“பாஜகவின் தேர்தல் வெற்றி நாட்டின் அபாயத்துக்கு அறிகுறி”: இடதுசாரிகள் கருத்து
உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கான அறிகுறி என்று இடதுசாரிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய அபாயத்துக்கான அறிகுறியாகும்.
நாட்டில் மதத் துவேஷத்தை தூண்டும், அழிவை ஏற்படுத்தும் ஹிந்துத்துவ அரசியலை இந்த வெற்றி மேன்மேலும் ஊக்கப்படுத்தும். மத உணர்வைப் பயன்படுத்தியே பாஜக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
எனவே, மதவாத சக்திகளால் தேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இடதுசாரிக் கட்சிகளும், பிற மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கூறுகையில், ’’இந்தத் தேர்தல் முடிவுகள் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர், மதவெறித் தாக்குதல் நிகழ்த்துவோரை வீழ்த்துவதற்காக இந்த சக்திகள் ஒன்றுபட வேண்டும்.
உத்தரப் பிரதேச மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, அதனால் பாஜக வெற்றி பெற்றுள்ளதன் மூலம், தேர்தல் முறையின் மாண்பை பாஜக குலைத்துள்ளது” என்றார் அவர்.