“என்னை மிரட்டி அவமானப் படுத்தினார்”: பாஜக ஆளுநர் மீது மம்தா குற்றச்சாட்டு!
“மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது” என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியாவில் நடந்த மத மோதல்கள் குறித்து ஆளுநர் திரிபாதியை, பாஜக பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசியது. அதன் பின், ஆளுநர் தன்னை மிரட்டி, அவமானப்படுத்தியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தலைமை செயலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். பாஜகவுக்கு சாதகமான முறையில் அவர் பேசிய விதத்தால் நான் அவமானத்துக்கு ஆளானதாக உணர்ந்தேன். இவ்வாறு நீங்கள் பேசக் கூடாது என தெரிவித்தேன். அவர் (ஆளுநர்) பாஜகவின் மாவட்ட தலைவர் போல நடந்து கொண்டார். சட்டம் ஒழுங்கு குறித்து பெரிதாக பேசினார். அரசமைப்பு சட்டத்தினால் ஆளுநர் பதவிக்கு வந்தவர் அவர்.. நான் மக்களால் முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். ஆளுநரின் கருணையால் இந்த பதவிக்கு வரவில்லை. ஆளுநர் இவ்வாறு செய்யக் கூடாது. அவர் தனது பதவியின் மாண்பை புரிந்து நடக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா கூறினார்.
மம்தாவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.