மாஃபியா 1 – விமர்சனம்

இயக்குநராக அறிமுகமான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றி மூலம் எதிர்பார்ப்புக்கு உரிய இயக்குநர்’ என்ற நற்பெயர் பெற்ற கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீசாகியிருக்கிறது ‘மாஃபியா – 1’.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆர்யன் (அருண் விஜய்). அவரது குழுவில் அவருக்கு உறுதுணையாக சத்யா (பிரியா பவானி சங்கர்), வருண் (பாலா ஹாசன்) ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

ஆர்யன் தலைமையிலான போதைப்பொருள் தடுப்புக்குழு சென்னையில் முக்கிய இடங்களில் திடீர் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையின்போது கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டுபிடிக்கிறார் ஆர்யன். அவரது அதிரடி நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தும் சின்ன சின்ன ஆட்கள் மட்டுமே சிக்குகிறார்கள். பெரும் புள்ளிகளை நெருங்க முடியவில்லை. அந்தக் கும்பலின் தலைவன் யார் என்பதற்கான சின்ன துப்பு கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தும் கும்பலின் தலைவன் யார் என தனக்குத் தெரியும் என்றும்,, அவனைப் பற்றிய கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும்வரை யாரிடமும் இதைப்பற்றிச் சொல்ல முடியாது என்றும் ஆர்யனின் உயரதிகாரி கூறுகிறார். ஆனால், திடீரென அவர் கொலை செய்யப்படுகிறார். அவருடன் சேர்ந்து ஆதாரங்களைத் திரட்டிய சமூகப் போராளி ஒருவரும் (தலைவாசல் விஜய்யும்) கொலை செய்யப்படுகிறார்.

இவர்களைக் கொன்றது யார்,  போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் யார் என ஆர்யனால் கண்டுபிடிக்க முடிந்ததா? போதைப்பொருள் கடத்தலையும், புழக்கத்தையும் தடுக்க முடிந்ததா? என்பது மீதிக் கதை.

0a1c

ஆர்யனாக வரும் நாயகன் அருண் விஜய், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனை நெருங்க முயற்சிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

நாயகி பிரியா பவானி சங்கர், மற்ற நாயகிகள் போல் காதல், ரொமான்ஸ் என்று இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் திறம்பட நடித்து, கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக மனதில் பதிகிறார் பிரசன்னா.

0a1d

இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை மிகவும் ஸ்டைலிஷாக எடுத்துள்ளார். ’துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றியால் ’மாஃபியா 1’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே பூர்த்தி செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

இரண்டாம் பாதியை போல் முதல் பாதியும் வேகமாக இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். கிளைமாக்ஸில் கொடுக்கும் டுவிஸ்ட், இனி வரவிருக்கும் ‘மாஃபியா – 2’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இந்தப் படத்திற்கென ஒரு ‘தீம்’மை உருவாக்கி, அதற்கேற்றபடி டைட்டில் கார்டுகளை வடிவமைத்திருப்பது அட்டகாசம். படத்தில் பாராட்ட வேண்டிய மற்றொரு அம்சம், ஒளிப்பதிவு. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அட்டகாசம் செய்திருக்கிறார் கோகுல் பினோய்.

பின்னணி இசை படத்துக்கு பலம்.

‘மாஃபியா 1’ – ‘மாஃபியா 2’ மீதான ஆவலைத் தூண்டும் டீசர்!