அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்: ஜெயலலிதா பெயரில் வெளியானது!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதற்குள் இன்றே அ.தி.மு.க சார்பில் சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவரும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரில்  இந்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

இந்த பட்டியல்படி, ஏற்கெனவே மேயர் பதவியில் இருந்துவரும் சென்னை மேயர் சைதை துரைசாமி, திண்டுக்கல் மேயர் மருதராஜ், தூத்துக்குடி மேயர் அந்தோனி கிரேஸ், நெல்லை மேயர் புவனேஸ்வரி, ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், திருச்சி மேயர் விசாலாட்சி, கோவை மேயர் ராஜ்குமார், வேலூர் மேயர் கார்த்தியாயினி ஆகிய 8 பேருக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதுபோல், சென்னையில் 25 கவுன்சிலர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.குப்பன், கே.கந்தன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேரடித் தேர்தல் முடிவடைந்த பின்னர் நவம்பர் 2-ம் தேதி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்போது சென்னையின் மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் ஜே.சி.டி. பிரபாகரன் முன்னிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. அவர் வில்லிவாகத்தில் 80-வது வார்டில் போட்டியிடுகிறார்.

திருச்சியில் 44வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பின்னர் இவர் திருச்சி மேயராக அ.தி.மு.க. சார்பில் முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் ஆகிய மூன்று மேயர்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நடேசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.