“கோவை படிப்பினை: இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேயே கிள்ளியெறிவது முதல் கடமை!”

கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு போலீசின் ஆசியுடன் பகிரங்கமாகவே வெறியாட்டம் போட்டிருக்கிறது, இந்து முன்னணி. கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் கடைகளையும் பேருந்துகளையும் தாக்கி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த வெறியாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, எண்ணற்ற இரு சக்கர வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. திருப்பூரில் கல்வீச்சைக் கண்டு பதறி பேருந்திலிருந்து இறங்கிய ஒரு பெண்மணியின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரணமடைந்திருக்கிறார்.

இந்து முன்னணியின் பொதுச் செயலாளரான காடேஸ்வரா சுப்பிரமணியன், சசிகுமாரின் மரணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 23 அன்று தமிழகம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, “கொலைகாரர்களை காவல்துறை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், சசிகுமாரின் உடற்கூறாய்வை உடனடியாக முடித்து சவத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யாமல், இந்து வெறியாட்டத்துக்கான அணிதிரட்டல் முழுமையாக நடக்கும்வரை தாமதப்படுத்தி, இப்பாசிசக் கும்பல் வன்முறை வெறியாட்டங்களை நடத்த தொடக்கம் முதல் இறுதிவரை உறுதுணையாக இருந்துள்ளது, கோவை போலீசு.

தொழில் நகரமான கோவையில் தொழிலாளர்களும், அடிப்படைப் பிரச்சனைகளுக்காக சாமானிய மக்களும் போராட்டம் நடத்தும்போது, அவற்றை ஒடுக்கி, போராடுபவர்களைச் சிறையில் அடைக்கும் போலீசு, கற்கள், சோடாபாட்டில்கள், பெட்ரோல் குண்டுகள், உருட்டுக் கட்டைகளுடன் தயாரிப்போடு வந்து இந்த ரவுடித்தனங்களை இந்து முன்னணி நடத்துவதற்கு உறுதுணையாக நின்றது.

ஆணவக் கொலை என்றால் சவ ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்து அவசரமாக சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல கட்டாயப்படுத்தும் போலீசு, தாழ்த்தப்பட்டோரின் இறுதி ஊர்வலத்தை பொதுப்பாதை வழியாகக் கொண்டு செல்ல அனுமதிக்காததை எதிர்த்துப் போராடுவோரை ஒடுக்கி சவத்தை தானே அடக்கம் செய்யும் போலீசு, இந்துவெறி குண்டர்கள் துடியலூர் வரை 18 கி.மீ. தொலைவுக்கு சவ ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது.

வேறு எந்த ஓட்டுக் கட்சிக்காரர்களுக்கும் இப்படி சவ ஊர்வலம் நடத்த அனுமதிக்காத போலீசு, கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட குண்டர்களுடன் பிணத்தை வைத்துக்கொண்டு இந்துவெறி பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த தாராள அனுமதியளித்தது.

1998 கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அந்நகரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இந்து வெறியர்கள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டபோது, அதற்கு உறுதுணையாக இருந்ததைப் போலவே, இப்போதும் போலீசு துணை நின்றுள்ளது.

துடியலூர் மயானத்துக்கு வரும்வரை நூற்றுக்கணக்கான கடைகளைத் தாக்கிச் சூறையாடி, வாகனங்களை அடித்து நொறுக்கி, கண்ணில்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்தின் மீதும் கல் எறிந்து வெறியாட்டம் போட்டது, இந்து முன்னணி. போலீசின் முன்னிலையிலேயே துடியலூரில் மட்டும் ஏறத்தாழ 20 கடைகளைச் சூறையாடி 6 கடைகளுக்கு தீ வைத்தது.

இருப்பினும், தங்களது தலைவர் கொல்லப்பட்டதற்கு ஊர்வலம் நடத்தி இப்படி தாக்குகிறார்கள் என்றால் அவர்களின் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கக்கூட முன்வராமல் ஊடகங்கள் பூசி மெழுகின.

முஸ்லீம் ஒருவரின் செல்போன் கடையில் இந்துவெறி குண்டர் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் சிக்கி வெளிவந்து நாறியபோதிலும், இதை மூடிமறைத்து இந்து முன்னணி போர்வையில் சமூகவிரோத கும்பல் என தலைப்பிட்டு நியாயப்படுத்துகிறது தமிழ் இந்து.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவோர் தமது கட்சிக்குள்ளேயே வெட்டு குத்துகளில் இறங்குவது அன்றாடச் செய்தியாகியுள்ளது. ரியல் எஸ்டேட், கந்துவட்டி, சினிமா, கல்லூரிகள், காண்டிராக்ட், கட்டப் பஞ்சாயத்து போன்ற பணம் கொழிக்கும் தொழில்களைச் செய்வோராக அனைத்து ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களும் சீரழிந்துள்ள நிலையில், பல்லாயிரம் கோடி புழங்கும் இத்தகைய தொழில்களில் ஏற்படும் மோதல்கள் படுகொலைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் அரவிந்த் ரெட்டியின் கொலைக்குக் காரணம் பணம் மற்றும் பெண் விவகாரம் என்றும், பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய்கடை முருகனின் கொலைக்குக் காரணம் நிலத் தகராறு என்றும் அம்பலமானது. சென்னை கோயம்பேட்டில் கந்துவட்டித் தொழில் நடத்திவந்த விட்டல் என்ற பா.ஜ.க. பிரமுகர், கடன் வாங்கியவரது வீட்டுப் பெண்களை வேசிகள் என்று ஆபாசமாகத் திட்டியதால் கடந்த 2013 கொல்லப்பட்டார். ஓசூரில் கடந்த செப்.19 அன்று விசுவ இந்து பரிசத்தின் மாவட்டச் செயலாளர் சூரி வெட்டிக் கொல்லப்பட்டதற்கு கட்டப் பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் தகராறு என்று போலீசே கூறுகிறது.

கொல்லப்பட்ட சசிக்குமார் என்பவரும் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து மற்றும் விநாயகர் ஊர்வலத்துக்கான களிமண் பொம்மைகளை வைத்து, அதற்கான வசூல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற ‘தொழில்’களையும் செய்து வந்தவர்தான்.

மற்றைய ஓட்டுக் கட்சிகளைச் சேர்ந்த கிரிமினல்கள் வெட்டிச் சாய்க்கப்படும்பொழுது, அவை வெறும் முன்விரோதக் கொலைச் சம்பவங்களாகப் பதிவாகி மறைந்து விடுகின்றன. ஆனால், இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த கிரிமினல்கள் கொல்லப்படும்போதெல்லாம், தமிழகத்தில் இந்துத்துவ தலைவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், கொல்லப்பட்டவர்கள் நாட்டுக்காக உழைத்த மாபெரும் தியாகிகளைப் போலவும், இந்து சமூகத்தைப் பாதுகாக்க வந்த மாமனிதரைப் போலவும் சித்தரிப்பதைத் திட்டமிட்டே இந்துத்துவ பரிவாரங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதன் மூலம் முஸ்லிம்கள் மீது அபாண்டமான சந்தேகம், பழிபோட்டு மதவெறிக் கலவரத்தை அரங்கேற்றி, இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தி தமிழகத்தில் காலூன்றுவது என்ற திட்டத்துடன் இந்துவெறி கும்பல் இயங்கி வருகிறது.

தற்போதைய வன்முறை வெறியாட்டங்களில் முஸ்லிம் கடைகள் மட்டுமின்றி, ஏராளமான இந்து வியாபாரிகளின் கடைகளையும் தாக்கி இந்துவெறி குண்டர்கள் சூறையாடியுள்ளனர். இப்பாசிச கும்பலின் நோக்கம் சிறுபான்மையினரான முஸ்லிம்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பது மட்டுமல்ல. பயங்கரவாதத்தை ஏவி ஒட்டுமொத்த சமூகத்தையும் பீதியில் உறைய வைப்பதுதான் என்பதை இந்த வெறியாட்டங்கள் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், எத்தகையதொரு அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேயே கிள்ளியெறியும் வகையிலான போராட்டங்களைக் களத்திலே தொடுப்பதும், இக்கும்பலின் கோயபல்சு பிரச்சாரத்துக்குப் பக்கமேளம் வாசிக்கும் ஊடகங்களையும், துணைநிற்கும் அம்மா போலீசையும் விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிப்பதுமே இன்று தமிழக மக்களின் முன்னுள்ள முக்கிய கடமையாக உள்ளது.

–  குமார்

Courtesy: vinavu.com