‘செல்லாது அறிவிப்பை’ வாபஸ் பெற நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால், மம்தா 3 நாள் கெடு!
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை நரேந்திர மோடி 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள அசத்புர் மண்டி பகுதியில் நடந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “மோடி அறிவித்த இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினை 3 நாட்களுக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். மோடியின் இந்த திட்டத்தின் மூலம் நாடு 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றுவிடும். இது போன்றதொரு அசாதாரண சூழ்நிலையை நெருக்கடி காலத்திலும் பார்த்ததில்லை” என்றார்..
“வங்கியின் வரிசையில் நிற்கும் பொது மக்களுடன், மோடியும் நின்று பார்த்தால்தான் மக்களின் வலி என்னவென்று புரியும்” என்றார் அவர்.
டெல்லியில் இன்று ரிசர்வ் வங்கிக்கு எதிரே நடைபெற்ற போராட்டத்தில், மம்தா பானர்ஜியுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டார். அப்போது “ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது ஜனநாயக இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்” என்று குற்றம் சாட்டிய கேஜ்ரிவால், “மக்கள் தங்களது சேமிப்புகளை வங்கியில் செலுத்தி அதில் கிடைக்கும் ரூ.10 லட்சம் கோடியை, மோடி தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு முதலீடாகக் கொடுத்துவிடுவார்” என்றார்.
மோடியின் நோட்டு நடவடிக்கையை எதிர்த்து நடந்த போராட்டத்துக்குப் பிறகு, இரண்டு மாநில முதல்வர்களும் ரிசர்வ் வங்கி ஆளுனரை சந்தித்துப் பேசினர்.