கருணாநிதி உடலை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி தி.மு.க. வழக்கு
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய தி.மு.க சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், மருத்துவர்கள் தெரிவித்த அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாடு முதல்வரிடம் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலை, மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செய்யும் பொருட்டு ஒதுக்கவும், காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அன்னாரை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் பரிசீலனை செய்தார். இதனிடையில் கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.
அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.
இவ்வாறு கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தவாதியான எஸ்.குருமூர்த்தி தவிர வேறு எந்த கட்சித் தலைவர்களும் இதை ஏற்கவில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, திராவிடர் கழக தலைவர் விரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர், அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் இன்று இரவே விசாரணைக்கு வருகிறது.