‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ள ஆரவ்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2019/11/m8.jpg)
எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தாபர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், “நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்துகொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற பொழுதுபோக்குப் படத்தை தனது பாணியிலிருந்து விலகாமல், மேம்பட்ட வடிவில் கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக ரசிப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
அப்பழுக்கற்ற நடிப்பை இப்படத்தில் வழங்கியிருக்கும் ஆரவ், சில சமயங்களில் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நடிப்பில் புதிய பரிணாமங்களைத் தொட்டிருக்கிறார். தனித்துவம் வாய்ந்த உடல் மொழி, மேனரிசம், ஆகியவற்றுடன் இரண்டு வகையான வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆரவ். சில சமயங்களில் இரண்டு வகையான பாத்திரங்களையும் ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட பெருமுயற்சி செய்து, பரிபூரணமாக அவற்றைச் செய்தது குறிப்படத்தக்கது” என்றார்
ராதிகா சரத்குமார், ரோகிணி, நாசர், நிகிஷா படேல், ஆதித்யா, தேவதர்ஷினி, பாகுபலி புகழ் பிரபாகர், முனீஷ்காந்த், சாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், சாம்ஸ் மற்றும் சில முக்கிய நடிக நடிகையரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
சைமன் கே.கிங் இசை ஏற்கெனவே பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.குகன் கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சரண் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார்.