மாவீரன் கிட்டு – விமர்சனம்
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் மக்கள் மீதான சுரண்டலும், அடக்குமுறையும் ‘நவநாகரிக சமூக அமைப்பு’ என பீற்றப்படும் ‘இந்துத்துவ கார்ப்பரேட் முதலாளிய இந்தியா’வில் தொடருவது மட்டுமல்ல, நரேந்திர மோடியின் ‘இந்துத்துவ டிஜிட்டல் இந்தியா’வில் அவை கொடூரமாக மேலும் மேலும் அதிகரித்தும் வருகின்றன. ரோகித் வெமுலாக்களின் தற்கொலைகளும், உடுமலைப்பேட்டை சங்கர்களின் நட்ட நடுரோட்டு படுகொலைகளும், பசுமாட்டுக்கறியை காரணம் காட்டி தலித்துகள் கொல்லப்படும் கோர சம்பவங்களும் இதற்கு எடுத்துக்காட்டு.
அதேநேரத்தில், “இனியும் சகித்துக்கொண்டிருக்க மாட்டோம்” என எகிறி திருப்பியடிக்கும் தலித் விடுதலைப் போராட்டங்களும் நம்பிக்கையூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன. “செத்த பசுமாட்டை நாங்கள் தொட மாட்டோம். உன் மாதாவை நீயே அடக்கம் செய்துகொள்” என்று குஜராத்தை கிடுகிடுக்கச் செய்த தலித்துகளின் வீரம் செறிந்த போராட்டம் இதற்கொரு எடுத்துக்காட்டு.
இப்படி திமிறி எழுந்து திருப்பியடிப்பதை அழுத்தமாக பதிவு செய்த சமீபத்திய தமிழ் திரைப்படம், பா.இரஞ்சித் இயக்கிய ‘கபாலி’. “ஆமாடா… அப்படித் தான்’டா கால் மேல கால் போட்டு உட்காருவேன். போய் சாவுங்கடா…” என்ற ‘கபாலி’ க்ளைமாக்ஸ் வசனம், அடங்க மறுத்து திருப்பியடிக்கும் ஆவேசத்தை உலகுக்கு உரக்கச் சொன்னது. அதே திசையில் விடுதலையை நோக்கிய வீரம் மிக்க போர் பயணத்தை தொடர்கிறது, இயக்குனர் சுசீந்திரனின் ‘மாவீரன் கிட்டு’.
‘ஜீவா’ என்ற படத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்திய இயக்குனர் சுசீந்திரன், ‘மாவீரன் கிட்டு’வில் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் சாதிவெறியையும், அதை எதிர்க்கும் தலித்துகளின் நெஞ்சுரத்தையும், பிற்படுத்தப்பட்டவர் – தலித்துகள் ஒன்றாக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
முதல் காட்சியிலேயே பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சாதி ஒழிப்பு தொடர்பான நூல்கள் காட்டப்படுகின்றன.
தமிழீழத்தில் தமிழர்களின் விடுதலைக்காகத் தன்னையே விதைத்த மாவீரன் கிட்டு (எ) கிருட்டிணக்குமாரைப் போல, தமிழ்நாட்டில் தலித் மக்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்திற்கு ‘கிட்டு’ என்று பெயரிட்டிருப்பது மிகவும் பொருத்தமாகவும், நெகிழ்வாகவும் உள்ளது.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை பொதுத்தெருக்களில் கொண்டு செல்ல முடியாத அவலத்திற்கு எதிரான போர்க்களத்தில், தன்னையே தியாகம் செய்து, தானே பொதுத்தெருவில் சடலமாக வருகிறான் கிட்டு என்ற கிருட்டிணக்குமார். இது தான் ‘மாவீரன் கிட்டு’.
மயிலாடுதுறை அருகே உள்ள திருநாள்கொண்டசேரியில் அண்மையில் நடந்த தீண்டாமை வன்கொடுமை, தொடர்ச்சியாக நடந்துவரும் சாதி ஆணவப் படுகொலைகள் ஆகியவையே படத்தின் மையக்கருவாக உள்ளன.
சாதிக்கு எதிராகவும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும் சமரசமின்றிப் போராடும் கருப்புச்சட்டை சின்ராசுவாக பார்த்திபன் வருகிறார். இதுவரை நாம் பார்த்த பார்த்திபனாக இல்லாமல் முற்றிலும் கருஞ்சட்டை சின்ராசுவாகவே வாழ்ந்திருக்கிறார்.
திரைப்படத்தின் களமாக உள்ள ஆயக்குடி பகுதியில் பிறந்து, அப்பகுதி மக்களோடு மக்களாகவும், சாதி, தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும் களம் பல கண்டு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ‘ஆயக்குடி வா.ப’ என்ற வா.பழனிச்சாமி போன்ற பல பெரியார் தொண்டர்கள் வாழ்ந்த காலத்தை மீண்டும் கண்முன்னே காட்டியுள்ளார் சுசீந்திரன்.
1987-ல் பழனியில் நடப்பது போன்ற கதை. கதைப்படி, ஒரு ட்ரெடில் அச்சகம் தான் சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு அலுவலகம் போல இயங்குகிறது. அப்படிப்பட்ட அச்சகங்களை அதே 1987 கால கட்டத்திலேயே நேரிலேயே பார்த்திருக்கிறோம். இப்போது அச்சகமாக இல்லாமல், இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட திண்டுக்கல் ஜார்ஜ் அச்சகம், ஒட்டன்சத்திரம் குறிஞ்சி அச்சகம் போன்றவை எண்ணற்ற சாதி ஒழிப்புப் போராளிகளின் அலுவலகமாக இயங்கிய காலத்தை ‘மாவீரன் கிட்டு’ நினைவூட்டுகிறது. இப்போது தி.மு.க, ம.தி.மு.க, தி.க, பகுஜன் சமாஜ் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களாக உள்ள பல தோழர்களுக்கு இவை போன்ற அச்சகங்களே நாற்றங்கால்கள்.
அந்த அச்சகங்களோடு தம்மை இணைத்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கருப்புச்சட்டைகள், பெரியாரிய ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து ஏராளமான சாதிமறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்தனர். சுயசாதி மறுப்பாளர்களாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்ட சுயசாதி மறுப்பாளர்களையும் கிட்டு அடையாளம் காட்டுகிறான்.
பழனியில் தலித்துகளின் சடலத்தை பார்ப்பன அக்ரகாரங்கள் வழியாக எடுத்துச்செல்ல முடியாத நிலை 1990 வரைகூட இருந்தது. (இப்போதும் அந்த நிலை நீடிக்கிறதா எனத் தெரியவில்லை) அப்போது மிகவும் துணிச்சலாக, தனது மகனின் பிணத்தை அக்ரகாரம் வழியாகக் கொண்டு சென்ற கருப்புச்சட்டைகள் இன்றும் பழனியில் வாழ்கிறார்கள்.
பழனியாண்டவர் கலை பண்பாட்டுக்கல்லூரி, வரதமாநதி அணை, தேக்கந்தோட்டம், ஆயக்குடி காவல்நிலையம் என இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ள அனைத்துப் பகுதிகளும் 1980களின் இறுதியில் உண்மையாகவே திராவிடர் இயக்கங்களின் கோட்டையாகவே இருந்தன…
…இருந்தன என்றுதான் சொல்ல முடியும்…
1987 பீரியட் ஃபிலிம் என்பதால், அப்போது இருந்த பேண்ட், சட்டை, கண்ணாடி மாடல் – சி.டி. துணி பாவாடை, தாவணி, பாசி மாடல் – அப்போது வெளியான திரைப்படங்களின் சுவரொட்டி, சரோஜ் நாராயண்சுவாமியின் செய்திகள், எம்.ஜி.ஆர் மரணம் என மிகவும் கவனத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதை எந்த இயக்குநரும் செய்துவிட முடியும்.
ஆனால், 1987 காலத்தில் பழனி பகுதியில் இயங்கிய சமுதாய இயக்கங்கள், சமுதாயத்தின் நிலை, சமுதாயத்திற்காக உழைத்த போராளிகளின் வாழ்க்கை முறை, அவர்கள் இயங்கும் முறை என அனைத்தையும் மிகச் சரியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கு மிகப்பெரும் திறன் வேண்டும். இப்படம் சுழலும் கதைக்களத்தில் அதே கால கட்டத்தில் அதே பகுதியில் இயங்கிய பலருக்கும் மறந்துவிட்ட பண்பாட்டைச் சரியாகப் படமாக்கிய சுசீந்திரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இப்படத்துக்கு பாடலாசிரியர் யுகபாரதி எழுதியிருக்கும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் தீப்பொறி பறக்கிறது. “காலங்காலமா அடி வாங்கிட்டிருந்தவன், திமிறி திருப்பி அடிச்சான்னா ‘திமிரு’ங்கிறாங்க” என்று பார்த்திபன் பேசும் ஒரு வசனமே சொல்லிவிடுகிறது – தலித் போராளிகளின் நியாயத்தை.
“தெருவில் இறங்கி கூட்டமாக போராடுவது சட்டவிரோதம்” என பார்த்திபனை எச்சரிக்கையில், “இதை சட்ட விரோதம்னு சொல்றீங்க; ஆனா, சட்டமே எங்களுக்கு விரோதமா இருந்தா, நாங்க என்ன செய்யமுடியும்?” என திருப்பிக் கேட்கையில், நீதி தேவதை குற்ற உணர்வில் குறுகித்தான் போவாள்.
“ஓட்டுப் போடுறதைத் தவிர நமக்கென்ன உரிமை இருக்கு?”, “விட்டுக்கொடுத்து போகச் சொல்றீங்க. விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை” என கருப்புச்சட்டை பார்த்திபன் ஒவ்வொரு முறை கொந்தளிக்கும்போதும் யுகபாரதியின் எழுத்து, வாளாய் வீசுகிறது. “அதிகாரத்தில் இருக்கிறவங்க தவறுன்னு நாங்க சொல்லலே; அதிகாரமே தவறுன்னு சொல்றோம்” என்பது போன்ற ஓராயிரம் நெத்தியடி வசனங்களை எழுதியிருக்கும் யுகபாரதிக்கு பாராட்டுக்கள்.
தமிழ் சினிமா உள்ள வரை பேசப்படும் – போற்றப்படும் – படமாக உருவாகியிருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்துக்கு தங்களது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ள பார்த்திபன், விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, கயல் பெரேரா உள்ளிட்ட நடிகர் – நடிகையர், தயாரிப்பாளர்கள் ஐஸ்வியர் சந்திராசாமி, டி.என்.தாய்சரவணன், ராஜிவன், ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா, எடிட்டர் காசி விஸ்வநாதன், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.
‘மாவீரன் கிட்டு’ – அனைவரும் அவசியம் பார்த்து கொண்டாட வேண்டிய படம்!