“எங்களை மன்னித்து விடு மது”: நடிகர் மம்மூட்டி உருக்கம்

சாப்பாட்டு அரிசியை திருடியதாக பலர் சேர்ந்து தாக்கியதில் கேரளாவில் மது என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் கேரளாவில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி தனது கருத்தை வேதனையோடு ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:

மதுவை ஆதிவாசி எனச் சொல்லாதீர்கள். அவன் என் தம்பி. அவனை எல்லோரும் சேர்ந்து கும்பலாக கொன்றுவிட்டீர்களே. மதுவை உங்கள் தம்பியாக, மகனாகக் கூட நினைக்க வேண்டாம். ஒரு மனிதனாக நினைத்திருந்தால் கூட இப்படி செய்திருக்க மாட்டீர்கள். அவனும் நம்மைப் போல் ஒருவன் தானே? பசிக்காக அரிசியை எடுத்தவனை திருடன் என்று சொல்வதா?

இந்த இருண்ட சமூகத்தில் இருந்து நாம் அழிக்க வேண்டியது பசியையும், பட்டினியையும் தானே தவிர, ரத்தமும் சதையுமாக அதற்கு பலியாகும் மனிதனை அல்ல. அவன் இந்த சமூகத்தில் வாழ வேண்டிய ஒருவன். அவனுக்கு அதற்கான உரிமைகள் உள்ளது.

எங்களை மன்னித்து விடு மது.

இவ்வாறு மம்மூட்டி தெரிவித்திருக்கிறார்.