தமிழகத்தில் 46.97% வாக்குகளை அள்ளிய திமுக கூட்டணி!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்றே கட்சிகள் களம் கண்டன.
தமிழகத்தில் இந்த தேர்தலில் எந்த கட்சி எத்தனை சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது என்ற இறுதிக்கட்ட நிலவரம் வருமாறு:
பதிவான மொத்த வாக்குகள் – 4,36,19,470
திமுக கூட்டணி – 46.97% (2,04,86,693) வாக்குகள்
திமுக – 26.93%
காங்கிரஸ் -10.67%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2.52
விசிக – 2.25%
இந்திய கம்யூனிஸ்ட் – 2.15%
மதிமுக – 1.24%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1.17
அதிமுக கூட்டணி – 23.05% (1,00,55,124) வாக்குகள்
அதிமுக – 20.46%
தேமுதிக -2.59%
பாஜக கூட்டணி – 18.28% (79,73,801) வாக்குகள்
பாஜக – 11.24%
பாமக – 4.4%
தமாகா – 0.94%
அமமுக – 0.90%
ஓ.பி.எஸ் (சுயேச்சை) – 0.79%
நாம் தமிழர் கட்சி – 8.19% (35,31,364) வாக்குகள்
சுயேச்சைகள் – 2.66% (11,59,998) வாக்குகள்
நோட்டா – 1.07% (4,67,068) வாக்குகள்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 28 தொகுதிகளில் அதிமுகவும், 11 தொகுதிகளில் பாஜகவும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன.
சீமான் கட்சிக்கு அங்கீகாரம்:
சீமானின் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிப்பட்ட மாநில அரசியல் கட்சி அந்தஸ்தைப் பெறும் தகுதியைப் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாற, சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அல்லது மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். அல்லது சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் இந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் கட்சி 8.19% பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக உருவெடுக்கவுள்ளது.
திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக கூட்டணியின்றி அதிக வாக்கு சதவீதத்தை கொண்டிருப்பதால், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் திகழ்கிறது என்ற கோணத்தில் அணுக வேண்டியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
விசிகவுக்கு பலன்:
கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விசிக.
இப்போது சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 1.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், விழுப்புரம் தொகுதியில் துரை.ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டு விசிக வேட்பாளர்கள் வென்றனர் என்ற அடிப்படையில், விசிகவுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.