மாமன்னன் – விமர்சனம்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், அழகம்பெருமாள், சுனில் மற்றும் பலர்

இயக்கம்: மாரி செல்வராஜ்

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

படத் தொகுப்பு: செல்வா.ஆர்,கே.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

தயாரிப்பு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சதீஷ் குமார் – சிவா (டீம் எய்ம்)

சமூக ஏற்றத்தாழ்வு உள்ள இரண்டு அரசியல் குடும்ப வாரிசுகளுக்கு இடையிலான மோதல் தான் ‘மாமன்னன்’ திரைப்படம். ஒன்று – இடைநிலை ஆதிக்க சாதியைச் சேர்ந்த அரசியல் குடும்ப வாரிசு. மற்றொன்று – ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த அரசியல் குடும்ப வாரிசு. இக்கதை தென் மண்டலத்தில் அல்ல; மேற்கு மண்டலம் எனப்படும் கொங்கு மண்டலத்தில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியான சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக இருப்பவர் ரத்தினவேலு (பகத் பாசில்). பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். தனது தந்தையின் அரசியல் வாரிசாக கட்சிப் பதவிக்கு வந்தவர். ‘தனக்கு மேலே இருப்பவனிடம் தோற்கலாம்; தனக்கு சமமாக இருப்பவனிடம் கூட தோற்கலாம்; ஆனால், தனக்கு கீழே இருப்பவனிடம் தோற்கக் கூடாது’ என்ற சாதியாதிக்க மனோபாவம் கொண்டவர்.

இம்மாவட்டத்தில் உள்ள காசிபுரம் தனி (ரிசர்வ்) தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாமன்னன் (வடிவேலு). ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். என்ன தான் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், ஆதிக்க சாதிக்காரன்முன் உட்காரக் கூடாது என்பது போன்ற பரம்பரையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்.

மாமன்னனின் மகன் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை சண்டை கற்று கொடுக்கும் ஆசானாக இருப்பவர். மனிதர்களுக்கு இடையில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வை அடியோடு வெறுப்பவர். அனைவரும் சமம் என்று நினைப்பவர்.  “ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்” என்பது போன்ற தெளிவான சிந்தனை உடையவர். சிறுவயதில் தான் எதிர்கொண்ட சாதிய அடக்குமுறை விவகாரத்தில் அப்பா தக்க பதிலடி  கொடுக்காத கோபத்தில், ஆண்டுகள் பல கடந்தும் அவருடன் பேசாமல் இருப்பவர்.

அதிவீரனின் கல்லூரி வகுப்புத் தோழியாக இருந்தவரான லீலா (கீர்த்தி சுரேஷ்) இலவச கோச்சிங் செண்டர் நடத்துகிறார். நியாயத்துக்காக போராட்டங்கள் நடத்துவதன் மூலமும், சே குவேரா படம் போட்ட டி-ஷர்ட் அணிவதன் மூலமும் தனது பொதுவுடைமைச் சார்பை வெளிப்படுத்துபவர்.

லீலா நடத்தும் இலவச கோச்சிங் செண்டரால் தனது கட்டண கோச்சிங் செண்டரின் வருமானம் பாதிக்கப்படுவதாக கோபம் கொள்ளும் மாவட்டச் செயலாளர் ரத்தினவேலுவின் அண்ணன் (சுனில்), தனது ஆட்களை அனுப்பி, லீலாவின் கோச்சிங் செண்டரை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறார். பதிலுக்கு அதிவீரனும், லீலாவும் தங்கள் மாணவர்களோடு சென்று ரத்தினவேலுவின் நிறுவனத்தை அடித்து சேதப்படுத்துகிறார்கள்.

இந்த பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மாமன்னனுக்கும் அதிவீரனுக்கும் அழைப்பு விடுக்கிறார் ரத்தினவேலு. அதை ஏற்று அவர்கள் ரத்தினவேலுவின் வீட்டுக்குப் போகிறார்கள். போன இடத்தில், எம்.எல்.ஏ. என்றும் பாராமல், மாமன்னனை பட்டியல் சாதிக்காரராகவே பாவித்து, உடகாரக்கூட சொல்லாமல் மரியாதை இன்றி நடத்துகிறார் ரத்தினவேலு. இதனால் ஆவேசம் கொள்ளும் அதிவீரன், ரத்தினவேலுவை அடிக்க, பெரிய கைகலப்பு ஆகிறது.

இப்படி இரு தரப்புக்கும் இடையில் தொடங்கும் மோதல் பிரச்சனை, எப்படியெல்லாம் வளருகிறது? என்னென்ன வடிவம் எடுக்கிறது? கிளைமாக்ஸ் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1b

தனது முந்தைய படங்களான ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைப் போல இந்த படத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வை கருப்பொருளாகக் கொண்டு இதை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி விடுவதாலேயே பட்டியல் இன மக்களுக்கு எதிரான இழிவு நீங்கிவிடுகிறதா? என்ற மிக முக்கியமான கேள்வியை ‘சமூகநீதி காக்கும் மண்’ என போற்றப்படும் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து கேட்கிறார். கேள்வி எழுப்புவதோடல்லாமல், கிளைமாக்ஸில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவையும் கொடுத்திருக்கிறார். வேட்டை நாய்களையும், வேட்டையாடப்படும் பன்றிகளையும் குறியீடுகளாகக் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் காட்சிகள் அருமை. அவர் எழுதியுள்ள வசனம் ஒவ்வொன்றும் மூளைக்குள் புகுந்து பொறியைக் கிளப்பும் சரவெடி.

முதல் பாதி முழுக்க முழுக்க மாரி செல்வராஜின் அக்மார்க் படமாக விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதி தேர்தல், வாக்கு சேகரிப்பு, டிவி விவாதம், கோஷ்டி மோதல், வாக்கு எண்ணிக்கை என அரைத்த மாவையே அரைத்தது போல் இருப்பதால் சற்று சோர்வு தட்டுகிறது. இதை கொஞ்சம் சரி செய்திருந்தால் படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.

படத்தில் மாமன்னன் என்ற பட்டியல் சாதி எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் வரும் வடிவேலு பட்டையைக் கிளப்பியிருக்கிறார். வழக்கமாக அவர் திரையில் தோன்றினாலே சிரிக்கப் பழகிவிட்ட நாம், இந்த படத்தில் சிரிப்பை மறந்து, அவரது குணச்சித்திர நடிப்பில் ஒன்றி, அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளில் இரண்டற கலந்துவிடுகிறோம். தன் மகனுக்கு இழைக்கப்பட்ட சாதியக் கொடுமைக்கு நியாயம் பெற்றுத் தர முடியவில்லை என்ற விரக்தியில் அமைதியாக ஒரு பாறை மேல் நின்று கொண்டு ஏமாற்றத்துடனும், வலியுடனும் அவர் அழும்போது நாமும் கண் கலங்குகிறோம். அதேநேரம், அடக்குமுறைக்கு எதிராக அவர் துப்பாக்கியையும், வாளையும் கையில் எடுக்கும்போது நம்மை அறியாமல் கைதட்டி ஆர்ப்பரிக்கிறோம். வடிவேலுவுக்கு இந்த அளவு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய இன்னொரு படம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

மாமன்னனின் மகனாக, அதிவீரன் கதாபாத்திரத்தில் வரும் உதயநிதி ஸ்டாலின், அந்த கதாபாத்திரத்துக்குள் கனகச்சிதமாகப் பொருந்தி, பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வலி மிகுந்த பட்டியல் சாதி இளைஞனாக, ஆக்ரோஷமும், இறுக்கமும் கலந்த நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார். அப்பாவோடு பல ஆண்டுகளாக பேசாமல் இருந்தாலும், அவர் நின்றுகொண்டேதான் பேச வேண்டும் என்று சாதியாணவம் கொக்கரிக்கும்போது, “அப்பா நீ உட்காருப்பா” என்று தன்மானத்துடன் முழங்கும் ஒற்றை வரியில் உதயநிதியின் நடிப்பு உயர்ந்து நிற்கிறது. தன் அப்பாவை முதலமைச்சர் தாழ்வாக நடத்துகிறாரோ என்ற சந்தேகத்தில் தடைகளைத் தகர்த்து அவர் உள்ளே சென்று பார்க்கும் காட்சி மாஸ். உதயநிதியின் கடைசிப்படம் இது என்றபோதிலும் நினைவுக்கு வரும் முதல் படமாக இது எப்போதும் இருக்கும்,

இடைநிலை ஆதிக்க சாதிவெறி பிடித்த மாவட்ட செயலாளர் ரத்தினவேலு கதாபாத்திரத்தில் வரும் பகத் பாசில் பிரமாதமாக பிச்சு உதறியிருக்கிறார். பார்க்கும் எவரும் வெறுப்படையக் கூடிய கதாபாத்திரமாக அப்படியே மாறி பின்னி பெடலெடுத்து இருக்கிறார். நாயை இரக்கமின்றி அடித்துக்கொல்லும் கொடூர வில்லத்தனத்துடன் அறிமுகமாகும் அவர், காட்சிக்குக் காட்சி மிரட்டியிருக்கிறார். சமரசப் பேச்சுவார்த்தையின்போது, “இவர இங்க நிக்க வச்சு இருக்குறது என்னோட அடையாளம். உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்” எனும் நறுக்கான வசனம் மூலம் தனக்கான அரசியலை பேசிவிடுகிறார். அதுபோல், ”எங்க அப்பா எனக்கொரு இடத்தை இங்க உருவாக்கி வச்சிருக்கார். நான் என் பையனுக்கு அப்படியானதொரு இடத்தை உருவாக்கி தரணும்” என்று சொல்வதன் மூலம், இது திருந்த வாய்ப்பே இல்லாத ஜென்மம் என்ற எண்ணத்தை பார்வையாளர்களின் மனதில் ஆழப் பதிய வைத்துவிடுகிறார். ஆச்சரியப்படத் தக்க அற்புத கலைஞன் பகத் பாசில்.

இலவச கோச்சிங் செண்டர் நடத்தும் லீலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் வருகிறார். அவரது கதாபாத்திரத்திலும், அவர் வரும் காட்சிகளிலும் போதுமான அழுத்தம் இல்லாதது சற்று ஏமாற்றத்தைத் தருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே சூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலம். குறிப்பாக மலையழகை நுனி வரை சென்று காட்சிப்படுத்தியிருப்பது அருமை.

‘மாமன்னன்’ – அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!