மெரி கிறிஸ்துமஸ் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு, ராஜேஷ், பரி மகேஸ்வரி சர்மா, அஸ்வினி கல்சேகர் மற்றும் பலர்

இயக்கம்: ஸ்ரீராம் ராகவன்

பாடலிசை: பிரீத்தம்

பின்னணி இசை: டேனியல் பி.ஜார்ஜ்

ஒளிப்பதிவு: மது நீலகண்டன்

படத்தொகுப்பு: பூஜா லதா ஸ்ருதி

கலை இயக்கம்: மைத்ரி ஸ்ருதி

தயாரிப்பு: டிப்ஸ் பிலிம்ஸ் (பி) லிட், & மேச் பாக்ஸ் பிக்சர்ஸ் (பி) லிட்.

தயாரிப்பாளர்: ரமேஷ் தௌராணி,  சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

2018ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா – தபு நடிப்பில் வெளியாகி, அந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பாராட்டப்பட்ட படம் ‘அந்தாதூன்’. அப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் தான் இந்த ’மெரி கிறிஸ்துமஸ்’.

1960ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் டார்ட் எழுதிய கிரைம் திரில்லரான ‘எ பேர்ட் இன் எ கேஜ்’ என்ற பிரெஞ்சு நாவலைக் கொண்டு இப்படக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். ஏறத்தாழ கதாபாத்திரங்களின் பெயர்களும் கூட அதேதான். ஆனால், கதை நிகழும் நகரம் ”பாரிஸ்” என நாவலில் இருந்ததை, இந்த திரைப்படத்துக்காக “மும்பையாக பெயர் மாற்றப்படுவதற்கு முன்பு இருந்த பம்பாய்” என மாற்றியிருக்கிறார்.

0a1m

ஒரு கொலை வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு தன் வீட்டுக்கு வருகிறார் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி). இறந்துபோன தன் அம்மாவின் நினைவுகளால் சோகத்தில் ஆழ்கிறார். இரவு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட செல்கிறார். அது கிறிஸ்துமஸ் தினம் என்பதால், வழி நெடுக யார் யாரோ “மெரி கிறிஸ்துமஸ்” என வாழ்த்து சொல்கிறார்கள். ஹோட்டலில் மரியாவையும் (கத்ரீனா கைஃப்), அவரது 6 வயது மகளையும் சந்திக்கிறார். அவர்களுடன் நட்பாகும் ஆல்பர்ட், மரியாவிடம் தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறார். மூவரும் மரியாவின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு மரியா தன் மகளை படுக்கையில் தூங்க வைத்துவிட்டு வந்து, ஆல்பர்ட்டோடு சேர்ந்து மது அருந்துகிறார். இருவரும் நடனம் ஆடுகிறார்கள். போதைப் பொருளுக்கு அடிமையான தன் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னை மிகவும் துன்புறுத்துவதாக மரியா வேதனையுடன் கூறுகிறார். மீண்டும் வெளியே போகிறார்கள்.

பின்னர் மீண்டும் மரியாவின் வீட்டுக்கு வரும்போது, அங்கே மரியாவின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அதன் பிறகு இருவரும் என்ன செய்தார்கள்? மரியாவின் கணவரது மரணத்தில் இருக்கும் மர்மங்கள் என்ன? காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்படும் ஆல்பர்ட் என்ன முடிவு எடுத்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சில திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆல்பர்ட்டாக வரும் விஜய் சேதுபதி தனது யதார்த்தமான நடிப்பால், அசால்ட்டான உடல்மொழியால் மனதில் நிற்கிறார். நாயகியின் அழகை ரசித்தபடியே உடன் பயணிப்பது. நாயகிக்கு உதவுவது, நாயகியோடு சேர்ந்து நடனமாடுவது, குழந்தையிடம் பாசம் காட்டுவது என உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்சில் அவர் எடுக்கும் எதிர்பாராத முடிவால் மனதை கனக்க வைக்கிறார்.

நாயகி மரியாவாக வரும் கத்ரீனா கைஃப் அழகுப்பதுமையாக வசியம் செய்கிறார். கணவர் கொடுமையைச் சொல்லி அழும்போது அனுதாபம் அள்ளுகிறார்.  அவரது இன்னொரு முகம் அதிர்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

நாயகனின் பக்கத்து வீட்டுக்காரராக வரும் ராஜேஷ், போலீஸ் அதிகாரி தேவராஜாக வரும் சண்முகராஜன், போலீஸ் ஏட்டையா லட்சுமியாக வரும் ராதிகா சரத்குமார், ஃபிளாஷ்பேக்கில் நாயகனின் காதலி ரோஸியாக சிறப்புத் தோற்றத்தில் வரும் ராதிகா ஆப்தே, நாயகியின் மகளாக வரும் குழந்தை உள்ளிட்டோர் இயல்பாக நடித்துள்ளனர்.

பிரெஞ்சு நாவலை திரைப்படமாக மாற்றியதில் மேக்கிங் ரீதியாக இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் வெற்றி பெற்றுள்ளார். திரில்லர் கதையை சஸ்பென்ஸ், நகைச்சுவை, திருப்பங்களுடன் நகர்த்தி உள்ளார். படத்தில் ஆங்காங்கே சொல்லப்படும் விஷயங்கள் கிளைமாக்சில் ஒன்றாக வந்து இணைவதும், காதலை புதிய கோணத்தில் உயிரோட்டமாய் சொல்லி இருப்பதும் படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது. எனினும், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகப் படைத்திருந்தால், படத்தை கூடுதலாக ரசித்திருக்க முடியும்.

மது நீலகண்டன் கேமரா கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அழகையையும், குற்ற நிகழ்வுக்கான திகிலையும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளது.

பிரீத்தம் இசையில் ”அன்பே விடை” என்று தொடங்கும் பாடல் ரசிக்கும்படி உள்ளது. மற்ற பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் டேனியல் பி.ஜார்ஜ் மிரட்டியிருக்கிறார்.

‘மெரி கிறிஸ்துமஸ்’- கண்டு களிக்கத் தகுந்த திரைப்படம்! பார்த்து மகிழுங்கள்!