லில்லி ராணி – விமர்சனம்
நடிப்பு: சாயா சிங், தம்பி ராமையா, துஷ்யந்த், ஜெயபிரகாஷ், பேபி ரஃஅத் பாத்திமா மற்றும் பலர்
இயக்கம்: விஷ்ணு ராமகிருஷ்ணன்
தயாரிப்பு: ’கிளாப்பின் சினிமாஸ்’ செந்தில் கண்டியார்
ஒளிப்பதிவு: சிவ தர்ஷன்
பாடலிசை: ஜெர்வின் ஜோஷுவா
பின்னணி இசை சேரன்
மக்கள் தொடர்பு: ஸ்ரீவெங்கடேஷ்
விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைக்கிறது. காவல் துறை இன்ஸ்பெக்டரான சம்பவ மூர்த்தி (தம்பி ராமையா) உடனே தன் படையுடன் அந்த விடுதிக்குச் சென்று திடீர் சோதனை நடத்துகிறார். ஒரு அறையைப் பார்வையிடும்போது அங்கே பாலியல் தொழிலாளியான ராணி (சாயா சிங்) இருப்பதை பார்க்கும் இன்ஸ்பெக்டர் சம்பவ மூர்த்தி, ராணியின் அழகில் மயங்கி அவருடன் உடலுறவு கொள்கிறார்.
சில மாதங்களுக்குப் பிறகு ராணி, லில்லி என்ற பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார். அந்த குழந்தைக்கு உடல்நலனில் பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் பல லட்சங்கள் செலவாகும் என சொல்கிறார்.
பலருடன் உடலுறவு வைத்துக்கொண்ட ராணி, தன்னிடம் உடலுறவு கொண்டவர்களில் குழந்தைக்கு தந்தை யார் என கண்டுபிடித்து அவரிடம் இருந்து மருத்துவ செலவுக்கான பணத்தை வாங்க முயற்சி செய்கிறார் . முதலில் காவல் துறை இன்ஸ்பெக்டரான சம்பவ மூர்த்தியை தேடிப் பிடித்து அவரிடம் உதவி கேட்கிறார்.
ஆனால், சம்பவ மூர்த்தி தன்னிடம் பணம் இல்லை என்று சொல்வதோடு, ராணியுடன் உடலுறவு கொண்டவர்களில் ஒருவரான அமைச்சரின் மகன் மைக்கேலிடம் (துஷ்யந்த்) இருந்து குழந்தையின் மருத்துவ செலவுக்குத் தேவையான பணத்தை பறிக்க திட்டம் போட்டு தருகிறார் .
சம்பவ மூர்த்தியும், ராணியும் போடும் திட்டத்தின் மூலம் அமைச்சர் மகன் மைக்கேலிடம் இருந்து பணம் பறித்தார்களா, இல்லையா? ராணி மருத்துவ சிகிச்சை மூலம் தன் குழந்தை லில்லியை காப்பாற்றினாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘லில்லி ராணி’ படத்தின் மீதிக்கதை.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராணி என்ற பாலியல் தொழிலாளி வேடத்தில் சாயா சிங் இயல்பாக நடித்திருக்கிறார். உடல் மொழியில் கவர்ச்சியில்லாமல், காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் சாயா சிங் கதாபாத்திரத்தை இயக்குனர் அழகாக வடிவமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
காவல்துறை இன்ஸ்பெக்டர் சம்பவ மூர்த்தியாக தம்பி ராமையா , அமைச்சரின் மகன் மைக்கேலாக துஷ்யந்த், குழந்தை லில்லியாக பேபி ர ஃஅத் பாத்திமா, அமைச்சர் அற்புதமாக ஜெயபிரகாஷ் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு.
சிவா தர்ஷன் ஒளிப்பதிவும், ஜெர்வின் ஜோஷுவாவின் பாடலிசையும், சேரனின் பின்னணி இசையும் கதைக்கேற்றபடி நேர்த்தியாக உள்ளன.
சில காட்சிகளில் திரைக்கதையின் வேக தடை இருந்தாலும், பாலியல் தொழிலாளி சம்பந்தப்பட்ட அழுத்தமான கதை என்பதால் சொல்ல வந்த கதையை அனைவரும் ரசிக்கும்படி தெளிவாக, மிக சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குநர் விஷ்ணு ராமகிருஷ்ணன் .
‘லில்லி ராணி’ – பார்க்கலாம்!