மாயவன் – விமர்சனம்
திகிலூட்டும் பேய்க்கதைகளுக்கான அடிப்படை மீது சிற்சில மாற்றங்கள் செய்து, அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த அதீத கற்பனைகளைப் படரவிட்டு, பேய் இல்லாமலேயே மிரட்டும் திக் திக் படமாக ‘மாயவன்’ படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஹாரர் படமாக படைத்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளரும், அறிமுக இயக்குனருமான சி.வி.குமார்..
‘மனித உடலுக்கு மரணம் உண்டு; ஆனால் உயிருக்கு மரணம் இல்லை. எனவே, மனிதன் இறக்கும்போது அவனது உடலை விட்டு வெளியேறும் ஆவி, வெவ்வேறு மனிதர்களுக்குள் புகுந்துகொண்டு, அவர்களை தன் இஷ்டம் போல் ஆட்டிப்படைக்கும்’ என்பது தான் பேய்க்கதைகளுக்கான அடிப்படை. இதை சிறிது மாற்றி, ‘மனித உடலுக்கு மரணம் உண்டு; ஆனால், அவனது ஞாபகங்களுக்கு மரணம் இல்லை. எனவே, ஒரு மனிதனின் மூளைக்குள் இருக்கும் ஞாபகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் நகலெடுத்து வைத்தால், அவன் இறக்கும்போது அவனது ஞாபகங்கள் வேறொரு மனிதனின் மூளைக்குள் புகுந்து அழிவின்றி வாழும். இப்படி சாகாவரம் பெற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ ஒரு விஞ்ஞானியின் ஞாபகங்கள் – ஒரு பேய்க்கு இணையாக – கொடுமைகள் செய்தால் என்ன ஆகும்’ என்று யோசித்தால், அது தான் ‘மாயவன்’ படக்கதையின் அடிப்படை!
இந்த அடிப்படைக் கதையை சொல்வதற்கு அமைத்துக்கொண்ட திரைக்கதை ரூட் என்னவென்றால், சென்னையில் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நாயகன் சந்தீப் கிஷன். அவர் ஒரு ரவுடியை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடும்போது, ஒரு வீட்டில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தற்செயலாகப் பார்க்கிறார். உடனே ரவுடியை அப்படியே விட்டுவிட்டு கொலையாளியை விரட்டிச் சென்று ஒருவழியாய் மடக்கிப் பிடிக்கிறார். அப்போது அந்த கொலையாளி பயங்கரமாகத் தாக்க, சந்தீப் படுகாயமடைந்து மரணத்தின் வாசல் வரை செல்ல நேர்கிறது. கொலையாளியும் மரணித்துப் போகிறான். மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேரும் சந்தீப், ஒரு நடிகை கொலையுண்டு கிடப்பது பற்றிய தகவல் அறிந்து அங்கு செல்லும்போது, இந்த கொலையில் முந்தைய கொலையின் சாயல் இருப்பது கண்டு பதட்டமாகிறார். முந்தைய கொலையைச் செய்த கொலையாளி இறந்துவிட்ட நிலையில், இந்த கொலையிலும் அவன் தொடர்பான தடயங்கள் இருப்பது எப்படி என்று குழம்புகிறார். இது பேயின் அட்டூழியம் இல்லை எனில் வேறு யாருடைய கைங்கர்யம் என்று தடுமாறுகிறார். உண்மையை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை, சாகசங்களை அறிவியல் புனைவு க்ரைம் த்ரில்லர் பாணியில் மயிர்கூச்செரிய சித்தரிக்கிறது ‘மாயவன்’.
‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ போன்ற தரமான, வித்தியாசமான, வெற்றிப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ‘ஒரு மனிதனின் மூளையில் உள்ள ஞாபங்களை இன்னொரு மனிதனுக்கு மாற்றுவதன் மூலம் அந்த ஞாபங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சாகாமல் வைத்திருப்பது’ என்ற அறிவியல் புனைவை மையமாகக் கொண்டு, முதல் படத்திலேயே பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சி.வி.குமாருக்கு வாழ்த்துக்கள்.
நேர்மறை கதாபாத்திரத்தின் சாகசம் என்ன, எதிர்மறைக் கதாபாத்திரத்தின் குற்றப் பின்னணி என்ன என்பது குறித்த சஸ்பென்ஸை இரண்டாம் பாதி வரைக்கும் நீட்டிக்கச் செய்வதில் இயக்குநர் சி.வி.குமாரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. சாதாரண நபர்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், சுத்தத்துக்கான எண்ணம், திடீர் வினோத பழக்கங்கள் கடைபிடிப்பது குறித்து சொல்லப்படும் விளக்கம் எல்லாம் நம்பும்படியாக உள்ளது. கொஞ்சம் கூட அலுப்பு ஏற்படுத்தாமல், விறுவிறுப்பாக, ஜனரஞ்சகமாக கதையை நகர்த்திச் சென்று, தரமான வெற்றிப்பட இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சி.வி.குமார். பாராட்டுக்கள்.
நாயகன் சந்தீப் கிஷன், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கான தோரணையில் கவனம் ஈர்க்கிறார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் செயல்பட முடியாமல் தவிப்பது, மனநல மருத்துவரிடம் கோபம் கொந்தளிக்கப் பேசுவது, ‘கேஸை முடிச்சுக் காட்றேன் சார்’ என நம்பிக்கை காட்டுவது, குற்றத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டுவது என இலக்கு நோக்கி சரியாகப் பயணித்து, நாயகன் பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் சந்தீப் கிஷன்..
கதையின் முக்கியத்துவம் கருதி நாயகி லாவண்யா திரிபாதிக்கு மனநல மருத்துவர் என்ற நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட்’ என்ற பெயரில் போதனைகள் செய்து பணம் கறக்கும் ‘மோட்டிவேஷன் குரு’ கதாபாத்திரத்தில் வரும் டேனியல் பாலாஜி, தன் பாத்திரம் உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்.
படத்தின் பிற்பாதியில் ஜாக்கி ஷெராஃப் சில காட்சிகளே வந்தாலும் கம்பீரமான நடிப்பால் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்து, பார்வையாளர்களின் இதயப் படபடப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.
.பாக்ஸர் தீனா, மைம் கோபி, ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், பகவதி பெருமாள் ஆகியோர் தங்களது தேர்ந்த பாத்திரங்கள் வழியே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.
கோபி அமர்நாத்தின் கேமரா அறிவியல் உலகின் விபரீதத்தையும், நியூரோ அறிவியல் வளர்ச்சியின் ஆபத்தையும் தொழில்நுட்ப ரீதியில் ரசிகர்களுக்கு பிரமாதமாக கடத்துகிறது.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். பின்னணி இசையில் தனது தனி பாணியை நிரூபித்திருக்கிறார்.
லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு அருமை.
‘மாயவன்’ – வித்தியாசமான, புதுமையான முயற்சி! நிச்சயம் வரவேற்கலாம்!