மருது – விமர்சனம்
லோடுமேன் வேலை பார்க்கும் விஷாலுக்கு, அப்பத்தா என்றால் அவ்வளவு பாசம். ‘நீயெல்லாம் மனுஷியே கிடையாது, தெய்வம்!’ என்று தன்னிடம் நெகிழ்ந்து உருகும் பேரன் விஷாலிடம் ஸ்ரீதிவ்யாவைக் காதலிக்கச் சொல்கிறார் அப்பத்தா. காதல் கடந்துபோக, கலவரம் துரத்த, அப்பாத்தாவை வில்லன் கடத்த… அப்புறமென்ன… வழக்கம்போல வில்லனுக்கும் விஷாலுக்கும் டிஷ்யூம் டிஷ்யூம்தான்!
பட விளம்பரங்களில் ‘விஷால் நடிக்கும்..’ என்று இருக்கிறது. அதை, ‘விஷால் அடிக்கும்…’ என்று கூட மாற்றலாம். அந்தளவுக்கு அடிக்கு அடி அடிதடிதான்! ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’ என டைட்டில்கள்தான் வித்தியாசமே தவிர, கதைக்களமும், இடமும் அதே தெக்கத்திப் பக்கம். ஆர்ம்ஸ் ஏற்றிய உடம்போடு லோடுமேன் கேரக்டருக்குக் கச்சிதமாய்ப் பொருந்தியிருக்கிறார் விஷால். அவர் போடும் ‘கொக்கி’யில் மூட்டைகளைவிட அதிகமாகக் கிழிவது வில்லன்களின் உடம்புதான். அந்தளவுக்கு பார்க்கும் வில்லன்களையெல்லாம் கத்தி, கடப்பாறை, அரிவாளால் குத்தி எடுக்கிறார். ஆனால், மனிதர் என்ன செய்தாலும் நம்பத் தோன்றுமளவுக்கு செம கெத்து. அதுவும் சங்கம், பஞ்சாயத்து, பொறுப்பு என்று கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் ‘நடிகர் சங்க விவகாரத்தை’ வைத்து பில்டப். நன்றாகவே எடுபடுகிறது!
அப்பத்தாவாக நடித்திருக்கும் பாட்டி கொளப்புள்ளி லீலா, மலையாள நடிகை. தமிழ் சினிமாவின் ’பாட்டி க்ளப்புக்கு நல்வரவு. சச்சின் இடத்தைப் பிடிக்கிற கோலி கணக்காக, மனோரமாவின் சாயலைக் காட்டுகிற நடிப்பில், தமிழ் படங்களில் நிரந்தர இடம்பிடிக்கும் வாய்ப்பு தெரிகிறது. பயப்படும்போது கண்கள், உதடுகள், தோள்கள் எல்லாமே நடிக்கிறது இவருக்கு. விஷால், சூரியிடம் பேசும்போது பாசமிக்க பாட்டியாகி அன்பைப் பொழிகிறார். வழக்கமாக படங்களில் ஹீரோவின் நண்பன் செய்யும் லவ்வுக்கு ஐடியா வேலையை, இவரே விஷாலுக்கு செய்கிறார். சபாஷ் அப்பத்தா. ஆனால், பல இடங்களில் பின்னணிக் குரல்தான் ‘சிங்க்’ ஆகவே இல்லை (பாட்டிக்கு மட்டுமல்ல… படத்தில் பலருக்கும் டப்பிங் உதைக்கிறது!)
தமிழ் சினிமாவின் பாரம்பரிய ரசிகர்கள் விரும்பும் குடும்பக் குத்துவிளக்கு, பொறுப்பு பொண்டாட்டி கேரக்டரில் ஸ்ரீதிவ்யா. தோற்ற மாற்றம் முதல் புருவ ஏற்ற இறக்கம் வரை அழகிக்கு அத்தனை பாந்தமாகப் பொருந்துகிறது. ஆனால், கல்யாணத்துக்கு முன் கோவிலுக்குள் எச்சில் துப்புபவனை அடிப்பதில் இருந்து, வில்லனை மிரட்டுவது வரை துடுக்கும் துணிச்சலுமாக இருந்தவரை, கல்யாணம் முடிந்ததும் ஒரே பாட்டில் ’படுக்கையறை, துணி துவை, அடுப்படியில் சமை’ என ‘சின்சியர் மனைவி’ மோடுக்கு மாற்றிவிட்டார்கள்! இதனால் இயக்குநர் இந்த உலகத்துக்கு சொல்ல வரும் சேதி என்னவோ!?
வில்லனாக ‘தாரை தப்பட்டை’ ஆர்.கே.சுரேஷ் அவ்வளவு கச்சிதம். பதவிக்காக அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் ரணகளம், ரத்தக்களம். தாடிக்குள் புதைந்திருக்கும் அந்தக் கண்களிலும், குட்டியூண்டு தெரிகிற சதைகளிலும் அனல் ஆக்ரோஷம். ராதாரவி ஸ்க்ரீனில் இருந்தாலே, அவரது ஆளுமை சூழ்நிலையை சூடாக்குகிறது. நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவி – விஷால் இடையிலான சம்பவ சாயலிலேயே படத்திலும் இருவருக்கும் சிற்சில சிச்சுவேஷன், பற்பல வசனங்களை வைத்திருப்பது… சூப்பரப்பு! (சாம்பிள்: ராதாரவியின் வலதுகை நமோ நாராயணன் ‘அண்ணன் நெனைச்சா உன் பேரனுக்கு என்ன பதவி வேணும்னாலும் கிடைக்கும்’ என்று விஷாலின் அப்பத்தாவிடம் சொல்ல, அந்த அப்பத்தா, ’யாரும் என் பேரனுக்குப் பதவி வாங்கிக் குடுக்க வேண்டிய அவசியமில்லை. என் பேரன் நெனைச்சா எந்தப் பதவிலயும் அவனே போய் ஒக்கார்ந்துக்குவான். உங்கொண்ணனுக்கு பதவி வேணும்னா என் பேரன்கிட்ட கேளு”!) வழக்கம் போல, படத்தில் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார் சூரி.
இடைவேளை வரை ஒரு மாதிரி இழுத்துப் பிடித்துப் போகும் படம், இடைவேளைக்குப் பிறகு இழுவையோ இழுவை என்று இழுக்கிறது. பொறுமையைச் சோதிக்கும் ஃப்ளாஷ்பேக்குகள் வேறு. இமானின் இசையில் ’அக்கா பெத்த ஜட்கா வண்டி’ பாடல் ஈர்க்க, ரணகள அடிதடி அத்தியாயங்களில் பின்னணி இசையே புழுதி கிளப்புகிறது. பார்த்த கதை, பழகிய களம்… ஆனால், அதிலும் சண்டைக் காட்சிகளில் அடி ஒவ்வொன்றையும் இடி மாதிரி இறக்குகிறது அனல் அரசுவின் சண்டைப் பயிற்சி. களத்துமேட்டுப் புழுதிகளில் கூட அதகளம். இயக்குநர் முத்தையாவுக்கு இது மூன்றாவது படம். குட்டிப்புலி, கொம்பன் என்று அதே மாவை வேறு வேறு கதாபாத்திரங்களை வைத்து அரைக்கிறார். அது வெந்தும் வேகாமல் இருந்தாலும், ’பழக்கப்பட்டவர்களுக்கு’ப் பிடிக்கலாம். தமிழ் சாயலைப் பிரதிபலிக்கும், தமிழர்களுக்குப் பிடித்த பல விஷயங்களைக் கொண்டிருக்கிறது படம். எல்லாம் சரி…. ஆனால், காட்சிப் பின்னணி, வசனம், பாடல் வரிகளில் கூட சாதிப் பெருமை தொனிக்கும் பெருமிதம் தேவையா?! முந்தைய படங்களில் ‘பூசுனதுபோலவும், பூசாததுபோலவும்!’ சாதிப் பெருமை பேசிய இயக்குநர், இதில் நேரடியாகவே இறங்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எப்போதும் வன்மமும் குரோதமுமாக வன்முறை வெறியுடனே இருப்பார்கள் என்று ‘பூஜிப்பது’ ஆரோக்யமா?!
இதைவிடக் கொடுமை படத்தில் ஒருவரை வித்தியாசமாகக் கொலை செய்வதை, ‘படம் போட்டுப் பாகம் வரையும்’ விதமாக விவரிக்கிறார்கள். அவ்வளவு விரிவான விவரணைகள் தேவையா? ‘குடும்பக் காவியம்’ என்று விளம்பரப்படுத்தக் கூடிய ’டீஸர் கட்’ காட்சிகள் படத்தில் ஏகம். அதை நம்பி படத்துக்கு குழந்தைகளோடு வந்தால், அந்தக் காட்சிகள் குழந்தைகள் மனதில் என்ன தாக்கத்தை உண்டாக்கும். இதில் ஆங்ரி பேர்ட் போன்ற விளையாட்டுகள் குழந்தைகள் மனதில் வன்முறையை விதைக்கும் என்று கதறிக் கொண்டிருக்கிறோம்..! (படத்துக்கு UA என சென்சார் சான்றிதழ்)
இயக்குநர் முத்தையாவுக்கு ஒரு வேண்டுகோள்: நாலு பாட்டு, ஏழு ஃபைட்டு, காதல், அப்பத்தா சென்டிமென்ட், வில்லத்தனம், இடையிடையே கொஞ்சம் சிரிப்பு… என ஆதிகால டிரெண்டில் கமர்ஷியல் வெற்றியைக் குறிவைத்துக் கூட படம் எடுங்கள். ஆனால், அதில் சாதி, வன்முறை வன்மம் விதைத்து…. பார்வையாளர்கள் மனதில் ஆதிகால பகையுணர்ச்சியை விதைக்காதீர்கள்!