மதிமாறன் – விமர்சனம்
நடிப்பு: வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்சன் கோவிந்த், பிரவீன் குமார்.இ மற்றும் பலர்
இயக்கம்: மந்த்ரா வீரபாண்டியன்
இசை: கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு: பர்வேஸ்
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா
தயாரிப்பு: ஜிஎஸ் சினிமா இண்டர்நேஷனல்
தயாரிப்பாளர்; ஜிஎஸ் பிரதர்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
மனிதர்களின் உயரத்துக்கும், அவர்களது அறிவுக் கூர்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; சராசரி உயரம் வளராதவர்கள் கூட அபரிமிதமான அறிவுத் திறனைப் பெற்றிருக்கலாம்; எனவே, அவர்களை “குள்ளர்கள்” என்று உருவக்கேலி செய்வது மடமை என்ற கருத்தை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துவதற்காக வந்திருக்கிறது ‘மதிமாறன்’ திரைப்படம்.
தென் தமிழ்நாட்டில், திருநெல்வேலியில் கதை ஆரம்பமாகிறது. இங்கு தபால்காரராகவும், “சாமி கும்பிடும் கம்யூனிஸ்ட்” ஆகவும் இருப்பவர் சுந்தரம் (எம்.எஸ்.பாஸ்கர்). இவருடைய மகன் நாயகன் நெடுமாறன் (வெங்கட் செங்குட்டுவன்). மூன்றடி உயரத்துக்கு மேல் வளராதவர். இதனால் “குள்ளன்” என்று வெளியாட்களால் கேலியும், கிண்டலும், அவமானமும் செய்யப்படுபவர். ஆனால், படிப்பிலும் புத்திக்கூர்மையிலும் கெட்டிக்காரர்.
நெடுமாறனுக்கு, எல்லா பெண்களையும் போல இயல்பான உயரத்தில் ஒரு சகோதரி. பெயர் மதி (இவானா). சகோதரனும், சகோதரியும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் மதி, தனது பேராசிரியரைக் காதலித்து, விரும்பத்தகாத கர்ப்பம் தரித்து, வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி காதலனுடன் சென்றுவிடுகிறார். இதை மானக்கேடாகக் கருதும் “சாமி கும்பிடும் கம்யூனிஸ்ட்” ஆன சுந்தரம், ஒரே நேரத்தில் தன் மனைவியுடன் சேர்ந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
இதற்கிடையே, சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் காணாமல் போவது, அவர்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவது போன்ற பயங்கர சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை எல்லாம் ஒரே மர்ம ஆசாமி தான் செய்கிறார் என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், அந்த மர்ம ஆசாமி யார் என்பதை கண்டுபிடிக்க இயலாமல் போலீஸ் திணறுகிறது.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய தன் சகோதரி மதியைத் தேடி திருநெல்வேலியிலிருந்து சென்னை வருகிறார் நெடுமாறன். வந்த இடத்தில், மர்ம ஆசாமியால் கடத்தப்பட்ட ஒரு பெண்ணின் பெற்றோரை சந்திக்கிறார். அவர்களது கவலையை அறிந்து, அவர்களின் மகளைக் கண்டுபிடிக்க, தனது கல்லூரித் தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி (ஆராத்யா) உதவியுடன் புலனாய்வில் இறங்குகிறார். அவரது புத்திக்கூர்மை அவருக்கு அபாரமாக கை கொடுக்கிறது…
கடத்தப்பட்ட பெண்ணின் கதி என்ன என்பதை நெடுமாறன் கண்டுபிடித்தாரா? சீரியல் கில்லரான அந்த மர்ம ஆசாமி யார்? அவன் இந்த குற்றச்செயல்களை எப்படி அரங்கேற்றினான்? இந்த புலனாய்வுக்குப் பிறகாவது நெடுமாறன் உருவக்கேலி செய்யப்படுவது நிறுத்தப்பட்டதா? என்பன போன்ற கேள்விகளுக்கு கிரைம் திரில்லர் ஜானரில் விடை அளிக்கிறது ‘மதிமாறன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் நெடுமாறனாக நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். அவரின் இயற்கையான உயரத்தை மனதில் வைத்து இந்த கதையும், அவரது கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டிருப்பது போல் இருப்பதால், அவர் எமோஷனலாக கனெக்ட் ஆகி, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். தன்னை உருவக்கேலி செய்யும்போதும், தன் தாய் – தந்தை தூக்கில் தொங்கும்போதும் உணர்ச்சிகரமாக நடித்திருப்பவர், சென்னையில் மர்ம ஆசாமி பற்றி புலனாய்வு செய்யும்போது, துப்பறியும் ஜேம்ஸ்பாண்டுக்கு உரிய உடல்மொழியையும், சிந்தனைத் திறனையும் அருமையாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். எந்தவொரு மாஸ் ஹீரோவையும் விட அட்டகாசமாக ஒரு காட்சியில் நடனமாடி, அப்ளாஸை அள்ளுகிறார். பாராட்டுகள் வெங்கட் செங்குட்டுவன்.
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தில் நாயகியாக நடித்து இளசுகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இவானா, இதில் நாயகனின் சகோதரி மதியாக நடித்திருக்கிறார். அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் தான்; எனினும், எந்த இளம் நடிகையும் ஏற்கத் தயங்கும் சிக்கலான கதாபாத்திரம். அக்கதாபாத்திரத்தை துணிச்சலாக ஏற்று, அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் இவானா.
நாயகனின் கல்லூரித் தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பிரபாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆராத்யா, அழகிலும் அளவான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
நாயகனின் அப்பாவாக, தபால்காரராக, “சாமி கும்பிடும் கம்யூனிஸ்ட்” ஆக, முற்போக்குச் சிந்தனைக்கு பொருத்தமில்லாமல் மனைவியோடு சேர்ந்து தூக்கில் தொங்குபவராக சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். குறைபாடுகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது அவரது கதாபாத்திரம். எனினும் நெல்லைத் தமிழில் பேசி, யதார்த்தமாக நடித்து, அக்குறைபாடுகளை கவனிக்க விடாமல் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
போலீஸ் உயர் அதிகாரி கட்டபொம்மனாக வரும் ஆடுகளம் நரேன், அவரது மகனாக, போலீஸ் அதிகாரி சுதர்சனாக வரும் சுதர்சன் கோவிந்த், குடியிருப்பின் காவலாளி கருப்பசாமியாக வரும் பவா செல்லத்துரை, சந்திர மாணிக்கவேலாக வரும் பிரவீன் குமார் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன், உயரக் குறைபாடு காரணமாக உருவக்கேலிக்கு ஆளாகும் ஒரு இளைஞனின் கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருப்பதோடு, அதனுடன் ஒரு சீரியல் கில்லரின் கிரைம் திரில்லர் கதையையும் இணைத்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. தபால்காரர் பணிக்கு உரிய கௌரவம் கொடுத்திருக்கும் இயக்குநர், அஞ்சல்துறையை முன்னேற்ற, அனைத்து டெலிவரிகளும் அஞ்சல்துறை வழியாகவே செய்யப்பட வேண்டும் என்ற அருமையான யோசனையையும் முன்வைத்திருக்கிறார். ஆனால், பகுத்தறிவுக்கும், காதலுக்கும் எதிரான பிற்போக்குக் கருத்துகளைக் கொண்டவராக இயக்குநர் இருப்பார் என்ற எண்ணத்தை இந்த படம் ஏற்படுத்துகிறது. அவர் முற்போக்குக் கருத்துகளுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டால் புதுமை இயக்குநர் என பெயர் எடுக்க வாய்ப்பு உண்டு.
பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றன.
‘மதிமாறன்’ – சிற்சில குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், தரமான படைப்பு; அனைத்துத் தரப்பினரும் கண்டு களிக்கலாம்!