‘பரியேறும் பெருமாள்’ இயக்குநரின் புதிய படம்: கலைப்புலி தாணு தயாரிக்கிறார்!
பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இத்தகவல்களை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பரியேறும் பெருமாள்’ படம் பார்த்துவிட்டேன். அமர்க்களமாக இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட யதார்த்தமும் வாழ்க்கை முறையும் நாம் அங்கே இருப்பது போல் உள்ளது. மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து நான் நடிக்கவுள்ள படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். அவர் போன்ற திறமைசாலிகளுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு குறித்து இயக்குனர் பா.இரஞ்சித், “மிக அற்புதமான செய்தி. அண்ணன் `கலைப்புலி’ தாணு அவர்களின் அரவணைப்பில், தன் மிகச் சிறந்த நடிப்பில் சிறக்கும் தனுஷ் அவர்களை இயக்கும் பொறுப்பை ஏற்ற தம்பி மாரி செல்வராஜுக்கு என் இதயம் கனிந்த அன்பும், வாழ்த்துகளும். பெரும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
தனுஷின் ட்வீட்டை தன் ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டுள்ள கலைப்புலி தாணு, “இந்நாள் பொன்னாள் உவகை பொங்கும் நன்னாள்” என மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.