மின்மினி – விமர்சனம்
நடிப்பு: பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஹலிதா ஷமீம்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
படத்தொகுப்பு: ரேமாண்ட் டெரிக் கிரஸ்டா
இசை: கதிஜா ரஹ்மான்
தயாரிப்பு: மனோஜ் பரமஹம்சா, ஆர்.முரளி கிருஷ்ணன்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
ஊட்டி கான்வெண்ட்டில் விடுதியில் தங்கிப் படிக்கும் விடலைப்பருவ மாணவர் பாரி முகிலன் (கௌரவ் காளை). குறும்பும் சுறுசுறுப்பும் மிகுந்த இவர் மிகச் சிறந்த கால்பந்தாட்டக்காரராகத் திகழ்கிறார். கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை வசப்படுத்தி, பரிசுகளையும் பெருமைகளையும் பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்ப்பதால், இவரை செல்லப்பிள்ளையாகப் பாவிக்கும் ஆசிரியர்கள், இவர் செய்யும் சேட்டைகளையும் குறும்புத்தனங்களையும் கண்டிப்பதில்லை. என்றாவது இமயமலைத் தொடரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி மகிழ வேண்டும் என்பது இவரது கனவு.
பாரி முகிலன் படிக்கும் அதே பள்ளியில், அதே வகுப்பில் புதிதாக வந்து சேருகிறார் மாணவர் சபரி கார்த்திகேயன் (பிரவீன் கிஷோர்). செஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் இவருக்கு, எதிர்காலத்தில் பெரிய ஓவியராகப் புகழ் பெற வேண்டும் என்பது கனவு. இதனால் இப்போதிருந்தே ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார். இவரை அடிக்கடி சீண்டி செல்லமாக தொந்தரவு செய்யும் பாரி, இவருடன் நட்புடன் இருக்கவும் உள்ளூர விரும்புகிறார். இதை புரிந்துகொள்ள இயலாத சபரி, பாரியிடமிருந்து விலகியே இருக்கிறார்.
ஒரு நாள் மாணவர்கள் பயணிக்கும் பள்ளிக்கூடப் பேருந்து, கோர விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிகிறது. பாரி உள்ளிட்ட மாணவர்கள் அவசர அவசரமாக பேருந்திலிருந்து இறங்கி உயிர் தப்புகிறார்கள். ஆனால் சபரி மட்டும் இறங்க இயலாமல், நெருப்புக்கிடையில் சிக்கித் தவிக்கிறார். இதைப் பார்க்கும் பாரி, துணிச்சலாக பேருந்துக்குள் ஏறி, சபரியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து வெளியே போட்டு தானும் விழுகிறார். இந்நிகழ்வில் சபரியைக் காப்பாற்றிவிடும் பாரி, துர்நிகழ்வாக தன் உயிரை இழந்துவிடுகிறார்.
தன்னைக் காப்பாற்ற பாரி உயிரைக் கொடுத்துள்ளதை உணரும் சபரி, பாரி தன்னுடன் நட்பு பாராட்ட முயன்றதையும் அறிந்து, வேதனையும் குற்றவுணர்வும் கொண்டு மனதளவில் பாதிக்கப்படுகிறார். விளைவாக, தனக்குப் பிடித்த செஸ் விளையாட்டு, ஓவியம் தீட்டுதல் ஆகியவற்றை உதறித் தள்ளிவிட்டு, பாரியின் விருப்பங்களை, கனவுகளைச் சுமந்தபடி பாரி வாழ்க்கையை வாழ முயலுகிறார் சபரி.
மரணமடைந்த பாரியின் உடலுறுப்பு தானத்தால் அவரது இதயத்தை தானமாகப் பெற்று, உயிர் பிழைத்து, புது வாழ்க்கையைத் தொடங்கும் பிரவீனா (எஸ்தர் அனில்), பாரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது ஆசைகளை, கனவுகளைப் பூர்த்தி செய்ய விரும்புகிறார். அந்த ஆசைகளை, கனவுகளைத் தெரிந்துகொள்வதற்காக பாரி படித்த அதே ஊட்டி பள்ளியில், அதே வகுப்பில் மாணவியாக சேருகிறார். அங்கு பாரியின் மேனரிசம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களோடும் பாரியின் வாழ்க்கையை வாழ முயன்றுகொண்டிருக்கும் சபரியைப் பார்த்து திகைக்கிறார். சபரியின் குற்றவுணர்வு பற்றியும் தெரிந்து கொள்கிறார்.
சில ஆண்டுகளுக்குப்பின், இளைஞராக வளர்ந்திருக்கும் சபரி, பாரியின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக, இரு சக்கர வாகனத்தில் இமயமலையில் பயணம் செய்கிறார். அதுபோல், பாரியின் கனவை நிறைவேற்றும் நோக்கத்துடன் இளைஞி பர்வீனாவும் இரு சக்கர வாகனத்தில் இமயமலையைச் சுற்றி வருகிறார். இமயமலையில் சபரியும், பர்வீனாவும் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பது ‘மின்மினி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
துடுக்குத்தனமான பாரி முகிலன் கதாபாத்திரத்தில் வரும் கௌரவ் காளை, ஆர்ப்பாட்டம் இல்லாத சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் வரும் பிரவீன் கிஷோர், மிதக்கும் மேகம் போல் குளிர்ச்சியான பிரவீனா கதாபாத்திரத்தில் வரும் எஸ்தர் அனில் ஆகிய மூன்று முக்கிய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்தை கவனமாக உள்வாங்கி, அதற்கு தேவையான இயல்பான நடிப்பை, குறையேதும் இல்லாமல் நிறைவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, படத்தின் பெரும்பகுதியை பிரவீன் கிஷோரும், எஸ்தர் அனிலும் ஆக்கிரமித்திருந்தாலும், அது குறையாகத் தெரியாத அளவுக்கு அவர்களது ரசனையான நடிப்பு அமைந்திருந்தது சிறப்பு.
‘பூவரசம் பீபீ’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலேய்’ ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கி, தன்னை தனித்துவமான இயக்குநர் என்று ஏற்கெனவே நிரூபித்துள்ள இயக்குநர் ஹலிதா ஷமீம், இந்த ‘மின்மினி’ திரைப்படத்தையும் அதுபோல் வித்தியாசமாக எழுதி இயக்கியுள்ளார். சிறு வயதில் அல்லது விடலைப் பருவத்தில், நம்மையும் அறியாமல் நிகழ்ந்துவிட்ட துர்சம்பவத்தால் ஏற்படும் குற்றவுணர்ச்சியை உள்ளுக்குள் வைத்து குமைந்து கொண்டிருக்காமல், அதை கடந்து வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என்ற அருமையான கருத்தை மையமாகக் கொண்டு இப்படக்கதையை அமைத்துள்ளார். இதற்காக, ஊட்டி கான்வெண்ட் காட்சிகளை படத்தின் முதல் பாதி எனவும், இமயமலை சுற்றுலா காட்சிகளை இரண்டாம் பாதி எனவும் பிரித்துக்கொண்டுள்ளார். நாயகன் – நாயகியின் விடலைப்பருவத்து பள்ளிக்கூட காட்சிகளை முதலில் படமாக்கிய இயக்குநர் ஹலிதா ஷமீம், அவர்கள் வளர்ந்து இளைஞர்கள் ஆகட்டும் என்று எட்டு ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்து, அதன்பின் அவர்களையே வைத்து, படத்தின் இரண்டாம் பாகமான இமயமலை சுற்றுலா காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத இந்த புதுமையை முயன்று செய்து, அதில் வெற்றியும் பெற்றிருப்பது பெருமைக்குரியது. பாராட்டத் தக்கது.
ஊட்டியின் அழகையும், இமயமலைத் தொடரின் எழிலையும் தன் காமிராவில் அள்ளி வந்து பார்வையாளர்களுக்குத் திகட்டத் திகட்ட பருகக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமகம்ஸா. குறிப்பாக, வர்ணிக்கவே வார்த்தைகள் இல்லாத லடாக்கின் பேரழகினூடே நாயகன் – நாயகி பைக்கில் பயணிக்கும் காட்சிகள் புல்லரிக்கச் செய்யும் வகையில் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
ரேமாண்ட் டெரிக் கிரஸ்டாவின் படத்தொகுப்பு, தெளிந்த நீரோடை போல ஆர்ப்பாட்டம் இல்லாமல், அதே நேரத்தில் சுவாரஸ்யமாக படம் நகர்ந்து செல்ல உதவியிருக்கிறது.
’மின்மினி’ – வழக்கமான மசாலா படங்களுக்கு மாறாக, தரமான ஃபீல்குட் திரைப்படம் பார்க்க விழையும் திரைப் பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.