”இது மாரி செல்வராஜ் அரசியல் என்கிறார்கள்; அமைச்சர் உதயநிதி அவர்களே, இது நம் அரசியல்”: ‘மாமன்னன்’ விழாவில் கமல்ஹாசன்!

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் ஃபஹத் பாசில், வடிவேலு நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த மே 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடலை பலரும் கொண்டாடி வருகின்றனர். படத்தின் மற்றொரு பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் மே 27-ம் தேதி வெளியானது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார்.

இந்நிலையில், மொத்தம் ஆறு பாடல்கள் கொண்ட இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜுன் 2) இரவு பிரமாண்டமாக நடைபெற்றது.

0a1c

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

உயிரே உறவே தமிழே… பல மேடைகளில் படத்தை நாம் வாழ்த்துவோம். ஏன் என்றால் படத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம். படம் நன்றாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சொல்லி விட்டுச் செல்வோம்.

இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என் நட்புக்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. இதில் இருக்கும் குரல் கேட்கப்பட வேண்டியது. இது மாரியின் குரல் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவரைப்போல கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள்.

அவர்களின் குரல் இப்போதுதான் கேட்க ஆரம்பித்து இருக்கிறது. இது மாரி செல்வராஜ் அரசியல் என்று சொல்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் (உதயநிதி) அவர்களே… இது நம் அரசியல். அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு இது மாதிரியான படங்கள் வரவேண்டும். இந்த மாதிரியான படத்தை உதயநிதி தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் பாராட்டுகள்.

எனக்கு ஒரு சின்ன வருத்தம். நீங்கள் (உதயநிதி) என்னுடைய படம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை, இதுவும் என்னுடைய படம்தான். என்னை பொருத்தவரை இது என்னுடைய அரசியலும் தான். இந்தப்படம் வெற்றி பெறுவதற்கான பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை அவர் தேர்வு செய்திருக்கும் விதம். தம்பி வடிவேலு என்று சொல்வதா? இல்லை.. அண்ணன் என்று சொல்வதா..? நடிப்பிலும் அவர் அண்ணன் தான்.. இந்தப்படத்தில் அவர் மாமன்னனாக மாறி இருக்கிறார்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவரை ஆரம்ப காலங்களில் ரசித்த ரசிகர்களுள் நானும் இளையராஜாவும் ஒருவர்கள். ‘தேவர் மகன்’ படத்தில் இவரை தேர்ந்தெடுக்கும்பொழுது ஒல்லியாக இருக்கிறாரே என்று கேட்டனர். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு.. உண்மையில் சொல்லப்போனால் என்னுடைய நடிப்பையும் அவர் அந்த இடத்தில் தாங்கிப் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காட்சி இன்றும் பேசப்படுவதற்கான காரணம்.. ‘நான் ஏற்றுக்கொள்கிறேன் ஐயா’ என்று அவர் நடித்த விதம்.. அதற்கு நான் ‘போய் படிங்கடா’ என்ற சொல்வதற்கு இப்படியான ஒரு அழுகுரல் தேவைப்பட்டது.

கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறார் என்று சொன்னார்கள். அது மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். அறிவாக இருப்பதுதான் கஷ்டம். அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும். அது கீர்த்தி சுரேஷுக்கு வாய்த்து இருக்கிறது. இது போன்ற படங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து நடித்ததால் உங்களுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. ரஹ்மான் அவர்களுக்கு மாரி செல்வராஜ் நிறைய இடம் கொடுத்திருக்கிறார். அவர் ஒரு கலக்கு கலக்குவதற்கு ஒரு பெரிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். படத்தில் எமோஷனலான காட்சிகள் நிறைய இருக்கின்றன;கோபத்தை வரவழைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன.

இந்த உரையாடல் நடக்க வேண்டிய உரையாடல். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் இருந்து நான் மாரி செல்வராஜை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிர்தரப்பு என்று ஒருவரை நிர்ணயம் செய்து கொள்ளாமல், இது நடக்கிறது.. நிஜம் என்று அவர் படம் எடுக்கிறார். எதிர் தரப்பினருக்கு கூட சமமான ஒரு இடத்தை மாரி செல்வராஜ் கொடுப்பது அவரது சம நிலையை காட்டுகிறது. இது மிகவும் முக்கியமானது.

நம் பக்கத்தில் கோபம் மட்டும் இருந்தால் போதாது. நியாயம் இருக்க வேண்டும். அந்த நியாயத்தை செயல்படுத்த உதவியாக நின்ற அமைச்சர் உதயநிதிக்கு நன்றி. அமைச்சர்..அமைச்சர்..என்று நான் சொல்வது அவர் என்னுடைய படத்தை செய்யவில்லை என்ற கோபத்தில் சொல்கிறேன்.

அவர் அமைச்சரானாலும் இதே போன்று பல தேர்வுகளில் அவர் மாற்றங்களை செய்வார் என்று நம்புகிறேன். ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கு மூன்று தலைமுறைகள் மயங்கிக் கிடக்கிறது. பேட்டன் என்று ஒன்றை சொல்வார்கள். அதை ஏஆர்.ரஹ்மான் தாண்டிக் கொண்டே இருக்கிறார். அவரே தன்னுடைய விமர்சகராக இருந்து அதை செய்து கொண்டிருக்கிறார். பயமில்லாமல்,பதட்டமில்லாமல், கர்வம் இல்லாமல் அதை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

விழாவை தலைமை தாங்குகிறேன் என்றெல்லாம் சொன்னார்கள். நான் தாங்குகிறேன் என்னுடைய தோளில்…! இந்தப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவின், ரசிகர்களின் ரசனையை, தரத்தை நமக்குச் சொல்லும். ஒரு சவாலாக கூட இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். சமூக நீதி சார்ந்த உரையாடல் இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு நல்ல தலைவரை விட்டு செல்வோம்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

#

0a1a

விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குவதற்கு முன்பு பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். சொல்லப்போனால் இது என்னுடைய கடைசி படம். வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது. படத்தை ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பு ஏற்ற பின்பும் நான் போய் படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது. நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே தான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன். எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும். நல்ல படமாக அமைந்தது திருப்தி.

நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம். மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது. அவரே கூட என்னிடம் அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்றார். அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நானும் மாரியிடம் அடுத்து படம் நடித்தால் உங்கள் இயக்கத்தில் தான் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளேன்” என்றார்.

விழா தொடங்குவதற்கு முன் நடிகர் வடிவேலு கூறும்போது, “நான் எங்கும் செல்லவில்லை. எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்ஃபோனில் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கு ’கேப்’பே கிடையாது. என்னுடைய அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்ஸ்களால் நான் வந்துகொண்டுதான் இருக்கிறேன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் உங்கள் வீட்டு பிள்ளை நான் இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எல்லோரின் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும் கதை. அருமையான கதையை உதயநிதி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறேன். நான் பாடவில்லை, அவர் தான் என்னை பாட வைத்துள்ளார்.

மறைந்த என் தாயை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம். படம் வெற்றி பெறும். ‘தேவர் மகன்’ படத்துக்குப் பிறகு எனக்கு மிகப் பெரிய படம் இது. அரசியல் படம் இது. புதுமையான படம் இது. சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம் எனக்கு இதில் அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம். இது உதயநிதியின் கடைசி படம் என சொல்ல முடியாது. இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தார். தற்போது அரசியலில் ஹீரோவாகப் போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்” என்றார்.

#

மாரி செல்வராஜ் பேசுகையில், “நான் எந்தப் படம் எடுத்தாலும் அதில் சமூக நீதிக்கான அரசியல் இருக்கும். ‘மாமன்னன்’ வெளியான பிறகு பெரிய அதிர்வலைகளை உருவாக்கும். புதிய வடிவேலுவை இந்தப் படத்தில் எல்லோரும் பார்ப்பார்கள்” என்றார்.