ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது லைக்கா!

10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 25ஆம் தேதி நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேல்முருகன், லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறியது தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை லைக்கா நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் அருணாச்சலம் அனுப்பியுள்ளார்.

அதில், ராஜபக்சேவுடனோ அல்லது இலங்கை அரசுடனோ லைக்கா நிறுவனத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தவறான தகவலை வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது கருத்திற்காக வேல்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ”மன்னிப்பு என்ற சொல் என் அகராதியிலேயே கிடையாது. மன்னிப்பும் கோர மாட்டேன். நஷ்ட ஈடும் தர மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

லைக்கா நிறுவனத்தினால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, மக்களுக்கு வழங்கும் நிகழ்வு வருகிற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக இருந்தது, எனினும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தனது பயணத்தை ரஜினி ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.