மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி – விமர்சனம்
நடிப்பு: அனுஷ்கா ஷெட்டி, நவீன் பொலிஷெட்டி, நாசர், ஜெயசுதா, முரளி சர்மா, துளசி மற்றும் பலர்
இயக்கம்: மகேஷ் பாபு.பி
ஒளிப்பதிவு: நிரவ் ஷா
படத்தொகுப்பு: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்
இசை: ரதன்
தயாரிப்பு: ‘யுவி கிரியேஷன்ஸ்’ வம்சி & புரமோத்
வெளியீடு: ’ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல் ராஜா
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
ஒத்த வயதுடைய நண்பர்கள், குழுவாகப் போய் ஜாலியாகப் பார்த்துவிட்டு சந்தோஷமாக திரும்புவதற்கு உகந்த திரைப்படம் ஒன்றை சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், தயக்கமில்லாமல் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தை தாராளமாக பரிந்துரை செய்யலாம். அந்த அளவுக்கு புதுசாக, நகைச்சுவையாக, சிந்திக்கத் தூண்டுவதாக, சொல்லிச் சொல்லி சிரிக்கத் தக்கதாக இருக்கிறது இந்த திரைப்படம்.
லண்டனில், புகழ் பெற்ற நட்சத்திர சமையல் கலைஞராகத் திகழ்பவர் அன்விதா ரவாலி ஷெட்டி (அனுஷ்கா ஷெட்டி). ஒற்றை பெற்றோரான (Single Parent) அம்மாவினால் (ஜெயசுதாவினால்) வளர்த்து ஆளாக்கப்பட்டவர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட அன்விதாவின் அம்மா, தனது இறுதி நாட்களை இந்தியாவில் கழிக்க விரும்புவதால், தாயும் மகளும் இந்தியாவுக்கு வருகிறார்கள். ”எனக்குத் துணையாக இத்தனை நாள் நீ இருந்தே. இனிமேல் உனக்கு ஒரு துணையைத் தேடிக் கொள்’ என சொல்லிவிட்டு அம்மா இறந்துவிடுகிறார்.
காதலித்துத் திருமணம் செய்தபோதிலும் தனது அம்மாவை ஏமாற்றிவிட்டு அப்பா (நாசர்) பிரிந்து சென்றுவிட்டதால், காதலின் மீதும் திருமணத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத அன்விதா, தன் தனிமையைப் போக்க, திருமணம் செய்யாமலேயே, ஒரு ஆணின் உயிரணு மூலம் செயற்கை கருவுறுதல் மருத்துவ தொழில்நுட்பம் வழியாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்.
இதற்கு தகுதியான சிறந்த மரபணு கொண்ட கொடையாளரை (Donar-ஐ) தேடும் அன்விதாவுக்கு, அவரைவிட வயதில் குறைந்த ’ஸ்டாண்டப் காமெடியன்’ சித்து பொலிஷெட்டி (நவீன் பொலிஷெட்டி) அறிமுகமாகிறார். ஆரம்பத்திலேயே உண்மையைச் சொல்லாமல் பழகும் அன்விதா மீது சித்து காதல் வயப்படுகிறார். ஆனால், அன்விதா தன்னிடம் பழகுவது ‘உயிரணு கொடை’க்காக மட்டும் தான் என்பது தெரிய வரும்போது அதிர்ச்சி அடைகிறார்.
அன்விதாவின் நோக்கம் நிறைவேறியதா? அல்லது சித்துவின் காதல் கைகூடியதா? என்பதே ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
முதலில் பாராட்டப்பட வேண்டியவர் அன்விதாவாக நடித்திருக்கும் அனுஷ்கா தான். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவர், தான் பெரிய நட்சத்திரம் என்று எண்ணாமல், ஹீரோ யார் என்று பார்க்காமல், நாயகியை முதன்மைப்படுத்தும் படமா என்று தேடாமல், கதை தான் முக்கியம் என்று இந்த படத்தின் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கு பாராட்டுகள். கலவையான எமோஷன்களைக் கொண்ட தனது கதாபாத்திரத்தை லாவகமாக கையாண்டு இருக்கிறார். தனிமையின் வலியை தன் அனுபவ நடிப்பால் அமைதியாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நாயகன் சித்துவாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, ஒரு ஸ்டாண்டப் காமெடி கலைஞனாகவும், தற்கால இளைஞனின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறார். படம் முழுக்க துறுதுறுவென சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். பக்கத்துவீட்டுப் பையன் போல் இருக்கும் அவர் காமெடி, காதல், எமோஷன் என அனைத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, அனுஷ்காவுக்கு ஈடு கொடுத்திருக்கிறார்.
அனுஷ்காவின் அம்மாவாக வரும் ஜெயசுதா, அப்பாவாக வரும் நாசர், தோழியாக வரும் பெண், சித்துவின் அம்மாவாக வரும் துளசி, அப்பாவாக வரும் முரளி சர்மா ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுத்து இயக்கியதற்காக அறிமுக இயக்குனர் மகேஷ் பாபுவை பாராட்டலாம். சற்று விலகினாலும் ஆபாசமாக மாறிவிடக்கூடிய கதையை மிக கவனமாகக் கையாண்டு, துளியும் விரசம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கத் தக்க காமெடிப் படமாக இதை படைத்தளித்திருக்கிறார் இயக்குனர்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு குளுமை. ரதனின் பாடலிசையும், பின்னணி இசையும் அருமை.
’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ – ஆரம்பத்தில் சொன்னது போல, ‘ஒத்த வயதுடைய நண்பர்கள், குழுவாகப் போய் ஜாலியாகப் பார்த்துவிட்டு சந்தோஷமாக திரும்புவதற்கு உகந்த திரைப்படம் ஒன்றை சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், தயக்கமில்லாமல் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தை தாராளமாக பரிந்துரை செய்யலாம்!’