மனுசங்கடா – விமர்சனம்

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா…” என்ற கவிஞர் இன்குலாப்பின் ஆவேசப் பாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்படாமல் யாரும் இருக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் உள்ளக் குமுறலாய் வெடித்த இப்பாடலில் இருந்துதான் இப்படத்தின் தலைப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முடிவிலும் இப்பாடல் மிகப் பொருத்தமாக ஒலிக்கிறது…

தேசிய விருது பெற்ற இயக்குனரான அம்ஷன் குமாரால் உருவாக்கப்பட்டு, பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுப் பெற்ற இப்படம், ‘திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை’ என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மைக் கதை இது தான்:-

# # #

நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ‘திருநாள் கொண்டச்சேரி’ என்ற கிராமத்தில், 26-11-2015 அன்று, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குஞ்சம்மாள் என்ற எண்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தினார். பெருமழை காரணமாக ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாளின் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர்.

குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில், “சடலத்தை உங்களுக்கு வழக்கமான வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில், 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.

அடுத்த ஒரு மாதத்தில் குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து (வயது 90) 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்திக் இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிடுகிறது..

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல வற்புறுத்துகின்றனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்துகிறார்கள். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைக்கிறார்கள். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள், செல்லமுத்து சடலம் வைக்கப்பட்டுள்ள வீட்டில் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் அப்பகுதிக்கு மின் தொடர்பை துண்டிக்கிறார்கள். குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாக்கிறார்கள். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்குகிறார்கள். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்படுகிறார்கள். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

நிலைமை கட்டுமீறவே, மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக காவல்துறை பொய்யாய் வாக்குறுதி கொடுத்து, சடலத்தை தூக்கிவரச் செய்து, சாலை பிரியும் இடத்தில் தடியடி நடத்தி, தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து, சடலத்தைக் கைப்பற்றி, வயல்வழியே அவசர அவசரமாய் தூக்கிச் சென்று, குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலத்தையும் புதைக்கிறது.

காவல்துறையின் உறுதுணையுடன் வெற்றிபெற்றுவிட்ட ஆதிக்க சாதி வெறியர்கள், தங்கள் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்….

# # #

இந்த உண்மைக் கதையை, அதன் வலி குறையாமல் சிற்சில மாற்றங்களுடன், எவ்வித சமரசமுமின்றி அப்படியே திரையில் 90 நிமிட படமாக கொண்டுவந்திருக்கும் இயக்குனர் அம்ஷன் குமாருக்கு பாராட்டுகள். எனினும், சின்னஞ்சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதாலும், 1970களிலும் 80களிலும் கோலோச்சிய “ஆர்ட்ஃபிலிம்’ பாணியிலான மேக்கிங் என்பதாலும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் சற்று குறைவாக இருக்கிறது என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும்.

நாயகனாக ராஜீவ் ஆனந்த், நாயகியாக ஷீலா ராஜ்குமார், நாயகனின் தாயாக மணிமேகலை, ஊர்த்தலைவராக சேது டார்வின், வக்கீலாக கருணாபிரசாத் நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் நடிப்பு செயற்கையாகவும், மிகையாகவும் இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

‘மனுசங்கடா’ – சமகால சாதியக் கொடுமை பற்றிய முக்கியமான பதிவு! குறைகளைப் பெரிதுபடுத்தாமல் ஒதுக்கிவிட்டு, கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்!!

0a1b