பார்வையற்ற மாற்றுத் திறனாளி எழுதிய ‘மானசி’ பாடல்கள் வெளியீடு!
ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி எழுதி சாதனை படைத்துள்ளார். அவர் – திண்டுக்கல் சாமிநாதன். படம் – ‘மானசி’.
மூவி மேஷன்ஸ் – எம்.ஜே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஏ.பாஹின் முகமது, மேத்யூ ஜோசப் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘மானசி’.
நரேஷ்குமார் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் ஹாரிசா நாயகியாக இதில் அறிமுகமாகிறார். இவர்களுடன் தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் நவாஸ் சுலைமான். இவர் மலையாளத்தில் பிரபலமான இயக்குனர் கமல் மற்றும் தமிழ், மலையாளத்தில் பிரபலமான இயக்குனர் பாசில் போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் திண்டுக்கல் சாமிநாதன் என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி எழுதி சாதனை படைத்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னை எம்.எம். திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கம் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்.
இப்படம் பற்றி இயக்குனர் நவாஸ் சுலைமான் பேசுகையில், “கதாநாயகன் அன்பு(நரேஷ்குமார்)வின் குலத்தொழிலே ஆடு மேய்ப்பது தான். அவன் அந்த ஆடுகளை தனது குடும்பத்து உறுப்பினர்களாகவே கருதி பாசம் காட்டி பராமரித்து வருகிறான். கருதுகிறான். அவனைப் பொறுத்தவரை யாருக்கும் ஆடுகள் தீங்கு நினைக்காத ஜீவன்கள். அப்படி நினைக்கிற அவனையே பதற வைத்து விடுகிறது ஒரு ஆடுக்குட்டி. அது காணாமல் போனதால் பதைபதைத்து விடுகிறான்.
“காணமல் போன அந்த ஆட்டுக்குட்டி கிடைத்ததா? இல்லையா? என்பதை நெகிழ்ச்சியுடன் படமாக உருவாக்கி உள்ளோம். உயிரோட்டமான கமர்ஷியல் படைப்பாக ‘மானசி’ தேனி, கம்பம், உத்தமபாளையம், போடி, ஊத்துக்காடு, கோம்பை போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் உருவாகி உள்ளது” என்றார்.
வசனம் – இருவி
ஒளிப்பதிவு – கண்ணன் பட்டேல்
இசை – ஷிவ்ராம்
பாடல்கள் – திண்டுக்கல் சாமிநாதன்
கலை – அஜெயன்
நடனம் – விவேக்
எடிட்டிங் – அச்சுவிஜயன்
தயாரிப்பு மேற்பார்வை – பி.முத்தையா
ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி