மார்க் ஆண்டனி – விமர்சனம்
நடிப்பு: விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா, அபினயா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, சென்ராயன், விஷ்ணு பிரியா காந்தி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு: அபி நந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு: விஜய் வேலுக்குட்டி
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
தயாரிப்பு: ‘மினி ஸ்டூடியோ’ எஸ்.வினோத் குமார்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது
உங்களுக்கு ‘டைம் டிராவல் போன்’ என்ற அதிசய கருவி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கருவி மூலம் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களோடு பேசி, அக்கால நிகழ்வுகளை மாற்றியமைக்க முடியும் என்றால், எத்தனை சந்தோஷப்படுவீர்கள்? என்னென்ன கடந்தகால சம்பவங்களையெல்லாம் உங்களுக்கு சாதகமாக மாற்றியமைப்பீர்கள்…?
அப்படிப்பட்ட ‘டைம் டிராவல் போன்’, இரண்டு தாதாக்கள் மற்றும் அவர்களது மகன்களின் வாழ்க்கையில் செய்யும் சுவாரஸ்யமான மாயாஜாலங்கள் தான் `மார்க் ஆண்டனி’ திரைப்படம்.
விஞ்ஞானி சிரஞ்சீவி (செல்வராகவன்) பல ஆண்டுகள் ராப்பகலாக ஆராய்ச்சி செய்து, 1975-ல் ‘டைம் டிராவல் போன்’ என்ற அதிசய கருவியைக் கண்டுபிடிக்கிறார். அக்கருவியைப் பயன்படுத்தி, இறந்தகாலத்துக்குப் பேசி, தன் மனைவியின் கால் ஊனத்தை சரி செய்வதோடு, அவரது விருப்பப்படி அவரை ஆசிரியையாகவும் ஆக்குகிறார். வாழ்க்கையில் இன்னும் நிறைய அதிசயங்கள் செய்ய முடியும் என்ற நிலையில் அவர் கொல்லப்படுகிறார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1995-ல், அந்த டைம் டிராவல் போன் மெக்கானிக் மார்க் (விஷால்) கைக்கு வருகிறது…
மெக்கானிக் மார்க், பல ஆண்டுகளுக்குமுன் படுகொலை செய்யப்பட்ட தாதா ஆண்டனியின் (இன்னொரு விஷால்) மகன். படுமோசமானவர் என்ற கெட்ட பெயர் எடுத்த அப்பா ஆண்டனி, தன் அம்மாவையே கொன்றவர் என்பதால் மார்க்குக்கு அப்பா என்றாலே வெறுப்பு. ஆண்டனியின் உயிர் நண்பரும் இன்றைய தாதாவுமான ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா), மார்க் மீது அளவற்ற பாசத்தைப் பொழிந்து வளர்க்கிறார். இதனால் அவரையே அப்பாவாகப் பாவித்து வாழ்ந்து வருகிறார் மார்க். ஆனால் ஜாக்கி பாண்டியனின் மகனான மதன் பாண்டியன் (இன்னொரு எஸ்.ஜே.சூர்யா), தன் மீது அப்பா பாசம் காட்டவில்லை என்று அவரை வெறுக்கிறார்.
இதற்கிடையே, படுமோசமான தாதா ஆண்டனியின் மகன் என்ற ஒரே காரணத்தால் மார்க்கின் காதல் திருமணம் தடைபடுகிறது. இதனால் விரக்தியின் உச்சத்திலிருக்கும் மார்க், தன் கைக்கு வந்த டைம் டிராவல் போன் மூலம், கடந்த காலத்தில் தன் வாழ்க்கையின் நிகழ்ந்த கசப்பான விஷயங்களை மாற்றியமைக்க விரும்பி, அப்போது வாழ்ந்த தன் அப்பா, அம்மா, சிறுவன் மார்க் ஆகியோருடன் பேசுகிறார். அப்போது தான் அப்பா ஆண்டனி நல்லவர் என்பதும், அம்மாவை அவர் கொல்லவில்லை என்பதும் தெரிய வருகிறது.
உண்மையில் மார்க்கின் அம்மாவை கொன்றது யார்? ஜாக்கி பாண்டியன் மார்க் மீது பாசத்தைப் பொழிய என்ன காரணம்? ஆண்டனி படுமோசமானவர் என்ற பிம்பம் எப்படி ஏற்பட்டது? டைம் டிராவல் போன் மார்க், ஆண்டனி, ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் ஆகிய நால்வரின் வாழ்க்கையில் என்னென்ன கூத்துகளை நிகழ்த்துகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடையளிக்கிறது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
அப்பா ஆண்டனி, மகன் மார்க் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஷால். அப்பா ஆண்டனி தாதா என்பதால் அந்த கதாபாத்திரத்தில் வரும் விஷால் முரட்டு சுபாவத்துடன் மிரட்டலாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் தூள் பரத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் மொட்டைத் தலையை ஆட்டியபடி வந்து அனகொண்டா துப்பாக்கியால் தடியர்களை சுட்டுக்கொல்வது வேற லெவல் ஆக்ஷன். சுருக்கமாக சொன்னால், மாஸ் ஹீரோவுக்கு உரிய அத்தனை அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு முற்றிலும் மாறுபட்டவராக மகன் மார்க் கதாபாத்திரத்தில் வரும் விஷால் ரொம்ப சாதுவாக நடித்திருக்கிறார். மெக்கானிக் என்பதால் அதற்கு தேவையான நடிப்பை மட்டும் வழங்கியிருக்கிறார். நடிப்பில் மட்டும் அல்ல, வசன உச்சரிப்பிலும் இரு வேடங்களுக்கிடையில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் விஷால்.
விஷாலைப் போல எஸ்.ஜே.சூர்யாவும் அப்பா ஜாக்கி பாண்டியன், மகன் மதன் பாண்டியன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். டைட்டிலில் அவர் பெயர் போடும்போது ‘நடிப்பு அரக்கன்’ என்ற அடைமொழி சேர்த்திருப்பதற்குப் பொருத்தமாக நடிப்பில் அசுரத்தனம் காட்டியிருக்கிறார். பிரேமுக்கு பிரேம் அவர் செய்திருக்கும் அட்டகாசம் ரகளையாக, ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. குறிப்பாக அப்பா எஸ்.ஜே.சூர்யாவும், மகன் எஸ்.ஜே.சூர்யாவும் போனில் பேசும் காட்சியின்போது, பார்வையாளர்கள் மெய் மறந்து செய்யும் ஆரவாரம் சொல்லில் அடங்காது. அதுபோல், சில்க் ஸ்மிதாவை சந்திக்கும் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து, கைதட்டலும், சிரிப்பலையும், விசில் சத்தமுமாக திரையரங்கமே அதிர்கிறது. எஸ்.ஜே.சூர்யா இந்த படத்துக்கு மிகப் பெரிய பிளஸ்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மாவின் கதாபாத்திரம் வலுவானதாக இல்லாததால், அவரது நடிப்பு சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், நிழல்கள் ரவி, அபிநயா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான கதையைத் தேர்வு செய்திருப்பதன் மூலம், அவரைப் பற்றிய பழைய பார்வையை முழுமையாக மாற்றியிருக்கிறார். இக்கால சினிமாவில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நிதானமாக யோசித்து, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். இரண்டு தாதாக்களுக்கு இடையிலான நட்பு மற்றும் துரோகம் என்ற வழக்கமான கதைக்கருவுக்குள் ‘டைம் டிராவல் போன்’ என்ற அதீத கற்பனையைப் புகுத்தி, மிகவும் சிக்கலான, கொஞ்சம் தவறினாலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடிய கதையை கட்டமைத்து, எவ்வித குழப்பமும் ஏற்படுத்தாத வகையில் மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களுக்கு பிடிக்கும் விதமாய் புதுவித நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷனும் கலந்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். பாராட்டுகள்.
காட்சிகளை மெய்மறந்து பார்க்கும் வகையில் வன்ணமயமாக படமாக்கிய அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, 1980கள் காலகட்ட திரைப்பட பாடல்களை பொருத்தமான இடங்களில் கச்சிதமாக பயன்படுத்தியிருப்பதோடு, திரையரங்கே இரண்டாய் பிளந்துபோகுமோ என அஞ்சுமளவுக்கு வெளுவெளுவென வெளுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, கதையை சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக விஜய் வேலுக்குட்டி நேர்த்தியாக செய்திருக்கும் படத்தொகுப்பு, பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன் ஆகியோரின் அசாத்திய சண்டை பயிற்சி ஆகியவை இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.
‘மார்க் ஆண்டனி’ – ஜாலியான மனநிலையில் போனால் மகிழ்ச்சியாகப் பார்த்து ரசிக்கலாம்!