‘மிக மிக அவசரம்’ படத்திற்கு தானே முன்வந்து பாடல் எழுதிய சேரன்!
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும், சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளார்கள்.
‘புதிய கீதை’,’ கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ளார். பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.
‘மிக மிக அவசரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் ஜெகன்நாத் பேசும்போது, “ஒருநாள் சுரேஷ் காமாட்சியிடம் பேசும்போது இப்படி பெண் காவலர்கள் பற்றிய ஒரு கதை மனதில் உருவானதை அவரிடம் கூறினேன்.. அவருக்கு இந்த கதை பிடித்துப் போகவே நானே இயக்குகிறேன் என கூறினார்..
எனது குருநாதர் இயக்குனர் சேரனுடன் ‘ராமன் தேடிய சீதை’ படத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கடந்த 10 வருடங்களாக பேசாமல் இருந்தேன் அப்படிப்பட்ட சேரன் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு மிக ‘அருமையான கதை’ என வாழ்த்தியது மிகப் பெருமையாக இருக்கிறது..
இதற்கு முன்பு ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்கிற படத்தை நான் எடுத்தபோது அண்ணன் சீமான் என்னை அழைத்து திட்டினார்.. ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு மிகச் சரியான கதையை மிக நுட்பமாக உருவாக்கியுள்ளதாக பாராட்டினார்.. நான் எந்த கதை எழுதினாலும் அதன் முதல் உரிமை சுரேஷ் காமாட்சிக்கு தான்” என்றார்.
இயக்குனர் சேரன் பேசும்போது, “சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியே பேசுபவராக, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராக பார்க்கப்படுகிறார்.. ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. அவர் பேசும்போது நமக்கு தெரிவது ஒரு முகம்.. ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் மாறாக இருக்கிறார்.
இந்த படத்தை நான் பார்த்ததும் அவரிடம் நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினேன்.. காரணம் அடுத்தடுத்து அவர் இயக்க இருப்பதாக சொன்ன கதைகள் எல்லாம் அவ்வளவு வித்தியாசமானவை.. அவருடன் துணையாக இருக்கும் ஜெகன்நாத் என்னிடம் உதவியாளராக இருந்து, எனக்காக பத்து வருடங்கள் உழைத்தார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.. ஜெகன் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை.. வருத்தம் மட்டும் தான் இருந்தது.. அதுவும் போய்விட்டது..
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்ததும் அதில் இடம்பெற்றிருந்த ‘நல்லதொரு வீணை’ பாடல் மட்டும் புதிய கதையை கொஞ்சம் பழையதாக மாற்றுகிறது என மனதில் தோன்றியதை சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன்.. பின்னர் வீடு வந்தும்கூட அந்த படம் பற்றிய நினைவாகவே இருந்ததால் எனக்குள் ஒரு பாடல் தோன்றியது.. அதை உடனே எழுதி சுரேஷ் காமாட்சிக்கு அனுப்பினேன்.. அவரும் நன்றாக இருக்கிறது எனக் கூறி அந்த பாடலை படத்தில் இடம்பெற செய்து விட்டார்.. அனேகமாக அந்த பாடல் இப்போது நிலவிவரும் ‘மீ டூ’ பிரச்சனைக்கு மிகப்பொருத்தமான பாடலாக இருக்கும்.
இந்த படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத் தான் சொல்கிறார் என நினைத்துக்கொள்வேன்.. காரணம், கேரளாவில் இருந்து அடிக்கடி புது நாயகிகளை எனது படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தியது நான்தான்.. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான். குறும்படத்தில், ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள். ஆனால் ஒரு முகம் தெரியாத பெண்ணாக இருந்து உன் நடிப்பால் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்துவிட்டாய்.. உன் மீது பரிதாபம் வந்துவிட்டது.. அதுவே உனக்கும் இந்த படத்திற்கும் கிடைத்த வெற்றி.. உனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்.. கவலை வேண்டாம்” என கூறினார்