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அங்கிருந்து தப்பியோடும் முயற்சியில் ஈடுபட, அவர்கள் அனைவரையும் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தும் குணசேகரன், அந்த மூன்று தீவிரவாதிகளையும் தப்பிக்க விடாமல் செய்துவிடுகிறார்.
குணசேகரனின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடையும் தீவிரவாதக் குழுவின் தலைவன் உமர் ஹாத்ரி, எப்படியாவது அந்த மூன்று தீவிரவாதிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்று தொடர் முயற்சியில் இறங்க, தான் இருக்கும் வரை அது நடக்காது என்று கூறி களத்தில் நிற்கிறார் குணசேகரன்.
உண்மையில் குணசேகரன் யார்? அவருக்கும் இந்த தீவிரவாத குழுவுக்கும் என்ன சம்பந்தம்? உயிருக்குப் போராடும் அவரது மகள் சனாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததா, இல்லையா? சனா உயிர் பிழைத்தாளா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு ஆக்ஷனாகவும், எமோஷனாகவும் விடை அளிக்கிறது ‘மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் குணசேகரன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். முதலில், மகளின் உயிரை காப்பாற்ற போராடும் ஓர் அன்பான அப்பாவாக நெகிழ்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கும் அவர், லண்டன் சிறைச்சாலையில் அதிரடி ஆக்ஷனில் இறங்கும்போது நெருப்பாக மாறி பொறி பறக்க வைத்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் கம்பீரமாகத் தோன்றி மிடுக்கான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் சிரத்தையுடன் மெனக்கெட்டிருப்பது வெளிப்பட்டிருக்கிறது; அதற்கான பலனும் கிடைத்திருக்கிறது. கீப் இட் அப்.
‘லியோ’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான பேபி இயல், இந்த படத்தில் நாயகனின் மகள் சனாவாக நடித்திருக்கிறார். முக பாவனைகளை அழகிய வசன உச்சரிப்புடன் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவைப் பிரிந்து தவிப்பது, அப்பாவைப் பார்க்க ஏங்குவது போன்ற காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார்.
எமி ஜாக்சன் ரொமாண்டிக் ஹீரோயினாக இல்லாமல், லண்டன் சிறைச்சாலையின் ஜெயிலராக வருகிறார். ஓரிரு அதிரடிக் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் சும்மா தேமே என விழித்துக்கொண்டிருக்கிறார்.
லண்டன் மருத்துவமனையின் மலையாள நர்ஸாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அப்பாவை பிரிந்து தவிக்கும் சிறுமி சனாவைக் கடத்த முயலும் தீவிரவாதிகளிடமிருந்து அவளைக் காப்பாற்ற போராடுகையில் துடிப்பான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்.
தீவிரவாதக் குழுவின் தலைவன் உமர் ஹாத்ரியாக வரும் பரத் போபண்ணா, பரம்வீர் சிங் என்ற சர்தார் வேடத்தில் லண்டன் சிறை கைதியாக வரும் அபி ஹாசன், லண்டன் மருத்துவமனை வார்டு பாயாக வரும் விராஜ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அரதப் பழசான கதைக்கருவையும், பார்த்து சலித்த கதாபாத்திரங்களையும் வைத்து, கொஞ்சம் சென்டிமெண்ட் – நிறைய ஆக்ஷன் கலந்து திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் செல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே சிறைச்சாலைக்குள் நடப்பது போல் இருந்தபோதிலும், அது உறுத்தாத வகையில் தொய்வில்லாமலும், போரடிக்காமலும் கொண்டு போயிருக்கிறார். என்றாலும், கதை – திரைக்கதை விஷயங்களில் கொஞ்சம் அப்டேட் ஆகுங்க, மிஸ்டர் விஜய்!
சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தை மெருகூட்ட உதவியிருக்கிறது.
’மிஷன் சாப்டர் 1’ – லாஜிக் பற்றி கவலைப்படாமல் அதிரடி ஆக்ஷன் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு செம விருந்து!