மேக்ஸ் – விமர்சனம்

நடிப்பு: கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோகிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, அனிருத் பட், உக்ரம் மஞ்சு மற்றும் பலர்

இயக்கம்: விஜய் கார்த்திகேயா

ஒளிப்பதிவு: சேகர் சந்திரா

படத்தொகுப்பு: எஸ்.ஆர்.கணேஷ் பாபு

இசை: பி. அஜனீஷ் லோக்நாத்

தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத்

இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தின் முழுக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் என்ற மேக்ஸ் (கிச்சா சுதீப்) இடைநீக்கம் முடிந்து, புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் நாளுக்கு முந்தைய இரவில், பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு, அநாகரிகமாக நடந்துகொள்ளும் இரண்டு இளைஞர்களை அடித்துத் துவைத்து, இழுத்துவந்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் இருவரும் அமைச்சர்களின் மகன்கள் என்று தெரிந்ததும் மற்ற போலீஸ்காரர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயங்குகிறார்கள். காலையில் பதவி ஏற்றவுடன் அந்த இளைஞர்கள் மீது எஃப்ஐஆர் போடுவதாகச் சொல்லிவிட்டு செல்கிறார் இன்ஸ்பெக்டர் மேக்ஸ்.

இந்நிலையில், லாக்கப்பில் இருந்த இருவரும் திடீரென்று மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள். இறந்த இளைஞர்கள் ஒரு மாநில அரசையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்த அமைச்சர்களின் மகன்கள் என்பதால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆபத்தில் இருந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் இன்ஸ்பெக்டர் மேக்ஸ், இறந்த இளைஞர்களின் உடல்களை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தவும் முடிவு செய்கிறார்.

ஆனால், இளைஞர்கள் போலீஸ் நிலையத்தில் இருக்கும் தகவல் அறிந்து, அமைச்சர்களின் அடியாட்கள் கும்பலாக வந்து போலீஸ் நிலையத்தை தாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து மேக்ஸ் தன்னையும், மற்ற போலீசாரையும் எப்படி காப்பாற்றுகிறார்? லாக்கப்பில் இருந்தவர்களைக் கொன்றது யார்? ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு சாதுர்யமான திருப்பங்களுடனும், விறுவிறுப்பு நிறைந்த வேகத்துடனும் விடை அளிக்கிறது ‘மேக்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் என்ற மேக்ஸ் கதாபாத்திரத்தில் நாயகனாக கிச்சா சுதீப் நடித்திருக்கிறார். மாஸ் மற்றும் அதிரடியில் மிரட்டியிருக்கிறார். போலீசாரை காப்பாற்றுவதற்காக அவர் வகுக்கும் வியூகங்கள் அனைத்தும் சிறப்பு. எந்த இடத்தில் மாஸ் காட்ட வேண்டும், எந்த இடத்தில் அளவாக நடிக்க வேண்டும் என்பதை மிக கவனமுடன் செய்திருப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளில் சரவெடியாக வெடிக்கிறார். மொத்தப் பட்த்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடித்திருக்கிறார். கிச்சா சுதீப்பின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான ஆக்‌ஷன் படமாக இந்த படம் அமையும் என்பது உறுதி.

வில்லன்களுக்காக உளவு பார்க்கும் கிரைம் இன்ஸ்பெக்டர் ரூபாவாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள நடிப்பும் படத்தின் திருப்பங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

தலைமைக் காவலர் ராவணனாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருக்கும் இளவரசு, பொருத்தமான நடிப்பால் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

அமைச்சர் பரசுராமாக வரும் சரத் லோகிதாஸ்வா, அமைச்சர் டேனியலாக வரும் ஆடுகளம் நரேன், வில்லன் கானியாக வரும் சுனில், உதவி ஆய்வாளர் தாஸாக வரும் ‘உக்ரம் மஞ்சு’, காவலர் ஆரத்தியாக வரும் சம்யுக்தா ஹொர்னாட், காவலர் மீனாவாக வரும் சுக்ருதா வாக்லே, காவலர் ஜெகதீஷாக வரும் அனிருத் பட், செபாஸ்டியனாக வரும் ரெடின் கிங்ஸ்லி, நரசிம்மனாக வரும் வம்சி கிருஷ்ணா, தேவராஜாக வரும் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் கார்த்திகேயா. முன்னணி ஹீரோவுக்கான மாஸ் ஆக்‌ஷன் கதையை ஒரு இரவில் நடப்பது போல் வடிவமைத்து, அதில் உணர்வுப்பூர்வமான சில விசயங்களையும் சேர்த்து படத்தை ரசிக்க வைக்கிறார். மிகப் பெரிய கூட்டத்தை தனி ஆளாக எதிர்த்து நின்று போராடும் நாயகனை சித்தரித்த விதம், அவரது அதிரடி ஆக்‌ஷன் மற்றும் புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் தன்னை நம்பியிருப்பவர்களை காப்பாற்றும் விதம் என்று எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வில்லாமல் திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க வைத்திருப்பதோடு, இறுதியில் எதிர்பார்க்காத திருப்பத்துடன், உணர்வுப்பூர்வமான முறையில் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் விஜய் கார்த்திகேயாவுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பாராட்டுகள்.

அஜனீஷ் லோக்நாத்தின் இசை, சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு, கணேஷ் பாபுவின் படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள், இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘மேக்ஸ்’ – சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்; பார்த்து ரசிக்கலாம்!