மாயன் – விமர்சனம்

நடிப்பு: வினோத் மோகன், பிந்து மாதவி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, ரஞ்சனா நாச்சியார், கஞ்சா கருப்பு, ராஜா சிம்மன், மரியா, பியா பாஜ்பாயி (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜே.ராஜேஷ் கண்ணா

இசை: எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்

ஒளிப்பதிவு: கே.அருண் பிரசாத்

படத்தொகுப்பு: எம்.ஆர்.ரெஜிஸ்

தயாரிப்பு: ஜே.ராஜேஷ் கண்ணா

பத்திரிகை தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்

ராமலிங்கம் (’ஆடுகளம்’ நரேன்), அவரது மகளும் நாயகியுமான கோப்பெருந்தேவி (பிந்து மாதவி) இவர்களது ஐ.டி நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றுகிறார் நாயகன் ஆதி (வினோத் மோகன்). அமைதியானவர். தன் கண் முன்னே எது நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பவர். தனக்கு எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும் அதை சகித்துக்கொண்டு வாழ்பவர். தன் அம்மாவுக்கு ஒரு சொந்த வீடு வாங்குவதை நோக்கமாக்க் கொண்டு இயங்குபவர். 

இவருக்கு ஒரு நாள் மின்னஞ்சல் (இ-மெயில்) ஒன்று வருகிறது. ”இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப் போகிறது. உன் வாழ்க்கையை உன் இஷ்டப்படி வாழ்ந்துகொள். நீ மாயர்களின் பிள்ளை என்பதால் உனக்கு மட்டும் இந்த ரகசியத்தைத் தெரியப்படுத்துகிறோம். இதை நீ யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. இப்படிக்கு – மாயர்கள்” என்பது அந்த மின்னஞ்சலில் உள்ள செய்தி.

‘மாயன்’ என்றால் ’காலபைரவனின் (சிவனின்) பிள்ளை’ என்று பொருள். ‘மாயர்கள்’ என்றால் ‘காலபைரவனின் மக்கள்’ என்று பொருள். உலகிலுள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் மாயர்கள் தான் என்றும், அப்படிப்பட்ட மாயர்களுக்கும் நம் மூதாதையர்களுக்கும் புராண காலத்தில் ஓர் உறவு இருந்தது என்றும் சொல்லுகின்றன தொன்மங்கள்.

மாயர்களின் உலகத்திலிருந்து வந்திருக்கும் மின்னஞ்சல் செய்தியைப் படித்த ஆதி, முதலில் அதை நம்ப மறுக்கிறார். இதனால் அவரைச் சுற்றி சில மர்மமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன. இதன்பின் நம்ப ஆரம்பிப்பவர்,  திடீர் பிரம்மை காரணமாக என்னென்னவோ கற்பனை செய்துகொண்டு தவிக்கிறார். உலகம் அழியத் தானே போகிறது என்ற எண்ணத்தில், இதுவரை தான் செய்யாத அனைத்தையும் தைரியமாகச் செய்கிறார்.

இப்படி 13 நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஆதி, போலீஸ் அதிகாரி சக்ரவர்த்தியின் (ஜான் விஜய்யின்) பிடியில் சிக்கி, அவரால் தீர்க்க முடியாத என்கவுண்ட்டர் அசைன்மெண்டுகளை செய்து முடிக்கிறார். அப்போது உலகம் அழிகிறது.

ஆதி யார்? பிறகு அவர் எடுக்கும் அவதாரம் என்ன? மீண்டும் உலகம் படைக்கப்படுகிறதா? மாயர்களுக்கும் நம் மூதாதையர்களுக்கும் புராண காலத்தில் ஓர் உறவு இருந்த்தாக சொல்லப்படுகிறதே, அது என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘மாயன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஐ.டி நிறுவனத்தின் டீம் லீடராகவும், ’மாயர்களின் பிள்ளை’யாகவும் ஆதி என்ற நாயகக் கதாபாத்திரத்தில் வினோத் மோகன் நடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆங்கிலப் படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் நடித்துள்ள இவர், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்துத் தகுதிகளுடன் சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார். இதர நடிப்பைப் பொருத்த வரை கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால் முன்னணி ஹீரோவாக நிச்சயம் வலம் வரலாம்.

நாயகனின் காதலி, நாயகி கோப்பெருந்தேவியாக பிந்து மாதவி நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும், கொடுத்த வேலையைக் குறைவின்றி நிறைவாகச் செய்துள்ளார்.

போலீஸ் அதிகாரி சக்ரவர்த்தியாக வரும் ஜான் விஜய், வீரசூரனாக வரும் சாய் தீனா, முருகசூரனாக வரும் ராஜசிம்மன், சின்னாவாக வரும் ரஞ்சனி நாச்சியார் ஆகியோர் மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 நாயகியின் அப்பா ராமலிங்கமாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், தக்லஸாக வரும் கஞ்சா கருப்பு, ஆதிகாளியாக வரும் மரியா, சிறப்புத் தோற்றத்தில் வரும் பியா பாஜ்பாய் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஜே.ராஜேஷ் கண்ணா எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். மாயன் காலண்டரை மையப்படுத்தி கதை அமைத்து, மாயர்கள், ஆதிசிவன், அவ்வப்போது நாயகனைத் துரத்தும் பாம்பு போன்றவற்றை புகுத்தி சுவாரஸ்யமாக திரைக்கதை எழுதி, போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் உழைப்பைப் போட்டிருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாயன் உலகத்தை மிரட்டலாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ’பிரீயட் பிலிம்’ என்பதால் சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் திறம்பட கையாளப்பட்டுள்ளன.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார். பாடலிசையும், பின்னணி இசையும் கதை மற்றும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளன.

‘மாயன்’ – பார்க்கலாம்; ரசிக்கலாம்!