மெட்ராஸ்காரன் – விமர்சனம்

நடிப்பு: ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன், சரண், கீதா கைலாசம், தீபா சங்கர், லல்லு மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: வாலி மோகன் தாஸ்

ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ்.குமார்

படத்தொகுப்பு: வசந்தகுமார்

இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: ‘எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்’ பி.ஜெகதீஷ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

நாயகன் சத்யாவின் (ஷேன் நிகம்) குடும்பம் புதுக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டது. சத்யா சிறுவனாக இருந்தபோதே அவ்வூரில் வாழ்வது சிரமமாக இருந்ததால், ‘கெட்டும் பட்டினம் சேர்’ என்ற பழமொழிக்கேற்ப அவரது அப்பாவும் (பாண்டியராஜன்), அம்மாவும் (கீதா கைலாசம்) தங்கள் மகனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். இங்கு வந்தபிறகு வறுமை நீங்கி குடும்பம் வளம் பெறுகிறது. சத்யாவும் வளர்ந்து இளைஞராகி மீரா (நிஹாரிகா) என்ற சென்னைப் பெண்ணை காதலித்து வருகிறார். அவர் எந்த ஊரைவிட்டு சிறுவயதில் வெளியேறினாரோ, அந்த சொந்த ஊரில் தன் திருமணத்தை கோலாகலமாக ஜாம் ஜாம் என்று நடத்த விரும்புகிறார். அதன்படி திருமண ஏற்பாடுகள் புதுக்கோட்டையில் தடபுடலாக நடக்கின்றன என்பதுடன் இப்படம் ஆரம்பம் ஆகிறது.

திருமணத்துக்கு சற்றுநேரத்துக்கு முன், ஹோட்டலில் தங்கியிருக்கும் தன் வருங்கால மனைவி மீராவை சந்திக்க காதலுடன் காரில் செல்கிறார் சத்யா. எதிர்பாராத விதமாக அவரது கார், உள்ளூர்காரரான துரைசிங்கத்தின் (கலையரசன்) மனைவியான நிறைமாதக் கர்ப்பிணி கல்யாணியை (ஐஸ்வர்யா தத்தா) இடித்துத் தள்ளி விபத்தை ஏற்படுத்திவிடுகிறது. கல்யாணி அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். அங்கு கல்யாணி உயிர் பிழைத்தபோதிலும் அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட பெரிய பிரச்சனையாகி விடுகிறது. சத்யாவின் திருமணம் நின்றுவிடுகிறது. அவர் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இரண்டாண்டு சிறைவாசத்துக்குப்பின் வெளியே வரும் சத்யா, எல்லாம் தடம் மாறிப்போயிருப்பதை பார்க்கிறார். அன்பான அவரது அப்பா இறந்துவிட்டிருக்கிறார். ஆசைக்காதலி மீரா வேறொருவரை திருமணம் செய்துகொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவற்றுக்கெல்லாம் மேலாக, தான் ஏற்படுத்திய கார் விபத்துக்கும், கல்யாணியின் வயிற்றிலிருந்த குழந்தை இறப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உண்மையை அறிகிறார். குழந்தையைக் கொன்ற உண்மைக் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.

உண்மையில் கார் விபத்தில் நடந்தது என்ன? குழந்தை இறந்தது எப்படி? அந்த மரணத்துக்குக் காரணமான குற்றவாளியை சத்யா கண்டுபிடித்தாரா? குழந்தையைக் கொன்ற கொலைப்பழியிலிருந்து மீண்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதை நாயகன் சத்யாவாக ஷேன் நிகம் நடித்திருக்கிறார். அவர் தமிழ் திரைக்கு புதுசு என்றாலும், மலையாளத் திரையுலகில் வளரும் கதாநாயகனாகத் திகழ்பவர். இந்த அனுபவம் தந்த நடிப்புத் திறமையால் சத்யா கேரக்டரை அசால்டாக கையாண்டு, பார்வையாளர்களுக்குப் பிடித்தமானதாக ஆக்கிக் காட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தியிருக்கிறார். அத்தைகளுக்கு ஐஸ் வைப்பது, முறைப்பெண்களை கிண்டல் செய்வது, காதலியை கொஞ்சுவது, பெற்றோர்களிடமும், தாய்மாமன் (கருணாஸ்) உள்ளிட்ட உறவினர்களிடமும் அன்பு செலுத்துவது என இளமைத் துள்ளலுடன் துறுதுறுவென இயல்பான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். கதை சீரியஸான கட்டத்துக்குள் நுழைந்தவுடன் அதற்கேற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதை நாயகி மீராவாக நிஹாரிகா நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும், நாயகனின் காதலியாக குறைவின்றி நடித்திருக்கிறார். ‘அலைபாயுதே’ படத்தின் “காதல் சடுகுடு குடு…” என்ற பாடலின் ரீமிக்ஸில் நாயகனிடம் மிதமிஞ்சிய நெருக்கம் காட்டி, கிளாமரைக் கொட்டி, பார்வையாளர்களை சூடேற்றியிருக்கிறார்.

துரைசிங்கம் கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். சில சமயம் நல்லவர் போலவும், சில சமயம் கெட்டவர் போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் அவரது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

துரைசிங்கத்தின் மனைவி கல்யாணியாக ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். வழக்கமாக கவர்ச்சி உடையணிந்து கிளாமரான ரோல்களில் வரும் அவர், இதில் குடும்பப் பாங்கான பெண்ணாக வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதை முடிச்சை இறுதியில் அவிழ்க்கும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் அதை நன்றாக உள்வாங்கி, திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மாவாக வரும் கீதா கைலாசம், தாய்மாமனாக வரும் கருணாஸ், அத்தையாக வரும் தீபா சங்கர், நண்பராக வரும் லல்லு, முத்துப்பாண்டியாக வரும் சூப்பர் சுப்புராயன், மணிமாறனாக வரும் சரண் உள்ளிட்டோர் தத்தமது பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ். மிக எளிய ஒற்றைவரிக் கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு அருமையாக திரைக்கதை அமைத்து, சஸ்பென்ஸ் அவிழ்ந்துவிடாமல் கட்டிக்காத்து, இரண்டு மணி நேரத்திற்குமேல் ஓடும் அளவிற்கு படத்தை விறுவிறுப்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். தனது முந்தைய படமான ‘ரங்கோலி’ மூலம் ’நம்பிக்கைக்கு உரிய இயக்குநர்’ என்ற நற்பெயரைப் பெற்ற இயக்குநர் வாலி மோகன் தாஸ், இந்த படத்தின் மூலமும் அந்த பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளார். எதிர்காலத்தில் இன்னும் நல்ல நல்ல படங்களைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள்.

சாம்.சி.எஸ் இசையில் திருமணப் பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக மட்டும் இன்றி கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்றவாறும் இருக்கிறது. பின்னணி இசை வேகமான திரைக்கதைக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் வலிமை சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா, ஆக்‌ஷன் காட்சிகளை மிரட்டலாக்க் காட்சிப்படுத்தியிருக்கிறது. படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார் ஓவர் டைம் போட்டு கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளின் விறுவிறுப்பில் தெரிகிறது.

‘மெட்ராஸ்காரன்’ – எல்லா ஊர்களிலும் உள்ள ஆக்‌ஷன் பிரியர்களுக்கானவன்!