மிரட்டும் இருட்டு – விமர்சனம்
ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை. நாலே நாலு முக்கிய கதாபாத்திரங்கள். 88 நிமிடங்களே ஓடக்கூடிய படம். ஆனால் திகிலில், ரசிகர்களின் முதுகுத்தண்டெல்லாம் சில்லிட்டுப்போகச் செய்யும் பயங்கர மிரட்டல். இதுதான் ‘Don’t Breathe’ என்ற ஆங்கிலப்படம். உலகம் முழுவதும் வரவேற்பையும், வசூலையும் அள்ளியிருக்கும் இந்த ஆங்கிலப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து ‘மிரட்டும் இருட்டு’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்.
திருடுவதையே தொழிலாக கொண்ட டேனியல், டைலன், ஜானே லெவி ஆகிய மூன்று பேரும் ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத ஒரு ஏரியாவில் தங்கியிருக்கும் கண் தெரியாதவரின் வீட்டில் திருடச் செல்கிறார்கள். அந்த வீட்டுக்குள் நுழையும் அவர்கள் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு அந்த வீட்டுக்குள் என்ன நடந்தது? அவர்களை மிரட்டும் சக்தி எது? அவர்கள் திட்டமிட்டபடி கொள்ளையடித்து திரும்பினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
கண் தெரியாதவராக நடித்திருக்கும் ஸ்டீபன் லாங் தான் இப்படத்தின் மிகப் பெரிய பலமே. முன்னாள் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் வரும் அவர், முரட்டுத்தனமான உடம்பு, மிரட்டும் கண்கள் என பார்வையாளர்களை ரொம்பவுமே பயமுறுத்துகிறார். கண் தெரியாதவராக இருந்தாலும், அந்த வீட்டுக்குள் ஒவ்வொரு இடத்தையும் அவ்வளவு வேகத்தில் கடக்கும்போது நம்மையே வியக்க வைக்கிறார். கடைசி காட்சிகளில் அவரது நியாயமான கோரிக்கை நம்மையும் கண்கலங்க வைக்கிறது.
படத்தில் இவர் ஒருபக்கம் மிரட்டிக்கொண்டிருக்கும்போது, மறுபக்கம் இவர் வளர்க்கும் முரட்டுத்தனமான நாயும் நம்மை மிரட்டுகிறது. நண்பர்களாக வரும் டேனியல், டைலன், ஜானே லெவி ஆகிய மூன்று பேரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் கதை முழுக்க ஒரே வீட்டுக்குள் நடந்தாலும், காட்சிக்கு காட்சி திகில் வைத்து பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் பீடே ஆல்வரிஷ். கண் தெரியாத ஒருவரின் நடவடிக்கைகளை இவ்வளவு அழகாகவும், மிரட்டும் விதமாகவும் சித்தரித்திருப்பது சிறப்பு. அந்த வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக சிந்தித்து, அற்புதமாக படமாக்கியிருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ரோக் பனோசின் பின்னணி இசை. காட்சியின் தேவைக்கேற்றபடி பின்னணி இசையை கொடுத்து, அசத்தலான திரில்லிங்கை கொடுத்திருக்கிறார். மேலும், பெட்ரோ லூக்கின் ஒளிப்பதிவில் வீட்டுக்குள் வேகமாக நகரும் காட்சிகள் எல்லாம் கதையோட்டத்திற்கு கைகொடுத்திருக்கின்றன.
அடுத்து என்ன நடக்கும், அடுத்தது என்ன நடக்கும் என்பது போன்ற திகில் காட்சிகளே படத்தில் அதிகம். திகிலை எதிர்பார்த்து செல்கிறவர்களுக்கு இப்படம் கண்டிப்பாக புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மட்டும் உறுதி. டைட் ஸ்கிரிப்ட் மற்றும் மேக்கிங் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த படம்.
‘மிரட்டும் இருட்டு’ – வரவேற்புக்கு உரிய மிரட்டல்!