மகாராஜா – விமர்சனம்
நடிப்பு: விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நடராஜ் (நட்டி), அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யா பாரதி, சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், சச்சனா நெமிதாஸ், பேபி ஷைனிகா, ‘ராட்சசன்’ வினோத் சாகா, ‘பாய்ஸ்’ மணிகண்டன், காளையன், கல்கி, பி.எல்.தேனப்பன், பாரதிராஜா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: நித்திலன் சாமிநாதன்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பு: ஃபிலோமின் ராஜ்
இசை: பி.அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு: சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா
தமிழ்த் திரையில் துணை நடிகராக சாதாரண பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, விடாமுயற்சியுடன் கூடிய தொடர் போராட்டத்தின் விளைவாக ஹீரோவாக உயர்ந்து, வெற்றிகரமான நாயகனாக மட்டுமின்றி, வெற்றிகரமான வில்லனாகவும், வெற்றிகரமான குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்று, தமிழ்த் திரையுலகில் தன்னிகரில்லா தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் என்பதாலும், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டையும், பார்வையாளர்களின் அளவான வரவேற்பையும் பெற்ற ‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதனின் இரண்டாவது திரைப்படம் என்பதாலும் ‘மகாராஜா’ திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…
சென்னையில், (பி.எல்.தேனப்பனுக்குச் சொந்தமான) சலூன் கடையில், முடி திருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் மகாராஜா (விஜய் சேதுபதி). ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக இருக்கும் அவரது மனைவி (திவ்யா பாரதி), ஒரு கோர விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.
பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு – சென்னை கே.கே.நகரில் சொந்தமாய் சலூன் கடை வைத்திருக்கிறார் மகாராஜா. பள்ளியில் படிக்கும் தனது பதின்ம வயது மகள் ஜோதியுடன் (சச்சனா நெமிதாஸ்) பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருகிறார்.
ஒருநாள். காதோரம் காயத்துக்கு கட்டுப்போட்ட நிலையில் போலீஸ் நிலையம் செல்லும் மகாராஜா, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தன்னை சிலர் தாக்கிவிட்டு, தன் வீட்டிலிருந்த ‘லட்சுமி’யைத் தூக்கிச் சென்று விட்டதாகவும், ஸ்போர்ட்ஸ் கேம்ப்பிற்காக வெளியூர் சென்றிருக்கும் தன்னுடைய மகள் ஜோதி திரும்பி வருவதற்குள் லட்சுமியைக் கண்டுபிடித்து மீட்டுத் தர வேண்டும் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜனிடம் (நடராஜ் – நட்டி) வேண்டுகோள் விடுக்கிறார்.
“லட்சுமி என்பது யார்? உன் மனைவியா? மகளா?” என்று இன்ஸ்பெக்டர் வரதராஜன் கேட்க, மகாராஜா சொல்லும் பதிலைக் கேட்டு மொத்த போலீஸ் நிலையமும் விழுந்து விழுந்து சிரிக்கிறது. வீட்டில் அண்டா சைசில் இருந்த, சுமார் 300 ரூபாய் மதிப்பிலான ஒரு இரும்பு குப்பைத் தொட்டிக்குத் தான் அவர் ’லட்சுமி’ என்று பெயர் வைத்திருந்தாராம். அதைத் தான் திருடிக்கொண்டு போய் விட்டார்களாம்.
ஆரம்பத்தில் நக்கலும் நையாண்டியும் செய்து, மகாராஜாவின் புகாரை உதாசினப்படுத்திய இன்ஸ்பெக்டர் வரதராஜன், ‘லட்சுமி’யை கண்டுபிடித்துக் கொடுத்தால் 7 லட்சம் ரூபாய் தருவதாக மகாராஜா சொன்னதும் பரபரப்படைகிறார். ’லட்சுமி’யைத் திருடியவர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து ’லட்சுமி’யை பறிமுதல் செய்து மகாராஜாவிடம் ஒப்படைக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கிறார். போலீசாரை முடுக்கிவிடுகிறார். போதாதென்று தானே நேரடியாக தீவிர விசாரணையில் இறங்குகிறார்.
‘லட்சுமி’ மீட்கப்பட்டதா? திருடியவர்கள் கைது செய்யப்பட்டார்களா? ஒரு சாதாரண குப்பைத் தொட்டியை மீட்பதற்கா மகாராஜா 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வந்தார்? இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் ரகசியம் ஒளிந்திருக்குமோ? ஆம் எனில், அந்த ரகசியம் என்ன? உண்மையில் மகாராஜாவின் வீட்டிற்கு வந்தவர்கள் யார்? அன்று வீட்டில் என்ன நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘மகாராஜா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, ஆரம்பத்தில் முடி திருத்தும் தொழிலாளியாகவும், பின்னர் சொந்தமாய் சலூன் கடை நடத்துபவராகவும், மகாராஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மகளுக்காக எதையும் செய்யும் பாசமுள்ள அப்பாவாக திரையில் ஒளிர்ந்திருக்கிறார். சோகம் ததும்பும் இறுக்கமான முகத்தாலும், ‘லட்சுமி’ பற்றி சொல்லி போலீஸ் நிலையத்தில் மொக்கை வாங்கினாலும், அது பற்றி கவலைப்படாமல், சொன்னதையே சொல்லும் வெள்ளந்திப் பேச்சாலும், குற்றவாளிகளைக் கண்டவுடன் வெகுண்டெழுந்து பொளந்துகட்டும் ஆவேசத்தாலும் முழுக்க முழுக்க தனது கதாபாத்திரமாகவே வாழ்ந்து படத்தின் மொத்த பாரத்தையும் கம்பீரமாக சுமந்திருக்கிறார் விஜய் சேதுபதி. கதாநாயகனாக ‘96’ படத்துக்குப் பிறகு பெரிய வெற்றியைச் சுவைக்க இயலவில்லையே என்ற விஜய் சேதுபதியின் கவலையை இந்த 50-வது படம் போக்கி, புத்துயிர் அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வில்லனாக, முகமூடித் திருடன் செல்வமாக நடித்திருக்கிறார் பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப். கூட்டாளிகளுடன் வீடு புகுந்து பெண்களின் வாயையும், கைகளையும் கட்டிப்போட்டு திருடுவது, அந்த வீட்டிலேயே சமைத்து வயிறார சாப்பிடுவது, அந்த வீட்டுப் பெண்களை வன்புணர்வு செய்ய கூட்டாளிகள் விரும்பினால் அதற்கு அனுமதி கொடுப்பது, முகமூடிகளையும் தாண்டி தங்கள் முகங்களை அந்த அப்பாவி பெண்கள் பார்த்துவிட்டால், அவர்களை சுட்டுக்கொல்வது என கொடூர வில்லனாக அவர் மிரட்டியிருக்கிறார். மறுபுறம் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்ப்பவராகவும், தன் மனைவியையும், பெண் குழந்தையையும் அளவு கடந்து நேசிப்பவராகவும் அசத்தியிருக்கிறார். ஒன்றுக்கொன்று முரணான இவ்விரு பரிமாணங்களையும் மிகக் கச்சிதமாக திரையில் வெளிப்படுத்தி, தானொரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருக்கான டப்பிங்கில் சற்று கூடுதல் சிரத்தை எடுத்திருக்கலாம்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜனாக நடராஜ் (நட்டி) நடித்திருக்கிறார். நல்லவரா, கெட்டவரா என்று யூகிக்க முடியாத கதாபாத்திரத்தை அருமையாக, மிகத் திறமையாக கையாண்டு, ரசிக்கத் தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் பதின்ம வயது மகளாக, படக்கதையின் உயிராக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் சச்சனா நெமிதாஸ் நடித்திருக்கிறார். படத்தில் குறைந்த நேரமே வந்தாலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் உருக்கமாக நடித்து பார்வையாளர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.
போலீஸ் இன்ஃபார்மர் நல்லசிவமாக சிங்கம்புலி நடித்திருக்கிறார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துவந்த அவர், இதில் நினைத்தே பார்க்க முடியாத மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து, பார்வையாளர்களின் ஈரக்குலையை நடுங்கச் செய்துள்ளார்.
வில்லன் செல்வத்தின் மனைவி கோகிலாவாக வரும் அபிராமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாளாக வரும் அருள்தாஸ், ஹெட் கான்ஸ்டபிள் குழந்தையாக வரும் முனிஷ்காந்த், தனாவாக வரும் ‘பாய்ஸ்’ மணிகண்டன், சலூன் கடைக்காரராக வரும் பி.எல்.தேனப்பன், நாயகனின் சலூன் கடையில் வேலை செய்யும் கோபால் தாத்தாவாக வரும் பாரதிராஜா, பள்ளிக்கூட பி.டி.ஆசிரியை ஆசிஃபாவாக வரும் மம்தா மோகன்தாஸ், பேபி ஜோதியாக வரும் பேபி ஷைனிகா, சபரியாக வரும் ‘ராட்சசன்’ வினோத்சாகர், டிவிஎஸ் 50 திருடனாக வரும் கல்கி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி, அதற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
’குரங்கு பொம்மை’ திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ’பேய்க்கதை சீசன்’, ’ரவுடிக்கதை சீசன்’ என்பது போல இப்போது ’சிறுமிகள் வன்புணர்வுக் கதை சீசன்’ என்று சொல்லுமளவுக்கு தமிழில் இப்பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் வதவதவென்று வந்து குவிந்துகொண்டிருப்பதால் இயக்குநர் நித்திலன் தானும் இந்த ஜோதியில் கலந்திருக்கிறார். ”தன் மகள் என்று தெரியாமல், அவளை தன் கூட்டாளி பாலியல் வன்புணர்வு செய்ய உடந்தையாக இருக்கிறான் ஒருவன். அவள் தன் மகள் என்பது பின்னொரு நாளில் அவனுக்குத் தெரிய வந்தால் அவன் என்ன பாடுபடுவான்?” என்பது இப்படக்கதையின் கரு. இதை எளிமையான கதையாக நேர்கோட்டில் சொன்னால் ரொம்ப சாதாரணமான ‘பழிவாங்கும் கதை’ படமாக இருக்கும் என்பதால், முன்னும் பின்னுமாகச் சொல்லும் நான்-லீனியர் உத்தியில் திரைக்கதை அமைத்து, சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டிருக்கிறார் இயக்குநர். இது புது ட்ரீட்மெண்ட் போல காட்டிக்கொள்வதற்கும், ஒரு வண்டி லாஜிக் மீறலை மூடி மறைப்பதற்கும் வசதியாக இயக்குநருக்கு இருந்துள்ளது. என்றபோதிலும், எந்த சம்பவம் முன்னர் நடந்தது, எந்த சம்பவம் பின்னர் நடந்தது என்பதை புரிந்து கொள்வதில் பார்வையாளர்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறது. மேலும், பாலியல் வன்புணர்வுக் காட்சிகளை சித்தரிப்பதில் இயக்குநருக்கு தார்மீக சமூகப் பொறுப்புணர்வு கிஞ்சித்தும் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இன்னும் எச்சரிக்கையாக அணுக வேண்டும் இயக்குநரே!
‘மகாராஜா’ – ஒருமுறை பார்க்கலாம்!