எல்.ஜி.எம் – விமர்சனம்
நடிப்பு: ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய், வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், வினோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன், சாண்டி மற்றும் பலர்
இயக்கம்: ரமேஷ் தமிழ்மணி
ஒளிப்பதிவு: விஸ்வஜித் ஒடுக்கத்தில்
படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்
இசை: ரமேஷ் தமிழ்மணி
பேனர்: தோனி எண்டர்டெய்ன்மெண்ட், டெல்டா ஸ்டூடியோஸ்
தயாரிப்பு: சாக்ஷி சிங் தோனி, விகாஸ் ஹசிஜா
தமிழக வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)
சில திரைப்படங்களில் வரும் சுவாரஸ்யமான கதைமுடிச்சைப் பார்க்கும்போது, ‘யதார்த்தத்தில் இப்படியெல்லாமா நடக்கும்? இது வெறும் கற்பனை’ என்ற எண்ணம் தோன்றும். அதே நேரத்தில், நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்ற ஆசையும், ஏக்கமும் கூடவே வரும். அத்தகைய புதுமையான கதைமுடிச்சை உள்ளடக்கிய, குடும்பப் பாங்கான, ரொமாண்டிக் காமெடிப் படமாக வெளிவந்திருக்கிறது ‘Let’s Get Married’ திரைப்படம். இத்தலைப்பின் சுருக்கமே ‘LGM’.
ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார் நாயகன் கௌதம் (ஹரிஷ் கல்யாண்). சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட கௌதம், ஒற்றை பெற்றோரான அம்மா லீலாவினால் (நதியா) வளர்த்து ஆளாக்கப்பட்டவர். அதனால் அம்மாவும், மகனும் பரஸ்பரம் அன்பாக, பாசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் மீரா (இவானா) மீது கௌதமுக்கு காதல் அரும்புகிறது. ஆனால், உடனடியாக அவருடைய காதலை ஏற்க மறுக்கும் மீரா, “எனக்கு ஒரு ஐடியா. நாம் இரண்டு வருடம் நட்பாக பழகிப் பார்ப்போம். நமக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டால், அதன்பிறகு காதலிப்போம். காதல் ஒர்க்-அவுட்டானால் கல்யாணம் செய்துகொள்வோம்” என்கிறார். இதனை கௌதமும் ஏற்றுக்கொள்ள, இருவரும் நட்பாக பழகி வருகிறார்கள்.
மீரா சொன்ன இரண்டு வருடம் முடிந்தபிறகு, தங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதாக உணரும் மீரா, தனது காதலைச் சொல்லி உறுதி செய்கிறார். இருவரும் காதல்வானில் சிறகடித்துப் பறந்து திரிகிறார்கள். காதல் ஒர்க்-அவுட்டானதால், அடுத்த கட்டமான திருமணம் நோக்கி நகருகிறார்கள்.
தானும் மீராவும் காதலிக்கும் விஷயத்தை தன் அம்மா லீலாவிடம் சொல்கிறார் கௌதம். மகனின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று கருதும் லீலா ஒரு வார்த்தை கூட எதிர்ப்பு தெரிவிக்காமல், முழு மனதுடன் சம்மதம் கொடுக்கிறார்.
லீலாவும் கௌதமும் முறைப்படி பெண் கேட்டு, மீராவின் வீட்டுக்குப் போகிறார்கள். மீராவிடம் லீலா, “நான் உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்துக்கொள்வேன்மா” என்கிறார். லீலாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சி அடையும் மீரா, கௌதமை தனியே அழைத்துப்போய், “திருமணத்துக்குப்பின் நான் உன் அம்மாவோடெல்லாம் சேர்ந்து வாழ முடியாது. நாம் தனிக் குடித்தனமாக சென்று சுதந்திரமாக இருப்போம்” என்கிறார். இதை ஏற்க மறுக்கும் கௌதம், “எங்கம்மாவை விட்டுவிட்டு என்னால் வர முடியாது” என உறுதியாக சொல்கிறார்.
அவ்வளவு தான்… ‘பிரேக்-அப்…! கல்யாணத் திட்டம் கைவிடப்படுகிறது.
கல்யாணத் திட்டம் என்ன காரணத்துக்காக கைவிடப்பட்டது என்பது லீலாவுக்கு புரியாவிட்டாலும், மீரா மீது அவருக்கு கோபம் கோபமாக வருகிறது.
இந்நிலையில், சிறிய இடைவெளிக்குப் பின் கௌதமை சந்தித்துப் பேசுகிறார் மீரா. கௌதமை கைவிட மனசில்லாத அவர், தனக்கும் லீலாவுக்கும் நல்ல புரிதல் ஏற்படுமா என்பதை ஒரு டெஸ்ட் மூலம் சோதித்தறிய முடிவு செய்கிறார். “எனக்கு ஒரு ஐடியா. அலுவலக சுற்றுலா’ என்ற பெயரில் உன் குடும்பமும், என் குடும்பமும் கர்நாடகாவில் உள்ள கூர்க்கிற்கு சுற்றுலா போவோம். அங்கே உன் அம்மாவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டால், நம் திருமணத்துக்கு நான் சம்மதம் தெரிவித்துவிடுவேன்” என்கிறார் மீரா.
இது தான் ‘எல்.ஜி.எம்’ படத்தின் புதுமையான கன்டெண்ட்; காலத்துக்கேற்ற கதைமுடிச்சு. ’திருமணத்துக்குப்பின் மாமியாரும் மருமகளும் மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பதற்குப் பதிலாக, திருமணத்துக்கு முன்பே வருங்கால மாமியாரும், வருங்கால மருமகளும் சேர்ந்து ஒரு சுற்றுலா சென்று தங்களுக்குள் ஒத்துப்போகுமா என பரீட்சித்துப் பார்க்க வேண்டியது. ஒத்துப்போகும் என தெரிந்தால் திருமணம். இல்லை என்றால் இல்லை’ என்பது தான் மீரா மூலம் ‘எல்.ஜி.எம்’ திரைப்படம் முன்வைக்கும் யோசனை.
இதன்படி, கௌதம் குடும்பமும், மீரா குடும்பமும் கூர்க்கிற்கு சுற்றுலா போகிறார்கள். அங்கே லீலாவுக்கும், மீராவுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டதா? இருவருக்கும் ஒத்துப்போனதா? கௌதமை கரம் பிடிக்க மீரா சம்மதம் தெரிவித்தாரா? என்பது தான் எதிர்பாராத பல திருப்பங்கள் கொண்ட ‘எல்.ஜி.எம்.’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் கௌதமாக வரும் ஹரிஷ் கல்யாண், நாயகனின் காதலி மீராவாக வரும் இவானா, நாயகனின் அம்மா லீலாவாக வரும் நதியா ஆகிய மூன்று பேரை சுற்றியே இந்த படக்கதை நடக்கிறது. அதனால் மூன்று பேருமே போட்டி போட்டு சிறப்பாக நடித்து தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான ஹரிஷ் கல்யாண், இப்படத்தின் காதல் காட்சிகளிலும், தாய் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் இயல்பாக நடித்து இன்றைய இளைஞர்களை துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்.
‘லவ் டுடே’ படத்தில் கிடைத்த நல்ல பெயரை இதில் தக்க வைத்துக் கொண்டுள்ளார் இவானா. திருமணத்துக்குத் தயாராக இருக்கும் இளம்பெண்கள், இவானாவின் கதாபாத்திரத்தில் தங்களை அடையாளம் கண்டு, ரசித்து, ஒன்றிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
என்றும் போல் இதிலும் இளமையான அம்மாவாக வந்து கவனம் ஈர்க்கும் நதியா, படத்தின் முதல் பாதியில் மரபான அம்மாவாகவும், இரண்டாம் பாதியில் மாடர்ன் அம்மாவாகவும் வித்தியாசமான நடிப்பை வழங்கி பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
யோகி பாபுவின் காமெடி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. அவர் வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கில் சிரிப்பலையை எழுப்புகின்றன.
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக பிரபலமடைந்திருக்கும் விஜே விஜய்யும் இதில் தனது பங்கிற்கு டைமிங் வசனங்கள் மூலம் பார்வையாளர்களை விலா நோக சிரிக்க வைக்கிறார்.
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த ஆதி மனிதர்கள் என்றைக்கு திருமணம் செய்துகொள்ளத் தொடங்கினார்களோ அன்றிலிருந்து இன்று வரை மாமியார் – மருமகள் பிரச்சனை தொடர்ந்து நீடித்து, குடும்பத்தை, சமூகத்தை, ஏன்… மொத்த மனிதகுலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால், திருமண வயதில் இருக்கும் இளம்பெண்கள், தனக்கு எப்படிப்பட்ட கொடுமைக்கார மாமியார் வாய்ப்பாரோ என்ற அச்சத்துடன் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருப்பதை சர்வ சாதாரணமாக எங்கும் காணலாம். உலகளாவிய இந்த பிரச்சனையைக் கையிலெடுத்திருப்பதோடு, இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு நல்ல கான்செப்டை கதைமுடிச்சாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் பிரபல கிரிக்கெட் வீர்ர் எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனிக்கு நமது பாராட்டுகள்.
இந்த கான்செப்டை அழகான கதையாக வளர்த்தெடுத்து, அருமையான திரைக்கதை அமைத்து, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. எல்லா குடும்பங்களிலும் உள்ள ஒரு பிரச்சனையை இனிமையான காதல் கதையாகவும், சுவாரஸ்யமான குடும்ப படமாகவும், ஜாலியான அனுபவமாகவும் பார்வையாளர்களுக்குக் கொடுத்ததில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
விஸ்வஜித்தின் ஒளிப்பதிவும், இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
‘எல்.ஜி.எம்’ – ஏற்கெனவே சொன்னபடி, குடும்பப் பாங்கான ரொமாண்டிக் காமெடிப் படம்; அனைத்துத் தரப்பினரும் ஜாலியாகப் போய் பார்த்து ரசிக்கலாம்!