மாமனிதன் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி சென் மற்றும் பலர்

இயக்கம்: சீனு ராமசாமி

தயாரிப்பு: ’ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்’ யுவன் சங்கர் ராஜா

வெளியீடு: ‘ஸ்டூடியோ 9’ ஆர்.கே.சுரேஷ்

இசை: இளையராஜா & யுவன் சங்கர் ராஜா

மக்கள் தொடர்பு: நிகில்

Feel good family drama எனப்படும் ஜானரில் ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர்ப்பறவை’, ’தர்மதுரை’ உள்ளிட்ட தரமான திரைப்படங்களை படைத்தளித்த இயக்குனர் சீனு ராமசாமி, அதே ஜானரில் இயக்கியிருக்கும் மற்றுமொரு தரமான படம் தான் ‘மாமனிதன்’.

தேனி மாவட்டத்தில், இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் ரொம்ப நல்லவராகவும், ஆட்டோ ஓட்டுனராகவும் இருக்கும் ராதாகிருஷ்ணன், (விஜய் சேதுபதி),  தன் மனைவி (காயத்ரி), மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். படிக்காத ராதாகிருஷ்ணன் தனது பிள்ளைகளை பெரிய, பணக்கார பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைக்க ஆசைப்படுகிறார். இதற்காக, அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, முன்பின் தெரியாத ஒரு ரியல் எஸ்டேட்காரனை நம்பி, ரியல் எஸ்டேட்  புரோக்கராக மாறுகிறார். இவரை ஊர் மக்கள் அனைவரும் நம்பி முதலீடு செய்கிறார்கள். நிலத்தை பதிவு செய்யப்போகும் தருவாயில், ரியல் எஸ்டேட்காரன் எல்லோரையும்  ஏமாற்றி விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டே சென்று விடுகிறான்.

இதனால் ஊரில் மானம் மரியாதை இழக்கிறார் ராதாகிருஷ்ணன். அவரை போலீஸ் தேட ஆரம்பிக்கிறது. போலீஸுக்கும், ஊர்மக்களின் கோபத்துக்கும் பயந்து அவர் குழந்தைகள், மனைவியை நிராதரவாக விட்டுவிட்டு ஊரைவிட்டு ஓடி விடுகிறார். அப்படி ஓடியவர் எங்கே சென்றார்? அவரது வாழ்க்கை என்ன ஆனது? மனைவி, குழந்தைகளின் கதி என்ன? இறுதியில், திரும்பி வந்து மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்ந்தாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகன் ராதாகிருஷ்ணனாக வரும் விஜய் சேதுபதி, அன்பும், பாசமும் கொண்ட நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக நடித்து அசத்தியிருக்கிறார். சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும்போது அவர் காட்டும் உணர்ச்சி பாவங்கள் அற்புதம். அவருடன் போட்டிபோட்டு, அவருடைய காதல் மனைவியாக இயல்பாக நடித்து, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார் காயத்ரி. நாயகனின் நெருங்கிய இஸ்லாமிய நண்பராக வரும் குரு சோமசுந்தரம், எத்தனை கடினமான காட்சியாக இருந்தாலும் அசால்டாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஓர் எளிய மனிதனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களையும், சிக்கல்களையும் யதார்த்தமாக அப்படியே படமாக்கி யிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி, தனக்கே உரிய தனித்தன்மையுடன் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.  ”அப்பன் தோத்த ஊர்ல புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்”, ”என் குடும்பம் வாழ்றதுக்கு காசு மட்டும் பத்தாது, கொஞ்சம் புண்ணியமும் வேணும்” போன்ற வசனங்களால் சீனு ராமசாமியின் பேனா நம் இதயங்களை என்னவோ செய்கிறது. அவருடைய பலமாக கருதப்படும் எமோஷனல் காட்சியமைப்புகள் இந்தப் படத்திலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மாயமான இந்துவான நாயகன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்துக்களின் புண்ணிய பூமியாகக் கருதப்படும் காசியில் அவனது இஸ்லாமிய நண்பர் தொழுகை செய்வது போல் ஒரு காட்சி வருகிறது. இதன்மூலம் இஸ்லாமியருக்கும் இந்துவுக்கும் இடையிலான உறவு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது என்பதை உலகறியச் செய்திருக்கிறார் சீனு ராமசாமி. பாராட்டுகள்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக  “நினைத்தது ஒன்று… நடந்தது ஒன்று” என்ற பாடல் தாளம் போட வைக்கிறது.

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைக் காட்சிப்படுத்தியது, ஆலப்புழாவின் அழகை அள்ளிக் கொண்டுவந்தது என ஒளிப்பதிவு பிரமிப்பூட்டுகிறது.

‘மாமனிதன்’ – மாபெரும் மனிதனாய் உயர்வதற்கு வழிகாட்டும் படம்!