லப்பர் பந்து – விமர்சனம்

நடிப்பு: ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலசரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டிஎஸ்.கே மற்றும் பலர்

இயக்கம்: தமிழரசன் பச்சமுத்து

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

படத்தொகுப்பு: மதன் ஜி

இசை: ஷான் ரோல்டன்

தயாரிப்பு: ’பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லக்‌ஷ்மன் குமார்

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

‘ஸ்போர்ட்ஸ் டிராமா’ ஜானர் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் மவுசு அதிகம். அதிலும் திரைப்பட நட்சத்திரங்களுக்கு இணையாக கிரிக்கெட் வீரர்கள் கொண்டாடப்படும் இந்தியாவில் – குறிப்பாக தமிழ்நாட்டில் – கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். அத்தகைய கிரிக்கெட் திரைப்படங்கள் வித்தியாசமாக, விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக இருந்துவிட்டால், அவற்றின் வெற்றியை ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட வித்தியாசமான, விறுவிறுப்பான, சுவாரஸ்யமான, அமோக வெற்றிப்படமாக வெளிவந்திருக்கிறது ‘லப்பர் பந்து’.

“முப்பது” என்பதை “நுப்பது” என்று சிலர் உச்சரிப்பது போல, பெரும்பாலான கிராமத்துச் சிறுவர்கள் “ரப்பர்” என்பதை “லப்பர்” என்று உச்சரிப்பது வழக்கம். அவர்கள் வளர்ந்து ஆள் மாறினாலும், ரப்பரை “லப்பர்” என்பது மட்டும் மாறவே மாறாது. எனவே தான் ரப்பர் பந்துகளைப் பயன்படுத்தி கிராமப்புறங்களில் நடத்தப்படும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கு மிகப் பொருத்தமாக ‘லப்பர் பந்து’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இப்படத்தில் இருவர் கதையின் நாயகர்கள். ஒருவர் சுவரோவியராக இருக்கும் கெத்து என்ற பூமாலை (அட்டகத்தி தினேஷ்); மற்றொருவர் ஜெர்ஸி கடை வைத்திருக்கும் அன்பு (ஹரிஷ் கல்யாண்). இருவரும் வெவ்வேறு ஊர்க்காரர்கள்.

எதிர்நாயகன் கெத்து இளைஞராகவும், நாயகன் அன்பு சிறுவனாகவும் இருந்த காலத்தில் – அதாவது ஒரு ரப்பர் பந்து பதினைந்து ரூபாய்க்கு விற்பனையான காலகட்டத்தில் – இப்படக்கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது மிகுந்த மையல் கொண்ட சிறுவன் அன்பு, பள்ளிக்குச் செல்ல மனம் இல்லாமல், கிரிக்கெட் ஆடச் செல்கிறார். உள்ளூர் அணியான ‘ஜாலி ஃபிரண்ட்ஸ்’ என்ற அணியில் இருக்கும் வெங்கடேஷ் (டிஎஸ்கே), சாதிப் பாகுபாட்டைக் காரணம் காட்டி, அன்புவை அணியில் சேர்க்க முதலில் மறுக்கிறார். பிறகு வேண்டா வெறுப்பாக சேர்த்துக்கொள்கிறார். அந்த போட்டியில், எதிரணியில், ”இண்டர்நேஷனல் கிரிக்கெட் வீரர்” போல ஏகத்துக்கும் வானளவாகப் புகழப்படும் கிராமத்து கிரிக்கெட் வீரரான கெத்து, பேட்டிங்கில் வெளுத்து வாங்கி ரன்களைக் குவிக்கிறார். ஆனால் பேட்டிங்கில் கெத்துவுக்கு இருக்கும் வீக்னெஸ்ஸை துல்லியமாகக் கண்டறிந்துகொள்ளும் சிறுவன் அன்பு, அவரை அவுட் ஆக்க தன் அணியினரிடம் பௌலிங் வாய்ப்பு கேட்கிறார். அது கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பிப் போகிறார். இதன்பின், வாய்ப்பு வழங்கும் அணிகளில் கெஸ்ட் வீரராக விளையாடி, தனது கிரிக்கெட் தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கெத்து நடுத்தர வயதினராகவும், அன்பு இளைஞராகவும் இருக்கும் தற்காலத்தில் – அதாவது ஒரு ரப்பர் பந்து முப்பந்தைந்து ரூபாய்க்கு விற்பனையாகும் இக்காலகட்டத்தில் – அன்பு ஓர் இளம்பெண்ணை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) கண்டதும் காதல் கொள்கிறார். அந்தப்பெண் கெத்துவின் மகள் என்பது அவருக்குத் தெரியாது.

ஒரு கிரிக்கெட் போட்டியில், பேட்டிங்கில் கில்லியான கெத்துவும், பௌலிங்கில் கில்லியான அன்புவும் தற்செயலாக மோதும்போது இருவருக்கும் இடையில் ஈகோ பிரச்சினை வெடிக்கிறது. அது அடுத்தடுத்த காட்சிகளில் வளர்ந்து, தனிப்பட்ட பகையாக விஸ்வரூபம் எடுத்து, இருவரது சொந்த வாழ்க்கையிலும் பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. அந்த சிக்கல்கள் என்ன? இருவரும் அந்த சிக்கல்களிலிருந்து மீண்டார்களா? அன்பு – கெத்துவின் மகள் காதல் என்ன ஆயிற்று? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் விடை அளிக்கிறது ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மீதிக்கதை.

எதிர்நாயகன் கெத்து என்ற பூமாலையாக, கிராமப்புற கிரிக்கெட் பேட்ஸ்மேனாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார். நடுத்தர வயது கதாபாத்திரத்தை ஏற்க முன்வந்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும். மனிதர் அந்த கதாபாத்திரமாகவே மாறி பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.  நரம்பை முறுக்கேற்றும் விஜயகாந்த் பாடல் ஸ்பீக்கரில் தெறிக்க, கர்சீப்பை பேட்டில் சுற்றிக்கொண்டு வரும் தோரணை, பந்தை எல்லைக்கோட்டுக்கு மேலே பறக்கவிட்டு கெத்தாக நிற்கும் பேட்ஸ்மேனின் உடல்மொழி, அகங்காரம் உள்ளே புகுந்த பின்னர் எழும் ஆக்ரோஷம் என நடிப்பால் அசால்டு காட்டியிருக்கிறார் தினேஷ். வெளியுலகில் கெத்தாக இருப்பவர், மனைவி முன் அடக்க ஒடுக்கமாக பம்முவது ரசிப்புக்கு உரியது. கோபித்துக்கொண்டு போன மனைவி திரும்பி வந்தவுடன், அவரை கட்டியணைத்து குழந்தை போல் கண்ணீர் சிந்தும் காட்சியில், ‘ நீ நடிகன்டா’ என்று பார்வையாளர்களின் மனங்களைக் கேவ வைத்து விடுகிறார். பாராட்டுகள்.

’கதை மற்றும் கதாபாத்திரத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி, சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிபெற்று வருபவர்’ என பெயரெடுத்துள்ள ஹரிஷ் கல்யாண், அந்த பெயரை இந்த படத்திலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். நாயகனாக, ஜெர்ஸி கடை நடத்தும் பௌலர் அன்புவாக அவர் இதில் நடித்திருக்கிறார். ’தினேஷுக்கு சரியான போட்டி’ என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு டஃப் கொடுத்திருக்கிறார். கையை பேட்டாக மாற்றி காற்றில் சுழற்றும் காட்சியிலும், யதார்த்தமான காதல் காட்சிகளிலும் வசீகரிக்கிறார். அதே சமயம் ஈகோ வளர்கிற இடத்தில் இறுக்கமாகி முற்றிலும் வேறொரு நபராக உருமாறுவது, சுற்றி நடக்கும் அரசியலைப் பக்குவமாகக் கையாளுவது என்று நடிப்பில் வித்தியாசங்கள் காட்டி ஜொலித்திருக்கிறார்.

நாயகன் அன்புவின் காதலியாக, எதிர்நாயகன் கெத்துவின் மகளாக, நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். ‘எனக்கென்று எதுவும் கேட்க மாட்டேன். என்னை நேசிப்பவர்கள் எனக்கு என்ன தேவை என்று கண்டறிந்து அவர்களாகவே செய்துகொடுக்க வேண்டும்’ என்று நினைக்கும் கதாபாத்திரம் அவருக்கு. காதலனிடம் மட்டுமல்ல, பெற்றோர்களிடத்திலும் அவர் அவ்வாறு நடந்துகொள்வது சுவாரஸ்யம். அப்பாவா? காதலா? என்ற கேள்வி எழும் சிக்கலான காட்சிகளிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியின் அம்மாவாக, கெத்துவின் மனைவியாக ஸ்வஸ்விகா நடித்திருக்கிறார். சும்மா வந்துபோகும் பெண்மணி போல் இல்லாமல், முக்கியமான கதாபாத்திரம். கல்லுக்குள் ஈரம் போல, பந்தை அரிவாள்மணையில் அறுத்து வீசுவது போன்ற முரட்டுத்தனத்துக்குள்ளே அன்புமயமான குடும்பத் தலைவி இருக்கிறார் என்பதை நடிப்பில் கொண்டு வரவேண்டிய கதாபாத்திரம். பாத்திரம் உணர்ந்து அருமையாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்வஸ்விகா.

கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டு போட்டிகள் நடத்த அதிகம் மெனக்கெடும் கருப்பையாவாக வரும் காளி வெங்கட், அவருடைய மகளாக, கிரிக்கெட் வீராங்கனையாக அகிலா என்ற பாத்திரத்தில் வருபவர் ஆகிய இருவரும் தங்களது யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

அன்புவின் நண்பராக படம் முழுவதும் வரும் பால சரவணன், தனது வசனங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறார். கெத்துவின் நண்பராக நடித்திருக்கும் ஜென்சன் திவாகர் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தை கலகலப்பாக்க் கையாண்டு சிரிக்க வைக்கிறார். கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக நடித்திருக்கும் கதிர் கொடுக்கும் கமெண்ட்ரி வசனங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக திரையரங்கையே அதிரச் செய்கின்றன.

கெத்துவின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அன்புவின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, வெங்கடேஷ் கதாபாத்திரத்தில் வரும் டிஎஸ்கே உள்ளிட்டோரும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு ஆடப்படும் ரப்பர் பந்து கிரிக்கெட் பின்னணியில் ஒரு எளிமையான கதையைப் பிடித்து, அதற்கேற்ற ஒரு வலுவான திரைக்கதையை உருவாக்கி, கச்சிதமான கதாபாத்திரங்களை வடிவமைத்து, சுவாரஸ்யமான வசனங்கள் சேர்த்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களை திறம்பட வேலை வாங்கி, ஒரு முழுமையான வெற்றிப் படைப்பை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. படத்தின் எந்த இடத்திலும் இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் என்ற சாயலே தெரியவில்லை. படம் தொடங்கியது முதல் முடியும் வரை சின்னச் சின்ன சுவாரஸ்யமான தருணங்கள் ஏராளமாக உள்ளன. மேலும், பிரச்சார நெடி துளியும் இல்லாமல் சாதிக்கு எதிரான அரசியலை ஆணித்தரமாக பேசியுள்ளார் இயக்குநர். ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானர் படம் என்றாலே முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து, அதற்கு ஒரு கச்சிதமான காரணத்தையும் அதை பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளவும் வைத்த இயக்குநரின் திறமை போற்றுதலுக்குரியது. பாராட்டுகள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கிரிக்கெட் போட்டிகளையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் மிகச் சரியான முறையில் இணைத்து ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.

படத்தொகுப்பாளர் மதன்.ஜி, கலை இயக்குநர் வீரமணி கணேஷ் ஆகியோரது பணி, திரைப்படத்தையும் கடந்து ஒரு வாழ்வியலை மிக இயல்பாக பதிவு செய்வதற்கு பேருதவியாக இருந்துள்ளன.

’லப்பர் பந்து’ – அனைத்து தரப்பு பார்வையாளர்களும் பார்த்து ரசிக்கலாம்!