”லிங்கா’ படக்கதை வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு!” – கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘லிங்கா’ . இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார் .

’லிங்கா’ படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், தனது கதையைத் திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர்; அதனால், ‘லிங்கா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார் .

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தோம் .

மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு  ராக்லைன் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக வெளியாகியுள்ளது. இந்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பத்திரிககையாளர் சந்திப்பு சென்னையில்  இன்று நடைபெற்றது. இதில்  இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:

சமீபத்தில் எங்களுக்கு நற்செய்தி கிடைத்தது. ’லிங்கா’ படத்தின்போது ஒருவர் இந்தக்கதை தன்னுடையது என்று வழக்கு போட்டிருந்தார். இப்போது கேஸ் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. பத்திரிகையாளர்களை இந்த நேரத்தில் எதற்காக சந்திக்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அவசர அவசரமாக படத்தை வெளியிட வேண்டும் என வேலை செய்து கொண்டிருந்தோம். ரஜினி சார் பிறந்த நாளில் படத்தைக் கொண்டு வர வேண்டும் என்று உழைத்தோம். அந்த நேரத்தில் அது மிகுந்த மன உளைச்சலை  கொடுத்தது.

நான் ஒரு கதையை சொல்லும்போது, அது சரியாக ரிஜிஸ்டர் செய்திருக்கிறதா என்று பார்த்து தான் செய்வேன்.

அந்த நேரத்தில் கோர்ட் திடீரென பத்துக்கோடி கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஒரு நாளைக்குள் பத்து கோடி கட்டுவது எவ்வளவு சிரமம்.

அன்றைக்கு நிறைய ஊடகங்கள் கதைத் திருட்டு சம்பந்தமாக நிறைய எழுதி இருந்தார்கள். அதனால் தான் இந்த நல்ல செய்தியும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று இங்கு வந்தோம்.

எதிர் தரப்பில் தாக்கல் செய்த எல்லா சாட்சியங்களையும் விசாரித்தபின் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கினார்கள்.

ரைட்டர் யூனியனுக்கு இன்னும் பவர் இருக்க வேண்டும்.

கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட கேஸ்களில் இப்படி  ஒரு சாதகமான தீர்ப்பு வந்தது எங்களுக்குத் தான் என்று நினைக்கிறேன்.

கதையை முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். அதன்பிறகு ரைட்டர் யூனியன் இருக்கிறது. அங்கு செல்லுங்கள்.

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் பேசினார் .

ராக்லைன் வெங்கடேஷ் பேசியதாவது,

ரஜினி சார் படம் ரிலீஸ் பண்ற சூழல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். நாளை ரிலீஸ் என்றால் முந்தைய நாள் எங்கள் லாயர் 10 கோடி டெபாஸிட் செய்ய வேண்டும் என்ற ஆர்டர் வந்திருப்பதாக  சொன்னார். படம் எடுப்பதே எங்களுக்கு சேலஞ்ச் ஆக இருந்தது. படம் எடுத்த கஷ்டத்தை விட அது பெரிய கஷ்டமாக இருந்தது. உடனே பேங்க்ல அப்ரோச் செய்து  எப்படியோ சமாளித்தோம்.

ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னாவாகும். அந்த டைமில் இப்படி  வந்து ப்ளாக் மெயில் பண்றது சரியல்ல. அந்த டைமில் ரஜினி சார் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார். இதைப்.போல கடைசி நேரத்தில்  ப்ளாக்மெயில் செய்வது இந்த திரைப்பட துறைக்கு  நல்லதல்ல .”உண்மை ஒருநாள் வெல்லும்” என்று எங்கள்  படத்தில் வரும் அந்தப்பாட்டு மாதிரி உண்மை தான் ஜெயிக்கும்.

சினிமா இண்டஸ்ட்ரிக்கு இந்த மாதிரி இனி வரக் கூடாது. இந்தப்.பிரச்சனை இனி வராமல் இருக்க ரைட்டர் யூனியன், டைரக்டர் யூனியன் எதாவது ஒருவழி செய்ய வேண்டும்.

கோர்ட்டுக்கு அதிகமுறை  அலைந்துள்ளேன். அங்குபோய் நின்று பதில் சொல்ல வேண்டும். அது நிறைய மெண்டல் பிரஷர் தந்தது. தற்போது தவறை  செய்தவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மேல் நான் வழக்கு  எதுவும் போடப்போவதில்லை. நானும் ரஜினி சாரை பின்பற்றுபவன்  தான். இனி இப்படி நடக்கக்கூடாது என்று மீடியா மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ராக்லைன் வெங்கடேஷ் பேசினார்.