மீண்டும் ‘மருதநாயகம்’ முயற்சி: லைக்கா அதிபருடன் கமல் ஆலோசனை!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/0a1e-10.jpg)
1997ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் ஆரம்பமான படம் மருதநாயகம். இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வரவழைத்து பிரம்மாண்டமான முறையில் கமல் நடத்தியிருந்தார். ஆனால் அதிக பொருட்செலவு மற்றும் அத்தருணத்தில் இந்தியா நடத்திய பொக்ரான் அணுகுண்டு பரிசோதனையால் இந்தியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்டவை காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நின்று போனது.
தொடர்ந்து அவ்வபோது ‘மருதநாயகம்’ படம் மீண்டும் துவக்கப்படுவதைப் பற்றி கமல்ஹாசனும், அதை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்களும் பேசி வருகின்றனர். “லண்டனில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அவர் மருதநாயகத்தை தயாரிக்க தயாராக இருக்கிறார். படத்தை எப்போது துவங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போது என்னை அழையுங்கள் என கூறியிருக்கிறார்” என்று கமல் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில், கமல் மற்றும் லைக்கா அதிபர் சுபாஷ் கரண் இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இச்சந்திப்பில் ‘மருதநாயகம்’ படத்தின் பொருட்செலவு மற்றும் படப்பிடிப்பு நாட்கள் ஆகியவை குறித்துப் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது, காலில்பட்ட அடி குணமாகி வரும் சூழலில் அடுத்தாண்டு துவக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை மீண்டும் துவங்க திட்டமிட்டு இருக்கிறார் கமல்ஹாசன்.