“காதல் இந்த சமூகத்தை நிச்சயம் மாற்றியே தீரும்”: இயக்குனர் பா.ரஞ்சித் நம்பிக்கை!

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. சுசீந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

முதல் முறையாக பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தை சந்திரசாமி, தாய் சரவணன், ராஜீவன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது படக்குழு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா.இரஞ்சித், பாண்டிராஜ், ரவிகுமார், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

விழாவில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது:

இப்படத்தின் ட்ரெய்லரையும், பாடல்களையும் பார்க்கும்போது, ஒரு அசலான கிராமத்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்று  தோன்றுகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் வரும் கிராமங்கள் என்னவாக இருக்கிறது, கிராமத்து தெருக்கள் என்னவாக இருக்கிறது, கிராமத்தில் வாழும் மக்கள் எப்படிப்பட்ட அடையாளத்துடன் இருக்கிறார்கள் என்று எனக்குள் ஒரு பெரிய கேள்வி இருக்கிறது. நான் படம் பண்ண வேண்டும் என்று வந்ததிலிருந்து இந்த கேள்வியுடன் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தைப் பார்த்தபோது, நான் அடைந்த சந்தோஷம் மிகப் பெரியது. கிராமத்தின் விளையாட்டிற்குள் இருக்கும் ஒரு அரசியலை அனைவரும் ரசிக்கும்படி மிக அழகாக வணிக சினிமாவில் காட்சிப்படுத்தி இருந்தார். அந்த படம் பார்த்த இரவு முழுவதும் நான் அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.

இன்றைய கிராமங்களில் பொது பயன்பாட்டிற்கென இருக்கும் தெரு, குளம் போன்ற அரசுப் பொதுவுடைமை தற்போது என்னவாக இருக்கிறது, யாருடைய சொந்தமாக இருக்கிறது என்கிற ஒரு கேள்வி இருக்கிறது. அந்த கேள்விக்கு ‘மாவீரன் கிட்டு’ நிச்சயம் ஒரு பதிலாக இருக்கும் என நம்புகிறேன். இந்த படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும்  அதைதான்  திருப்பித்  திருப்பி சொல்ல வருகின்றன.

“இந்தக் காதல் இருக்கிறதே… அது சும்மாவே இருக்காது” என்றொரு வசனம் இப்படத்தின் ட்ரெய்லரில் இருக்கிறது. இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை ஏற்படுத்தும். ஆமாம், நிச்சயமாக “இந்த” காதல் “இந்த” சமூகத்தை சும்மாவே விடாது. இந்த சமூகத்தை நிச்சயமாக மாற்றியே தீரும். காதலால் புரட்சியை உண்டுபண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.

அந்த வகையில் சுசீந்திரன், யுகபாரதி, இமான் கூட்டணியில் உருவாகியுள்ள  இந்தப்படம்  சமூகத்துக்கு நல்ல கருத்தைச் சொல்லக்கூடிய படமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றியடைய வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. கமர்ஷியல் ரீதியாக வெற்றியடைந்தால் மட்டுமே இந்த மாதிரியான படங்களை இயக்க இயக்குநர்களும், தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள்.

தமிழ் ரசிகர்கள் எந்தவொரு படத்தையும் தரம் பிரித்துப் பார்ப்பதே கிடையாது. அவர்களை மகிழ்விக்கும் எந்தவொரு படத்தையும் அவர்கள் கொண்டாட தவறியதில்லை.

கமர்ஷியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ‘மாவீரன் கிட்டு’ ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு பா.இரஞ்சித் பேசினார்.