உண்மையில் சமூக விரோதிகள் யார்?: மெரினா போராட்டத்தின் அதிகாலை உண்மைகள்!
தமிழகம், இந்திய ஒன்றியத்துடன் முரண்பட்டு கடந்த ஆறு நாட்களாக மாபெரும் வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தது. மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும் மாநில அரசால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டும் வந்த தமிழக மக்கள், அரச எந்திரத்திற்கு எதிராய் மாபெரும் அறப்போரை கொண்டாட்டமாக நடத்தினர். வரலாற்றின் பக்கங்கள் இதனை நிரப்பிக் கொள்ள அவகாசம் கேட்டது. வெறுமனே சுற்றுலாத்தலமாக இருந்த மெரினா மாபெரும் போராடடக்களமாய் மாறியது. உலகமே தமிழ் மக்களை கவனிக்க ஆரம்பித்தது. நமது பிரச்சனையை காது கொடுத்து கேட்க ஆரம்பித்தனர் அண்டை மாநிலத்துக்காரர்கள். அரசியலற்ற மக்களாய் கூடியவர்கள் அரசியலைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். இப்படி எண்ணற்ற நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டிருந்தது தமிழகம் முழுவதுமான ஜல்லிக்கட்டுக்கான போராட்டம். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக இருந்துவிடவில்லை. அதனைத் தாண்டி தமிழர்களின் பல பிரச்சனைகளைப் பேசுபொருளாக கொண்டிருந்தது. அதுதான் இதன் சிறப்பு. இம்மாபெரும் வரலாற்று நிகழ்வின் கடைசி இரவில் இருந்து அதிகாலை வரை இதோ….
ஆறு நாட்கள் திருவிழா போல நிகழ்ந்து கொண்டிருந்த போராட்டம் ஆறாவது நாளின் முடிவில் வேறு முகத்துக்கு கட்டாயமாக மாற்றப்பட்டது. இந்த போராட்டத்தை நாங்கள்தான் ஆரம்பித்தோம் என கூறியவர்கள், போராட்டம் 90% வெற்றி பெற்றதாகவும், போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாகவும் கூறி போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அதுநாள் வரை போராட்டத்தை பல்வேறு வகையில் புகழ்ந்தவர்களும் சமூக விரோதிகள் என்ற வார்த்தையைச் சொல்ல ஆரம்பித்தனர். அப்பொழுதுதான் குழப்பங்கள் ஆரம்பித்தன. மெரினா கடற்கரை சாலையில் கால் கூட வைக்க முடியாத அளவு இருந்த கூட்டம் ஆறாவது நாள் இரவில் பாதியாய் குறைந்து விட்டது. கூட்டம் குறைந்ததற்கான காரணம் புரியாமல் விழித்தனர் பலர். போராட்டம் வலுவிழக்கிறதோ என்ற சந்தேகம் தலைதூக்கியதை தவிர்க்க முடியவில்லை.
போராட்டத்தை திசை திருப்ப முயன்ற சக்திகள்
ஆறாவது நாளான 22 ஆம் தேதி இரவு 11 மணியளவில் 8 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ் குழுவினர் கைகளில் தேசியக்கொடியுடன் பார்த்தசாரதி கோவில் வளைவின் முன்னால் கூடி கோசமிட்டனர். “தமிழகத்தைப் பிரிக்காதே, மோடியை திட்டாதே, மத்திய அரசை கண்டிக்காதே, பாரத் மாதகி ஜே” இவைதான் அவர்கள் எழுப்பிய கோசங்கள். இதனை பார்த்து கோபமடைந்த மாணவர்களும் இளைஞர்களும் அவர்களை கலையச் சொல்லி முழக்கமிட்டனர். “மத்திய அரசினை கண்டிப்பதில் என்ன தவறிருக்கிறது? அவர்கள்தானே ஜல்லிகட்டு தடையை நீக்காமல் அடம் பிடிப்பது. அப்படி இருக்கையில் மத்திய அரசை கண்டிக்காதே என கோசம் போட்டு போராட்டத்தினை சிதைக்க பார்க்கிறார்கள்” என கண்டிப்பான குரலில் சொன்னார் ஒரு இளைஞர். மேலும் “தமிழனாய் ஒன்று சேர்ந்த சமயத்தில் தமிழகத்தை யார் பிரிக்கிறார்கள்?” என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார். நீண்ட நேரம் எதிர் முழக்கமிட்டும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கலையவில்லை. அவர்களும் பதிலுக்கு முழக்கமிட்டனர். நேரமாக நேரமாக அவர்களுக்கெதிரான இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. வேறு வழியில்லாமல் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் முடிந்த சிறிது நேரத்தில் ஔவையார் சிலை அருகே சிலர், இளைஞர்கள் என்ற போர்வையில் விஷம கருத்துக்களை கொண்ட பலகைகளை வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பலகைகளில் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளை குறை கூறியும், கலாய்த்தும் செய்திகள் இருந்தன. அவற்றில் பா.ஜ.க.வும் அதிமுகவும் விடுபட்டு போனது தற்செயல் போல தெரியவில்லை. அதே பலகையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஆதரவான கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் நீண்ட வாக்குவாதத்திற்கு பின் அதனை கிழித்து போட்டனர். இது போன்று பலர் ஆறாவது நாளின் இரவில் போராட்டத்தை சிதைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் தங்களது கோரிக்கைகளிலும் அரசினை விமர்சிப்பதிலும் சரியாகவே இருந்தனர்.
தடியடியுடன் விடிந்த பொழுது
மெரினாவின் சாலைகளில் அங்காங்கே போராட்டக் குழுக்கள் முகாமிட்டிருந்தனர். குடிசை மாற்று வாரியத்திற்கு எதிரே இருந்த குழு, விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே இருந்த குழு, அதற்கு அடுத்து இருந்த குழு இவை மூன்றும் தான் போராட்டக் குழுக்களில் எண்ணிக்கையில் பெரியவை. விடியற்காலை 3 மணியில் இருந்தே காவல்துறையினர் வரிசையாக வந்து இறங்கி கொண்டிருந்தனர். எல்லா காவலர்களும் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் முன்புறத்தில் குழுமினர். ஒவ்வொரு காவலரும் வந்திறங்கும்போதே கையில் லத்திகளுடன்தான் வந்தனர். போராட்டக்காரர்களுக்கு தடியடி நடக்கப்போகிறதோ என்ற அச்சம் தலைதூக்காமல் இல்லை. ஆனால் அதற்கான எந்த ஆயத்தமும் மேற்கொள்ளப்படாமல் இருக்கவே மக்களும் நிம்மதியாய் போராடிக்கொண்டிருந்தனர். குடிசை மாற்று வாரியத்திற்கு எதிரே குழுமியிருந்த குழு உற்சாகமாக போராட்டக்காரர் ஒருவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள், ”காவல் தெய்வங்களை (அதாங்க போலீஸ்) கண்டு பயப்பட வேண்டாம், அவர்கள் நம்மை காக்கவே வந்துள்ளனர்” என கூறி மக்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தனர்.
காலை 4.30 மணியளவில் காவல்துறையினர் பத்திரிக்கை நண்பர்களுக்கு பத்திரிக்கை செய்தியினை வெளியிட்டுள்ளனர். அதில் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியதாகவும், அதனால் போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இத்தகைய அறிவிப்பினை 5.15 மணியளவிலேயே போராட்டக்காரர்களுக்கு அறிவித்தனர் காவல்துறையினர். அந்த அறிவிப்பிற்கு முன் தான் போராட்டக்காரர்கள் காவல்துறையினருக்கு டீயையும் பிஸ்கட்டையும் வழங்கினர். அதற்கு கொஞ்சம் முன்னதாக போராட்டக் களத்திற்கு வந்த இயக்குநர் ராம், “நேற்றிலிருந்து லைவ்ல எதுவும் காட்டல, போலீஸ்காரங்க குவிஞ்சதா கேள்விப்பட்டேன் அதான் வந்தேன். ரோடு முழுக்க ப்ளாக் பண்ணிட்டாங்க. இப்ப என்ன பண்ண போறீங்க? கலைய போறீங்களா?” என்றதற்கு, மாணவர்களும் மற்றவர்களும் சொன்ன பதில் “இல்லை”. ”அப்ப வாங்க போலீஸ்ட்ட பேசுவோம் நேரம் கேட்போம், இங்க நடக்குறத வெளிய தெரிய வைப்போம், இங்க நடக்குறது எதுவும் யாருக்கும் தெரியாது. மக்களை திரட்டுவோம்” என அவர் பேசிவிட்டு குழு ஒருங்கிணைப்பாளர்களிடம் இதனைச் சொல்ல சென்றார். அதற்குள் போலீசார் உள்ளே நுழைந்து எல்லாரையும் தூக்க ஆரம்பித்து விட்டனர்.
போலீசார் உள்ளே நுழைந்து தூக்குவதற்கு முன்பு கடைசியாக மைக்கில் ஒலித்த வார்த்தைகள் இவைதான், “காவல்துறையும் தமிழன்தான், அவங்ககிட்ட சாப்பிட்டியானு கேக்காம விட்டுட்டியே தமிழா, காவல் தெய்வங்கள் நம்மள ஒண்ணும் செய்ய மாட்டாங்க, நமக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க, முனியாண்டி, அய்யனார் போல” என சொல்லி முடிப்பதற்குள்ளாகவே மைக் பிடுங்கப்பட்டது. அங்கிருந்த அனைவரையும் தர தரவென்று இழுத்தனர், ஆண், பெண் பேதம் பார்க்காமல். அசிங்கமான வார்த்தைகளில் திட்டினர், கலைய மறுத்த சிலரை குண்டுகட்டாக தூக்கினர். இப்படி கலைந்த மாணவர்களும் பொதுமக்களும் கடற்கரை மணலில் போய் அமர்ந்து ஜல்லிக்கட்டு வேண்டும் என கோஷமிட ஆரம்பித்தனர். கடுப்பான காவல்துறையினர் லத்தியை எடுத்து சுழற்ற போராட்டக்காரர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
சிதறி ஓடிய கூட்டம் விவேகானந்தர் இல்லம் முன் கூடியிருந்த கூட்டத்துடன் சேர்ந்தது. அசாதாரண சூழலில் பதறிப்போன பலர் செய்வதறியாமல் விழித்தனர். அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜல்லிக்கட்டு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தின் வரைவு நகல் வேண்டும் என்றும் அதனை பரிசீலித்தபின் கலைந்து செல்வது குறித்து முடிவெடுப்பதாகவும் போலீஸாரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின் போலீஸார் தங்களது பத்திரிக்கை செய்தியினை அந்த குழுவின் முன் வாசித்தனர். மேலும் உடனே கலைந்து செல்ல உத்தரவிட்டனர். மாணவர்கள் அரைநாள் அவகாசம் கேட்டனர் போலீஸார் மறுத்தபின், இரண்டு மணி நேரமாவது தாருங்கள் உடனே கலைய முடியாது என கெஞ்சினர். ஆனால் போலீஸார் விடாப்பிடியாக மறுத்துவிட்டனர்.
அந்த கூட்டத்திற்குள்ளும் புகுந்த போலீஸ் எல்லாரையும் தர தரவென்று இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர். தடியடி நடத்த ஆரம்பித்தனர். பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டக்காரர்கள் விழுந்தடித்து ஓடினர். தடியடியைப் பொறுக்க முடியாத பலர் தமிழர் கடல் அதிர தேசிய கீதத்தைப் பாடினர். அப்பொழுதும் லத்திகள் ஓயவில்லை. அடி பலமாக விழுந்தது. தொடர்ந்து வந்தே மாதரமும், ஜெய்ஹிந்த்தும் காதை கிழித்தன. இவையனைத்தும் நம்மை அடிகளில் இருந்து காப்பாற்றிவிடும் என மாணவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை. பாதி பேர் கடலுக்கு ஓடிச் செல்ல ஆரம்பித்தனர். கடலுக்குள் இறங்கி மனித சங்கிலி அமைத்தனர். இன்னும் சிலரோ தங்களை அமைதியாக போராட விடுங்கள் என போலீஸின் கால்களில் விழுந்தனர்,
முழுக்க முழுக்க அறவழியை விடவே இல்லை போராட்டக்காரர்கள். திருப்பி மண் வீசிய சிலரையும் போராட்டக்காரர்களே கண்டித்தனர். காவல்துறைக்கு எதிராக கூட கோசங்களை எழுப்பவில்லை. ஆனால் காவலர்கள், சிக்கியவர்களையெல்லாம் ஆண், பெண் பேதமில்லாமல் வெளுத்தனர். மண்டையை உடைத்தனர். கணுக்கால்களில் லத்தியை செலுத்தினர். இவைதான் மெல்லிய தடியடி என எல்லா ஊடகங்களாலும் சொல்லப்பட்டது. மெரினாவை விட்டு வெளியேறினால் உன்னை அடிக்க மாட்டேன் என டீல் பேசினர். திருநங்கை செயல்பாட்டாளரான கிரேஸ் பானுவை நிற்ககூட முடியாத அளவிற்கு அடித்து ஆம்புலன்ஸில் ஏற்றினர் போலீஸார். மெரினாவில் இருந்து வெளியேறி ஓடிய போராட்டக்காரர்கள் அனைவரும் ராதாகிருஷ்ணன் சாலை வழியே மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். யாரையும் ஐஸ் ஹவுஸ் சாலையிலோ நடுக்குப்பத்திற்கு அருகிலுள்ள சாலையிலோ அனுமதிக்கவில்லை. போராட்டக்கார்ர்கள் தாக்கப்படுவதை அருகிலிருந்த பகுதி மக்கள் பார்த்தனர். ஆனால் அவர்களை அந்த சாலை பக்கமே அனுமதிக்கவில்லை. போராட்டக்காரர்கள் கடலுக்குள் செல்வதைப் பார்த்த மீனவர்கள் படகுகளை எடுத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு உதவி செய்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த காவல்துறையினர் மீனவ குப்பங்களான நடுக்குப்பம், நொச்சிக்குப்பம், அயோத்திகுப்பம் பகுதி மக்களை அடித்து துவைத்தனர், அவர்களது வீடுகளை சூறையாடினர். அதன்பின் தங்களை காத்துக்கொள்ள அக்குப்பத்து இளைஞர்கள் திருப்பி தாக்கினர்.
அன்று முழுவதும் காவல்துறையின் அராஜகம் தொடர்ந்தது. சேப்பாக்கம், திருவல்ல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்து செல்லும் எல்லாரையும் போலீஸார் விசாரணை என்ற பெயரில் தாக்கினர். இரண்டு பேர் சேர்ந்து சென்றாலே அவர்கள் போராட்டக்காரர்களாக பார்க்கப்பட்டு அடிக்கப்பட்டடனர்.
கடந்த ஆறு நாட்களாக அற வழியில் நடைபெற்ற போராட்டத்தை அமைதியான வழியில் முடித்து வைக்க எல்லா வாய்ப்பும் இருந்தும் அதனை செய்யாமல் அரசும் காவலர்களும் போராட்டக்காரர்கள் மீது சமூக விரோதிகள் என முத்திரை குத்தி வன்முறையோடு முடித்து வைத்துள்ளனர். மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்த போராட்டம் வெற்றியடைந்துவிட்டால் இனிமேல் எல்லா பிரச்சனைகளுக்கும் இவர்கள் ஒன்று திரள்வார்கள் என்ற காரணமே அமைதியாக முடிக்கவிடாமல் செய்துள்ளது. அதே போன்று எல்லா ஊடகங்களும் (விகடன் தவிர) நேற்று நடந்த சம்பவத்தை உண்மையாக விளக்காமல், சமூக விரோதிகள் என்ற வார்த்தையின் உதவியுடன், “இந்த போராட்டம் தோல்வியடைந்து விட்டது, மாணவர்களும் இளைஞர்களும் இனிமேல் ஒன்றுதிரள முடியாது” என்ற பிம்பத்தையே கட்டமைக்கின்றன.
உண்மையில் இப்போராட்டம் வெற்றியடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என்ற கோரிக்கை நிறைவேறியதால் அல்ல. மாணவர்களும் இளைஞர்களும் வீதிக்கு வர முடியும் என்பதையும், வந்தால் அவர்களது அரசியல் எப்படி இருக்கும் என்பதையும் உலகுக்கு காட்டியுள்ளது. அரசியல் பேசக் கூடாது என்று கூறினாலும் மெரினாவின் பல்வேறு போராட்டக் குழுக்கள் மிகத் தெளிவாக அரசியல் பேசினர். அரசியலற்று கிடந்த இளைஞர் கூட்டம் அரசியலை கற்றுணர இந்த களம் உதவியது. போலியான அரசியலற்ற தலைமைகளை நம்பினால் என்னாவாகும் என்ற படிப்பினையையும் தந்துள்ளது. இவையெல்லாம் போராட்டத்தின் வெற்றிகளே. லத்தியடியின் தழும்புகள் ஆறிவிடலாம், ஆனால் இந்த போராட்ட தழும்புகள் வரலாற்றில் கண்டிப்பாய் இருக்கும். நாளை தமிழகத்தின் எல்லா பிரச்சனைக்கும் எம் இளைஞர் கூட்டம் களத்திற்கு வரும் என்ற நம்பிக்கையுடன்….
நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா….
சா.ஜெ.முகில் தங்கம்
இதழியல் மாணவர்
Courtesy: mukilthangam.wordpress.com