அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவியை பறித்த தலித் பெண்ணின் கண்ணீர்!

போலீஸ் வாகனத்தை தாக்கிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழந்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் தொடக்கப்புள்ளி ஓர் ஏழை தலித் பெண்ணின் கண்ணீரில் கலந்துள்ளது.

அதன் பின்னணியை அறிய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள ஜீ.மங்களம் கிராமத்துக்கு சென்றிருந்தோம். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை அங்கிருந்த பெரியவர்கள் தங்கள் பெயரை மறைத்துக்கொண்டு இந்து தமிழ் நாளிதழிடம் பகிர்ந்துகொண்டனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழியினரும் கணிசமாக வாழும் ஜி.மங்களத்தில் சுமார் 350 குடும்பங்கள் உள்ளன. இதில் ரெட்டி வகுப்பை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நிலையில், பட்டியல் வகுப்பை சேர்ந்த 100 குடும்பங்களும் வசிக்கின்றன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டுள்ள கோவிந்த ரெட்டி அப்போது பாஜக பிரமுகராக இருந்தார். அவருடன் தற்போது பதவியிழந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த கோவிந்த ரெட்டிக்கு, உள்ளூர் சாராய வியாபாரிகளுடன் தொடர்பு இருந்தது. இந்நிலையில் பட்டியல் வகுப்பை சேர்ந்த முனியப்பன் என்பவர் கோவிந்த ரெட்டியின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். அவர் தோட்ட வேலையை கைவிட்டு, வெளியூரில் இருந்து சாராயம் வாங்கி விற்கத் தொடங்கினார். இதற்கு கோவிந்த ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தாலும் முனியப்பன் சாராய வியாபாரத்தை கைவிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்த ரெட்டி ஒரு கட்டத்தில் தனது உறவினர்களுடன் சேர்ந்து முனியப்பனின் வீட்டுக்குள் புகுந்து, அவரது மகள் சரஸ்வதியை பிடித்து வந்து ம‌ரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளார். சாதி ரீதியாக இழிவாக பேசியுள்ளார். கண்ணீருடனும், ரத்தக் காயத்துடனும் பாகலூர் காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் அளித்தார். இதையடுத்து எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டம் பாய்ந்தது.

இதனால் போலீஸ் மீது கோபமடைந்த கோவிந்த ரெட்டி தரப்பு, போலீஸார் சாராய வியாபாரிக்கு துணைப் போவதாக 30.6.1998 அன்று பாகலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 5 போலீஸ் காவலர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டனர். போலீஸ் ஜீப் உள்ளிட்ட பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன. இதில் போலீஸார் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் 108 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக வழக்கு நடந்தது.

இதனிடையே பாலகிருஷ்ண ரெட்டி பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து கடந்த 2016-ல் அமைச்சர் ஆனார். இந்நிலையில் வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, வேகமெடுத்தது. உயிருடன் இருந்த 81 பேர் மீதான வழக்கில் 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

இதில் முதல் குற்றவாளி கோவிந்த ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 12 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஓசூர் தொகுதி உருவாக்கப்பட்டு 64 ஆண்டுகளில் முதல் முறையாக அமைச்சர் பதவி பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை இழந்தார்.

இந்த வழக்கின் தொடக்கப்புள்ளியாக இருந்தது சரஸ்வதி எனும் அபலை பெண் தாக்கப்பட்டது தான். தலித் பெண்ணின் கண்ணீர்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து பழிவாங்கியுள்ளது.

சரஸ்வதி தற்போது உயிருடன் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார். இந்த தீர்ப்பு வெளியான நாளில் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் ஊரை காலி செய்துகொண்டு வெளியூர் சென்றுவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இரா.வினோத்

Courtesy: Tamil.thehindu.com