மீண்டும் – விமர்சனம்
நடிப்பு: கதிரவன், அன, ஷரவண சுப்பையா , சுபா பாண்டியன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா மற்றும் பலர்
எழுத்து, இயக்கம்: ஷரவண சுப்பையா
இசை: நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு: சீனிவாச தேவாம்சம்
ஷரவண சுப்பையா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன்’, ஷாம் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஏபிசிடி’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து, சுமார் 16 ஆண்டுகளுக்குப்பின் ஷரவண சுப்பையா இயக்கியுள்ள மூன்றாவது படமாக வெளிவந்திருப்பதால், ‘மீண்டும்’ திரைப்படம் கவனம் பெற்றுள்ளது.
நாயகன் கதிரவனும், நாயகி அனகாவும் காதலித்து, அனகாவின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். அனகா கர்ப்பமாக இருக்கும்போது, ஒன்றிய அரசுக்கான ‘அண்டர்கவர் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய உளவுப்பணி காரணமாக வெளியூர் போகிறார் கதிரவன். பல நாட்களாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அனகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தாங்கள் விரும்பாத மணஉறவில் உதித்த குழந்தை என்பதால், அனகாவின் பெற்றோர், குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதாக அனகாவிடம் பொய் சொல்லிவிட்டு, குழந்தையைக் கொண்டுபோய் அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு, அனகாவுக்கு ஷரவண சுப்பையாவுடன் இரண்டாவது திருமணம் செய்து வைக்கின்றனர்.
திரும்பி வருகிறார் கதிரவன். தனது மனைவிக்கு இரண்டாவது திருமணம் நடந்தது தெரிய வருகிறது. ஆசிரமத்தில் வளரும் தன் மகனைக் கண்டுபிடித்து அழைத்துவந்து வளர்த்து வருகிறார்.
ஒருகட்டத்தில், கதிரவன் உயிரோடு இருக்கிறார் என்பதும், அவரிடம் இருப்பது தன் மகன் என்பதும் அனகாவுக்குத் தெரியவருகிறது. மகனை தன்னுடன் வைத்துக்கொள்ள அனகா விரும்புகிறார். அவரின் இரண்டாவது கணவரான ஷரவண சுப்பையாவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் மகனைக் கொடுக்க கதிரவன் மறுக்கிறார். இரண்டு நாட்களாவது எங்களுடன் இருக்கட்டும் என கேட்டு அழைத்துச் செல்கிறார் அனகா.
அதன்பின், ‘அண்டர்கவர் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய உளவுப்பணி கதிரவனை மீண்டும் அழைக்கிறது. மகனை அனகாவிடம் விட்டுவிட்டு, இலுமினாட்டிகள் ஆட்சி செய்யும் சிலாக்கி தீவுக்கு ரகசியமாக புறப்பட்டுச் செல்கிறார். 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சென்னை, நாகை உள்ளிட்ட பல இடங்களில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி இயற்கையின் வேலை அல்ல, அது சிலாக்கி தீவை ஆளும் இலுமினாட்டிகளின் நாசகார வேலை என்பதும், அதைவிட பயங்கரமான நாசத்தை 2022-ல் ஏற்படுத்த அவர்கள் சதி செய்துவருகிறார்கள் என்பதும் கதிரவனுக்குத் தெரியவருகிறது. சதியை கதிரவன் முறியடித்தாரா? வெற்றிகரமாக தாயகம் திரும்பினாரா? என்பது மீதிக்கதை.
கதையின் முதல் நாயகனாக வரும் கதிரவன் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் குழந்தைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு நெகிழ்ச்சி ஊட்டுகிறது. இலுமினாட்டிகள் ஆளும் சிலாக்கி தீவில் முழு நிர்வாணமாக அவர் சித்ரவதை அனுபவிக்கும் காட்சியில் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாவது நாயகனாக வரும் ஷரவண சுப்பையா பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையும் கொண்ட நல்ல கணவனாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்சில் அவரது பாத்திரம் உச்சம் தொடுவது அபாரம்.
நாயகியாக வரும் அனகா அழகாக இருக்கிறார். அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஷரவண சுப்பையா காதல், குழந்தை செண்டிமெண்ட், அதிர்ச்சியும் விறுவிறுப்பும் மிக்க ஆக்சன் சமாச்சாரங்கள் ஆகியவற்றை கலந்துகட்டி, திரைக்கதை அமைத்து ரசிக்கும் விதத்தில் இயக்கியிருக்கிறார். அவரது பிலிம் மேக்கிங் பாராட்டுக்குரியது.
இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம்.
நாயகன் கதிரவனின் குடும்ப வாழ்க்கைக் கதையும், சிலாக்கி தீவில் அவர் நிகழ்த்தும் சாகசக் கதையும் ஒன்றுக்கொன்று சரியாக ஒட்டாமல் தனித்தனியாக இருப்பதால் அவை தனித்தனி படக்கதைகளோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சுனாமி பேரழிவு இயற்கை நிகழ்வு அல்ல, இலுமினாட்டிகளின் சதிச் செயல் என்பதும் நம்புகிற மாதிரி இல்லை. இந்த இரண்டு குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் –
’மீண்டும்’ – மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கலாம்!