விஜய் சேதுபதியின் ‘மெல்லிசை’ படத்தலைப்பு ‘புரியாத புதிர்’ என மாற்றம்!
விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘மெல்லிசை’. இதில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கிறார். ‘ரெபல் ஸ்டூடியோ’ தயாரித்துள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில் வாங்கியிருக்கும் ஜே.சதீஷ்குமாருக்கு சமீபத்தில் இப்படத்தை போட்டு காட்டியிருக்கிறார்கள். படத்தை பார்த்த ஜே.சதீஷ்குமார், படம் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக இருப்பதாகவும், ஆனால் க்ளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸாக நகரும் இந்த த்ரில்லர் படத்துக்கு, மென்மையான காதல் கதைக்கு பொருந்தக்கூடிய ‘மெல்லிசை’ என்ற தலைப்பு பொருத்தமாக இல்லை என்றும் கருத்து கூறியிருக்கிறார்.
இதனால், தலைப்பை மாற்ற முடிவு செய்த படக்குழு, பழைய தமிழ்ப்படங்களின் தலைப்பிலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுத்து சூட்ட முடிவு செய்தது. ‘மூடுபனி’, ‘நெற்றிக்கண்’ என பல பழைய பெயர்களை பரிசீலித்த பின்னர், 1990ஆம் ஆண்டு சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘புரியாத புதிர்’ என்ற வெற்றிப்படத்தின் தலைப்பை தேர்வு செய்து சூட்டியிருக்கிறது.
இது குறித்து ஜே.சதீஷ்குமார் கூறுகையில், “”சுவாரசியமான திருப்பங்களோடும், எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளைக் கொண்டும் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நிச்சயமாக ‘மெல்லிசை’ போன்ற இதமான தலைப்பு பொருந்தாது என்று நாங்கள் அனைவரும் கருதினோம்.
விஜய் சேதுபதி போன்ற சிறந்த நட்சத்திர கலைஞரின் திரைப்படத்திற்கு துடிப்பான தலைப்புதான் இருக்க வேண்டும் என்று எண்ணி, ‘புரியாத புதிர்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டு, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி சாரை அணுகினோம். அவர் இந்த தலைப்பை எங்களுக்கு பரந்த மனப்பான்மையோடு வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வருகிற நவம்பர் மாதம் ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படமாகவும், எங்கள் நிறுவனத்திற்காக அவர் நடித்திருக்கும் ஐந்தாவது படமாகவும் இது இருக்கும். இப்படம் நிச்சயமாக இந்த வருடத்தின் வெற்றிகரமான நடிகர் என்ற பெயரை விஜய் சேதுபதிக்கு பெற்றுத் தரும்” என்றார்.