கலாபவன் மணி: கண்ணீர் அஞ்சலியாய் கடந்தகால ஞாபகங்கள்

பிரபல மலையாள நடிகரான கலாபவன் மணியின் மரணம் ஒரு பத்திரிகையாளனாக எனக்கு வெறும் செய்தி மட்டும் அல்ல.

மக்கள் தொடர்பாளர் கே. ரியாஸ் அஹ்மது தயாரித்த தத்தி தாவுது மனசு திரைப்படத்தில் பங்களித்தபோது அப்படத்தில் நடித்த கலாபவன் மணி உடன் பழகியதுண்டு.

அப்போது கலாபவன் மணி நடந்து கொண்ட விதத்தை எப்போதுமே என்னால் மறக்க முடியாது.

ஒரு நடிகன் இப்படி இருக்க முடியுமா? என்ற கேள்வியை மட்டுமல்ல, ஒரு நடிகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியவர் கலாபவன் மணி.

2008 ஆம் ஆண்டு வண்ணத்திரை இதழில் நிழல்களின் தேசம் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதியபோது, தத்தி தாவுது மனசு படத்தில் நடித்தபோது கலாபவன் மணி நடந்து கொண்ட விதம் குறித்து, கண்ணியமிக்க கலாபவன் மணி என்ற தலைப்பில் எழுதினேன்.

கலாபவன் மணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதை இங்கே வெளியிட்டிருக்கிறேன்…

ஜெ.பிஸ்மி

                                                                                   # # #

கார்ப்பரேட் பட நிறுவனங்கள் சமீப காலமாக பல நூறு கோடிகளுடன் கோடம்பாக்கத்தில் கால் பதித்திருக்கின்றன.

அதனால் ஏற்பட்ட போட்டியில், நான்கு கோடி சம்பளம் வாங்கிய கதாநாயக நடிகரின் இன்றைய சம்பளம் பத்துகோடி என்கிற அளவுக்கு நட்சத்திர சம்பளம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் கந்து வட்டிக்கு கடன் வாங்கிப் படம் எடுப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

சொல்லப்போனால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இப்படி பணம் புரட்டி படம் எடுப்பவர்களே.

இவர்கள் யாரும் கோடிக்கணக்கில் பேங்க் பேலன்ஸ் வைத்துக் கொண்டு படம் எடுக்க வருவதில்லை.

இதை ஒவ்வொரு நட்சத்திரங்களும் உணர்ந்து ஒத்துழைப்புக் கொடுத்தால் நிம்மதியாக படத்தை எடுப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

தமிழ்ப்பட நட்சத்திரங்களில் எத்தனை பேருக்கு தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரியும்?

இந்த விஷயத்தில் மலையாளப்பட நடிகர்கள் மிகச் சிறந்தவர்கள். மலையாளப்படங்களைப் போலவே மலையாள நடிகர்களும் எளிமையானவர்கள் மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதை ஒரு போதும் விரும்பாதவர்கள்.

குறிப்பாக நடிகர் கலாபவன்மணி!

ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு போற்றத்தக்க முன்னுதாரணம் இவர்!

இதை என் அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன்.

கலாபவன் மணி சிறந்த நடிகர் என்று எல்லோருக்குமே தெரியும்.

நாங்கள் தயாரித்த ‘தத்தி தாவுது மனசு’ படத்தில் அவர் நடித்த போதுதான், கலாபவன் மணி சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகச்சிறந்த மனிதர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

தயாரிப்பாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வீண் செலவு வைக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருப்பதோடு, அதை மிகச்சரியாய் கடைபிடிக்கவும் கூடியவர் கலாபவன்மணி!

அற்புதமான அந்த மனிதரின் நல்ல பண்பை எல்லோரும், தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நம் ஹீரோக்கள்! தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரை பின்பற்றவும் வேண்டும் என்பதற்காகவே இந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் ‘தத்தி தாவுது மனசு’ என்ற படத்தை நாங்கள் தயாரித்த போது, அதில் கலாபவன்மணி முக்கிய வேடத்தில் நடித்தார்.

கேரளாவிலிருந்து வந்து நடித்துவிட்டு செல்லும் கலாபவன்மணிக்கு சென்னை. வடபழனியில் உள்ள பிரபலமான ஹோட்டலை புக் பண்ணினோம்.

எங்கள் படத்துக்காக சென்னை வந்த அவர், சுமார் பதினைந்து நாட்கள் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்தப் பதினைந்து நாட்களும், “என் சாப்பாட்டு விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரே பணம் கொடுத்து ஒரு மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வர வைத்து சாப்பிட்டார்.

ஒரு நாள் சாப்பாட்டுக்காக அவர் செலவு செய்தது வெறும் இருநூறு ரூபாய்தான்! அந்த செலவைக் கூட நாங்கள் கொடுக்க அவர் அனுமதிக்கவில்லை. அவரே கொடுத்துவிட்டார்.

அவருடைய செயலைக் கண்டு உண்மையில் நான் பிரமித்துப்போனேன்.

தயாரிப்பாளர்களின் பணத்தை கரைப்பதில் குறியாய் இருப்பவர்களின் மத்தியில் இப்படியும் ஒரு நடிகரா?

நம் ஹீரோக்கள் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று என் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது.

விதம்விதமாக தான் சாப்பிடுவது மட்டுமல்ல, தன்னைப் பார்க்க வருபவர்களுக்கும் பந்தி வைக்கும் ஹீரோக்கள் நிறைந்த நம் படத்துறையில் நாம் சாப்பிடும் செலவைக் கூட தயாரிப்பாளர் தலையில் கட்டக்கூடாது என்று நினைக்கும் கலாபவன்மணி வித்தியாசமானவர்தானே?

அதனால்தான் இங்கே அவரைப் பற்றி குறிப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் மட்டுமல்ல, மற்றொரு விஷயத்திலும் என்னை மலைக்க வைத்தார் கலாபவன் மணி.

‘தத்தி தாவுது மனசு’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்த கலாபவன்மணி தான் நடிக்க வேண்டிய காட்சிகளை குறித்த நாட்களில் முடித்துக் கொடுத்துவிட்டு கேரளாவுக்குப் புறப்பட்டு சென்றார்.

மறுநாள் அவர் தங்கியிருந்த ஹோட்டல் பில்லை செட்டில் பண்ணச் சென்றேன். கலாபவன்மணி சென்னை வந்த போது அவரது நண்பர்கள் இருவரையும் கேரளாவிலிருந்து அழைத்து வந்திருந்தார். அதனால், ‘பதினைந்து நாட்கள் தங்கியிருக்கிறார். இரண்டு நண்பர்கள் வேறு. எனவே ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட் பில் நிச்சயம் பெரிய தொகையாகத்தான் இருக்கும்’ என்று நினைத்தபடி சென்ற எனக்கு, ஹோட்டல் பில்லைப் பார்த்ததும் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. இன்ப அதிர்ச்சி என்பார்களே…அப்படியொரு அனுபவம் அது.

ஹோட்டலின் ரூம் வாடகைக்கு மேல் ஒரு பைசாக்கூட உபரியாய் செலவு செய்திருக்கவில்லை அவர்.

ஒருவேளை ரெஸ்ட்டாரண்ட் பில் என்று தனியாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தில் ஹோட்டல் மானேஜரிடம் கேட்டேன்.

ரெஸ்ட்டாரண்ட் பில்லை கலாபவன்மணியே செட்டில் பண்ணிவிட்டதாக சொன்னார் அவர். அதாவது, அங்கே தங்கியிருந்த போது அவர்கள் சாப்பிட்ட காபி, டீ, மினரல் வாட்டருக்காக செய்த செலவுகளுக்கான தொகையை அவரே செட்டில் பண்ணிவிட்டுப் போயிருந்தார்.

கலாபவன்மணியின் இந்த செயலைக்கண்டதும் எனக்கு தோன்றியது என்ன தெரியுமா?

அவர் இருந்த இடத்தில் நம் ஹீரோக்கள் இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்பதுதான்!

தயாரிப்பாளர்தானே பணத்தைக் கொடுக்கப் போகிறார் என்று கன்னாபின்னாவென்று குடித்து கும்மாளம் போட்டு செமத்தியாய் செலவு வைத்திருப்பார்கள்.

படத்தின் பட்ஜெட்டில் பல நேரங்களில் ஹோட்டல் பில்லை விட ரெஸ்ட்டாரண்ட் பில்தான் எக்கச்சக்கமான தொகையாக இருக்கும்.

Courtesy: tamilscreen.com