மைக்கேல் – விமர்சனம்

நடிப்பு: சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி (சிறப்பு தோற்றம்), திவ்யான்ஷா கவுசிக், கவுதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், வரலட்சுமி சரத்குமார் (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்

இயக்கம்: ரஞ்சித் ஜெயக்கொடி

ஒளிப்பதிவு: கிரண் கவுசிக்

படத்தொகுப்பு: ஆர்.சத்திய நாராயணன்

இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: பாரத் சவுத்ரி, புஷ்கர் ராம் மோகன் ராவ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (டீம் எய்ம்)

தன் அப்பாவைக் கொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தோடு மும்பை வருகிறான் 13வயது மைக்கேல் (சந்தீப் கிஷன்). மும்பையில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் குருநாத்தை கொலை தாக்குதலிலிருந்து  காப்பாற்றுகிறான். அதன்பின் குருநாத்தின் அரவணைப்பில் வளர்கிறான்;. பின்னர் இன்னொரு தாக்குதலிலிருந்தும் குருநாத்தை காப்பாற்றும் மைக்கேலுக்கு  பார் நடத்தும் உரிமையை ஒப்படைக்கும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவனாக மாறுகிறான். இதனால் குருநாத்தின் மகனுக்கு உள்ளுக்குள் பகை ஏற்படுகிறது, மைக்கேலை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறான். இந்த சமயத்தில் குருநாத்தை கொல்ல சதி திட்டம் தீட்டிய ஆறு பேரில்,  ஐந்து பேரை கொன்று விடும் குருநாத், ஆறாவது நபரான ரத்தனையும்,அவரது மகள் தீராவையும் (திவ்யான்ஷா) கொல்ல டெல்லிக்கு மைக்கேலை அனுப்புகிறார். டெல்லிக்கு செல்லும் மைக்கேல் அங்கே தீராவை பின் தொடர்ந்து செல்ல, நாளடைவில் காதலாக மாறுகிறது. ரத்தனையும், தீராவையும் கொல்லாமல் இருக்கும் மைக்கேலை போட்டு தள்ள குருநாத்தின் மகன் ஆவேசமாக புறப்பட்டு சென்று மைக்கேலை அடித்து துப்பாக்கியால் சுட்டு கடலில் தள்ளி விடுகிறான். அதன் பின் மைக்கேல் என்ன ஆனான்? உயிரோடு வந்து காதலி தீராவை காப்பாற்றினானா? குருநாத்திற்கும் மைக்கேலுக்கும் இருக்கும் உறவு என்ன? மைக்கேல் ஏன் குருநாத்திடம் வந்து சேர்ந்தான்? காதலியை கடத்திய குருநாத்தின் மகனை என்ன செய்தான்? என்பதே ‘மைக்கேல்’ படத்தின் மீதிக்கதை.

0a1b

ஆக்‌ஷன், ரொமான்ஸ் என இரண்டுக்கும் ஏற்ற ஹீரோவாக சந்தீப் கிஷன் வலம் வருகிறார். குறைவான வசனங்கள் பேசினாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுபவர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தன்னை பல இடங்களில் முன்னிலை படுத்துக்கொள்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் திவ்யான்ஷா கவுசிக், காதல் காட்சிகளில் தாராளம் காட்டியிருப்பவர், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கிறார்.

வில்லனாக மிரட்டும் இயக்குநர் கெளதம் மேனன், பொருத்தமான வேடத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.

கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரது கதாபாத்திரம் கவனம் பெறுவதோடு, அவர்கள் வரும் இடங்கள் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுக்கிறது.

கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டல். 90களில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைக்கு ஏற்றபடி வண்ணங்களை பயன்படுத்தி காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி, ஒரு கேங்ஸ்டர் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதையெல்லாம் வைத்து படத்தை கமர்சியலாக இயக்கியிருக்கிறார்.

வழக்கமான பாணியில் கதை சொல்லப்பட்டிருந்தாலும், கதாபாத்திரங்களை கையாண்ட விதம், மேக்கிங் ஆகியவற்றால் மற்ற கேங்க்ஸ்டர் படங்களில் இருந்து சற்று தனித்து நிற்கும் படம் ரசிக்கவும் வைக்கிறது.

‘மைக்கேல்’ – மிரட்டல்.