நா.முத்துக்குமார் 33 நிமிடங்களில் எழுதிய பாடல் வெளியீட்டு விழா!
அமரர் நா.முத்துக்குமார் 33 நிமிடங்களில் எழுதிய பாடல் இடம் பெற்றுள்ள ‘மேல் நாட்டு மருமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழா நடைபெற்ற அரங்கத்துக்கு, நா.முத்துக்குமார் நினைவாக ‘நா.முத்துக்குமார் அரங்கம்’ என பெயரிடப்பட்டிருந்தது. மேலும், விழாவின் ஆரம்பத்தில் நா.முத்துக்குமாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்விழாவில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் ‘மேல் நாட்டு மருமகன்’. இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். ஆண்ட்ரீயன் என்ற பிரெஞ்சுப் பெண் நாயகியாக அறிமுகமாகிறார். வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.எஸ்.எஸ். இயக்கியுள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “மேல்நாட்டு மருமகன்’, செக்ஸ், வன்முறை இல்லாத, குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம். ராஜ்கமல் – ஆண்ட்ரியன் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கலைஞனை இழந்துவிட்டு நிற்கிறோம். இந்த படத்திற்காக நா.முத்துக்குமாரிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன். அதற்கு அவர் முதலில், ‘அமெரிக்கா போகிறேன்; வந்து எழுதுகிறேன். அவசரம்னா வேறு யாரையாவது எழுதி தரச்சொல்லி வாங்கிக்குங்க… பிளீஸ்’ என்றார். ‘நீங்கதான் எழுதணும்’ என்று வற்புறுத்தினேன்.
நிலைமையை புரிந்துகொண்ட அவர், அவரது காரில் என்னை அழைத்துச் சென்று, 33 நிமிடங்களில் பாட்டெழுதி கொடுத்துவிட்டார். ஓடும் காரிலேயே பாட்டெழுதித் தந்த அந்த நடப்பையும், நண்பனையும் இழந்து நிற்கிறது இந்த படக்குழு..
யாரோ யார் இவளோ
சந்தோஷத்தின் பேர் இவளா…
என்று அருவியாய் வந்த அவரது எழுத்தாற்றல் மிகப்பெரியது.
அது மட்டுமல்ல, படத்தில் மற்ற பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களை கேட்டு, அவர்கள் புதியவர்கள் என்பதையும் அறிந்து மனதார பாராட்டிய அந்த பெருந்தன்மைக்கு இந்த படக்குழு நன்றி சொல்லிக் கொள்கிறது” என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.
ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா
இசை – வே.கிஷோர்குமார்
படத்தொகுப்பு – விஜய் கீர்த்தி
கலை – ராம்
நடனம் – சங்கர்
பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்.
ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி