மேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது!

கோவை, மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனி அருகே, ‘சக்ரவர்த்தி துகில் மாளிகை’ என்ற துணிக்கடையின் அதிபர் சிவசுப்பிரமணியனின் சொகுசு பங்களா இருக்கிறது. சாதிவெறியரான அவர், தமது ஒன்றரை ஏக்கர் இட்த்தின் ஓர் எல்லையில், ஆதி திராவிடர் காலனிப் பகுதியை ஒட்டி, 80 அடி அகலம், 20 அடி உயரத்திற்கு, ராட்சத கருங்கற்களால் ‘சுற்றுச்சுவர்’ என்ற பெயரில் ‘தீண்டாமைச் சுவர்’ எழுப்பியுள்ளார்.

இந்த சுவர் கட்டப்படும்போதே ஆதி திராவிடர் காலனி மக்கள் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள். கருங்கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட இந்த சுவர் மீது பூச்சு வேலை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டதால், வருடக்கணக்கில் வெயில், மழை காரணமாக அந்த சுவர் உதிர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலை இந்த தீண்டாமைச் சுவர் இடிந்து,  அருகில் இருந்த வீடுகளின்மேல் விழுந்தது. இதில் தூக்கத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தைப் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான ‘தீண்டாமைச் சுவர்’ உரிமையாளர் சிவசுப்ரமணியனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூகநீதி இயக்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை. போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி, இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இந்நிலையில், சம்பவ இட்த்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வர இருப்பதால், அவர் மீது பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களை சற்று சமாதானப்படுத்தும் நோக்கத்திலும், ‘தீண்டாமைச் சுவர்’ உரிமையாளர் சிவசுப்ரமணியனை போலீசார் இன்று கைது செய்தனர். அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

.